பாலிவுட்டில் பெருகி வரும் ‘பயோபிக்’ மோகம் கோலிவுட்டில் கொஞ்சமும் இல்லை அது ஏன்?

இந்திய திரைப்பட உலகில் இப்போது ‘பயோ பிக்’ மோகம் அதிகரித்திருக்கிறது. பயோபிக் என்றால் வாழ்க்கை கதை என்று பொருள். பிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் போது அது பயோபிக் ஆகிறது.
பாலிவுட்டில் பெருகி வரும் ‘பயோபிக்’ மோகம் கோலிவுட்டில் கொஞ்சமும் இல்லை அது ஏன்?

இந்திய திரைப்பட உலகில் இப்போது ‘பயோ பிக்’ மோகம் அதிகரித்திருக்கிறது. பயோபிக் என்றால் வாழ்க்கை கதை என்று பொருள். பிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் போது அது பயோபிக் ஆகிறது. சமீபத்தில் இந்தியாவெங்கும் பட்டையைக் கிளப்பிய அமீர்கானின் ‘டங்கல்’ ஒரு பயோபிக் வகைத் திரைப்படமே. இந்தியா மட்டுமல்லாமல் இப்போது அது சீனாவிலும் வெளியிடப்பட்டு வசூலைக் குவிக்கிறது. டங்கல் திரைப்படம் முன்னால் மல்யுத்த வீரரும், மல்யுத்த பயிற்சியளிப்பவருமான ‘மகாவீர் சிங்க் போகத்’ மற்றும் அவரது இரு குமாரிகளான ‘கீதா போகத், பபிதா போகத்’ இருவரின் வாழ்க்கை சித்திரம். இந்த இரு பெண்களும் காமன்வெல்த் போட்டிகளில் மல்யுத்தப் பிரிவில் அடுத்தடுத்து தங்கம் வென்றவர்கள். எனவே அவர்களது வாழ்க்கைச் சித்திரம் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்குச் சென்று குவிந்தனர்.

இதே வரிசையில் தற்போது தெலுங்கில் பிரபல தென்னிந்திய நடிகையும், நடிகையர் திலகம் எனக் கொண்டாடப் பட்டவருமான சாவித்ரியின் வாழ்க்கையைத் தழுவி ‘மகாநதி’ என்றொரு படம் எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இது சாவித்ரியின் வாழ்க்கையை, அவரது திரையுலகப் பங்களிப்பை, அவரது வீழ்ச்சியைப் பற்றி இன்றைய ரசிகர்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம். இதில் சாவித்ரியாக நடிகை கீர்த்தி சுரேஷும், ஜெமினியாக துல்ஹர் சல்மானும் நடிக்கவிருப்பதாக செய்திகள் உலவுகின்றன.

இது தவிர தெலுங்கு சுப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 151 வது திரைப்படமாக அமையவிருப்பதும் ஒரு பயோபிக் தானாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆந்திரா சார்பில் கர்ஜித்த  ’உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ என்பவரது வாழ்க்கை சிரஞ்சீவி நடிப்பில் திரைப்படமாகவிருக்கிறது என்கிறார்கள். டோலிவுட்டில் அன்னமாச்சார்யா, ராமதாஸ், போன்ற திரைப்படங்கள் பயோபிக் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படங்கள் எனலாம். பாலிவுட்டிலும் ‘டங்கல்’ திரைப்படத்துக்கு முன்பே ‘சாம்ராட் அசோகா, ஜோதா அக்பர், பாஜிராவ் மஸ்தானி’ எனப் பல பயோபிக்குகள் வந்ததுண்டு. இப்போதும் அங்கே தயாரிப்பில் இருக்கும் பயோபிக் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமே!

தற்போது பாலிவுட்டில் தயாரிப்பில் இருக்கும் பயோபிக்குகள் மொத்தம் எத்தனை தெரியுமா?

