சங்கமித்ரா பல சாதனைகளைப் படைக்கும்: தேனாண்டாள் பிலிம்ஸ்

தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவில் சங்கமித்ரா படம் நிகழ்த்தக்கூடிய பல சாதனைகளில் ஒன்றாக...
சங்கமித்ரா பல சாதனைகளைப் படைக்கும்: தேனாண்டாள் பிலிம்ஸ்

சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் "சங்கமித்ரா'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்துக்கு இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பிரதான கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரலாற்றுப் பின்னணி கதை என்பதால், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் அனைவருக்கும் குதிரை ஓட்டும் பயிற்சி, வாள் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. "24' படத்துக்காக தேசிய விருது வென்ற திரு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் உருவாகவுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் மே மாதம் திரைப்பட விழா நடைபெறும். இதில் பல்வேறு நாடுகளின் சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டு சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

சங்கமித்ரா-வின் தொடக்க விழா கேன்ஸ் படவிழாவில் நடைபெறவுள்ளது. 

கேன்ஸ் படவிழா மே 17 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழாவின் விளம்பரதார்களில் ஒன்று, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். இதையடுத்து கேன்ஸ் தொடக்க விழாவின்போது சங்கமித்ரா படத்தின் தொடக்க விழாவையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளார்கள். 

மே 18 இரவு அன்று நடைபெறவுள்ள தொடக்கவிழாவில் பிரபலங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்படவுள்ளது. சங்கமித்ரா-வின் தொடக்கவிழாவுக்கு வருகை தரும் ஏ.ஆர். ரஹ்மான், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கனவுப் படமான சங்கமித்ராவில் பணிபுரிவதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். கேன்ஸில் படக்குழுவினரோடு இணையக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். 

தேனாண்டாள் பிலிம்ஸைச் சேர்ந்த நாராயணன் ராமசாமி இதுபற்றிக் கூறியதாவது: இது ஒரு கனவு வரலாற்றுப் படம். எங்களுக்கு பெருமை தரக்கூடிய படைப்பு. கேன்ஸில் படத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவில் சங்கமித்ரா படம் நிகழ்த்தக்கூடிய பல சாதனைகளில் ஒன்றாக இது இருக்கும் என்றார். 

ஆகஸ்ட் முதல் சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com