ரஜினியுடன் இணைவது எப்போது? இயக்குநர் ராஜமெளலி பதில்!

அவரை வைத்துப் படம் இயக்க எல்லா இயக்குநர்களுக்கும் கனவு உண்டு. நானும் அதில் விதிவிலக்கு அல்ல.
ரஜினியுடன் இணைவது எப்போது? இயக்குநர் ராஜமெளலி பதில்!

சரியான கதை அமைந்தால் ரஜினியுடன் இணைந்து படம் பண்ணுவேன் என இயக்குநர் ராஜமெளலி கூறியுள்ளார்.

பாகுபலி 2 படம் மெகா ஹிட். இந்திய சினிமாவின் நெ.1 இயக்குநர் ஆகிவிட்டார் இயக்குநர் ராஜமெளலி. அவர் ரஜினியை வைத்து படம் இயக்கினால் எப்படி இருக்கும் என்றொரு பொறியை முதலில் தொடங்கிவைத்தார் பிரேமம் புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் இதுகுறித்து கூறியதாவது:

இயக்குநர் ராஜமெளலி, ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவார் என நம்புகிறேன். அப்படி நடந்தால், அது உலக அளவிலான அவதார் பட வசூல் இரண்டாம் இடத்துக்குச் சென்றுவிடும் என்று கூறியுள்ளார். 

இயக்குநர் ராஜமெளலியும் இதற்கு முன்பு தமிழில் படம் இயக்குவது குறித்து கூறியிருந்தார். தான் தமிழில் படம் இயக்குவதாக இருந்தால் அது ரஜினியுடன்தான். கையில் கதை எதுவும் இல்லாவிட்டாலும் அவருடன் பணிபுரியவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் என்று கூறியிருந்தார்.

பாகுபலி படம் பார்த்த ரஜினி, ராஜமெளலிக்கு வாழ்த்து கூறினார். அதற்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ராஜமெளலியும் பதில் அளித்தார். இதையடுத்து ரஜினி - ராஜமெளலி இடையேயான ட்டணி வருங்காலத்தில் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் பிசிசிக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து இயக்குநர் ராஜமெளலி கூறியதாவது:

இந்தியத் திரையுலகில் ரஜினி மிகப்பெரிய நட்சத்திரம். அவர் தன்னடக்கத்தின் அடையாளமாக இருப்பவர். அவரை வைத்துப் படம் இயக்க எல்லா இயக்குநர்களுக்கும் கனவு உண்டு. நானும் அதில் விதிவிலக்கு அல்ல. ஆனால் கதை இந்த கதாநாயகனுடன் பணிபுரியவேண்டும் என்பதாக என்னை இழுத்துச்செல்லவேண்டும். கதையின்படியே கதாநாயகனை நான் தேர்வு செய்கிறேன். அவருக்கு ஏற்ற கதை இருந்தால், அவருடன் படம் பண்ணவேண்டும் என்று அது என்னை ஊக்கப்படுத்தினால் பிறகு நிச்சயமாக அவருடன் இணைந்து படம் பண்ணுவேன். அப்படி நடந்தால் இந்த உலகின் சந்தோஷமான மனிதனாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com