பத்மாவதி

சித்தூர் ராணி பத்மினியின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம். படம் தயாரிப்பில் இருக்கும் போதே எண்ணற்ற தடங்கல்கள். சஞ்சய் லீலா பஞ்சாலி தங்களது பெருமைக்குரிய ராஜபுத்திர ராணியான பத்மினியின் வாழ்க்கை கதையைப் பொய்யாகத் திரிக்கப் பட்ட சங்கதிகளால் நிரப்பி மக்களிடையே அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கிறார் என ராஜபுத்திர கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று இந்த திரைப்படத்தை முடிக்க விடுவேனா பார் என தொடர்ந்து படப்பிடிப்புகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. என்ன தடை வரினும் 2017 நவம்பரில் இப்படம் வெளியாகும் எஅன் உறுதியாகக் கூறியுள்ளார் பஞ்சாலி. 

டாடி

பிரபல மும்பை தாதாவாக இருந்த தாவூத் இப்ராஹிமின் எதிரியும் இன்னொரு தாதாவுமான அருண் காவ்லியின் வாழ்க்கைச் சித்திரம் டாடி என்ற பெயரில் அஷிம் அலுவாலியாவால் படமாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. தாவூதின் ட் கம்பெனிக்கும் அருண் குழுவுக்கும் இடையில் மும்பையில் நடைபெற்ற பயங்கர மோதல்களின் அடிப்படையில் இப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

பெயரிடப்படாத சஞ்சை தத் வாழ்க்கை கதை

பாலிவுட் பாட்ஷா சஞ்சய் தத் வாழ்க்கையைத் தழுவி ரன்பீர் கபூர் சஞ்சய் தத் ஆக நடிக்க ராஜ்குமார் ஹிரானி ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப் படவில்லை.

பேட் மேன்

இந்திய அரசாங்கத்துக்கு ஏழை எளிய பெண்களின் கஷ்டம் தீர்க்கும் நோக்கில் தரமான மலிவு விலை நாப்கின்களை உற்பத்தி செய்து தரும் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை சித்திரம் தேசிய விருது பெற்ற நடிகரான அக்‌ஷய் குமார் நடிப்பில் ‘பேட்மேன்’ என்ற பெயரில் திரைப்படமாகிக் கொண்டிருக்கிறது.

ஹஷீனா- தி குயின் ஆஃப் மும்பை

தாவூத் இப்ராஹிமின் தங்கையும், பெண் தாதாவுமான ஹஷீனாவின் வாழ்வைத் தழுவி எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு ஹஷீனா- தி குயின் அஃப் மும்பை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெயரிடப்படாத கல்பனா சாவ்லா வாழ்க்கை கதை

இது தவிர பிரியங்கா சோப்ரா நடிப்பில் விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவின் வாழ்க்க்கை கதையும் படமாகிக் கொண்டிருக்கிறது. பிரியங்கா சோப்ரா முன்பே குத்துச் சண்டை வீரங்கனையான மேரிகோம் வாழ்க்கை கதையில் மேரிகோமாக களமிறங்கி பட்டையைக் கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்க விசயம்.

இவையெல்லாம் பாலிவுட்டில் தயாரிப்பில் இருக்கும் பயோபிக்குகள்... ஆனால் பயோபிக் விசயத்தில் பாலிவுட்டில் முன்னரே வெளிவந்து சக்கைப் போடு போட்ட பல திரைப்படங்களும் பயோபிக் வகை தான். உதாரணத்திற்கு மஞ்சி, எம்.எஸ். டோனி, டர்ட்டி பிக்ஸர் இப்படிச் சில...

தமிழிலும் கூட பாரதி, பெரியார், கர்ம வீரர் காமராஜர்’ உள்ளிட்ட சில பயோபிக் திரைப்படங்கள் முன்னர் வெளிவந்துள்ளன. ஆனால் பாலிவுட்டோடு ஒப்பிடுகையில் அவை பெரு வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. தமிழிலும் உலகமே போற்றத் தக்க பின்பற்றத் தக்க பிரபலங்களும், மக்களால் அறியப்படாத  சாதனையாளர்களும் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள திரைப்படங்களைப் பயன்படுத்தலாமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com