பாகுபலி சிவகாமி கேரக்டரை ஸ்ரீதேவி மட்டுமல்ல ரம்யாகிருஷ்ணனும் ஆரம்பத்தில் மறுத்திருக்கிறார்? ஏன் தெரியுமா?

நீங்கள் ஒரே ஒரு முறை உங்களது போர்ஷன் கதையைக் கேளுங்கள், அதற்குப் பின்னும் இந்தப் படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நாங்கள் உங்களை வற்புறுத்தவில்லை.
பாகுபலி சிவகாமி கேரக்டரை ஸ்ரீதேவி மட்டுமல்ல ரம்யாகிருஷ்ணனும் ஆரம்பத்தில் மறுத்திருக்கிறார்? ஏன் தெரியுமா?

பாகுபலி திரைப்படத்தில் பாகுபலி, தேவாசேனா கதாபாத்திரங்களுக்கு ஈடாக மட்டுமல்ல அதையும் தாண்டி முதல் பாகத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு பிரதானமாக நின்றது ராஜமாதாவான சிவகாமி கதாபாத்திரமே! ஏனெனில் அந்தக் கதாபாத்திரத்துக்கு தன் குரலாலும், மிடுக்கான பார்வை மற்றும் உடல் மொழியாலும் அத்தனை நியாயம் செய்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணனின் மொத்த திரையுலக வாழ்விலும் அவரால் மட்டுமல்ல அவரது ரசிகர்களாலும் மறக்க முடியாத கதாபாத்திரமாக ராஜமாதா சிவகாமி தேவி இப்போது மனதில் நின்று விட்டார். ஆனால் இந்தக் கதாபாத்திரத்துக்காக இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி முதலில் அணுகியது நடிகை ஸ்ரீதேவியைத் தான். அவர் கேட்ட பெரும் சம்பளம் தங்களுக்கு கட்டுப்படியாகாது என இயக்குனர் தரப்பு பின்வாங்க ஸ்ரீதேவியை அடுத்து ஹேமா மாலினியை அணுகலாமா என யோசித்த படக்குழுவினர் இறுதியில் ரம்யா கிருஷ்ணனை கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்தனர். 

ரம்யா முன்னரே அம்மன் உள்ளிட்ட சில பக்திப் படங்களில் அம்மனாக வந்து ரசிகர்களைப் பிரமிக்க வைத்தவர் என்பதால் ஒரு வேளை அவர்கள் அப்படி முடிவெடுத்திருக்கலாம். ஆனால் முதல் முறை ரம்யா கிருஷ்ணனை பாகுபலி படக்குழுவினர் அணுகிய போது ரம்யாவும் இந்த வாய்ப்பை மறுக்கத்தான் செய்திருக்கிறார். காரணம் படக்குழுவினர் கேட்ட பல்க் ஆன கால்ஷீட். இத்தனை அதிக நாட்களை ஒரெ படத்துக்கு அளித்து விட்டால் பிறகு வேறு திரைப்படங்களில் எப்படி தலை காட்டுவது. மூன்று வருடங்களுக்கு வேறு திரைப்படங்களில் காண முடியவில்லை எனில் ரசிகர்கள் மறந்து விடுவார்கள். அதோடு மட்டுமல்ல தன்னுடைய சினிமா வாய்ப்புகளும் குறைந்து விடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக சொந்தத் தயாரிப்பில் தமிழில் மெகா சீரியலில் வேறு நடித்துக் கொண்டிருப்பதால் இதெல்லாம் சரிப்படாது என ரம்யா கிருஷ்ணன் தனக்கு வந்த சிவகாமி கதாபாத்திர வாய்ப்பை மறுத்திருக்கிறார். முதல் முறை பின்வாங்கியது பாகுபலி படக்குழு.

அடுத்த முறை இயக்குனரே நேரடியாக ரம்யா கிருஷ்ணனுடன் தொலைபேசி... நீங்கள் ஒரே ஒரு முறை உங்களது போர்ஷன் கதையைக் கேளுங்கள், அதற்குப் பின்னும் இந்தப் படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நாங்கள் உங்களை வற்புறுத்தவில்லை. என்று கூறி இருக்கிறார். பின்னர் இயக்குனரின் கதை சொல்லலில் சிவகாமி கதாபாத்திரத்தின் வலிமை கண்டு ரம்யா கிருஷ்ணன் பிரமித்துப் போய் உடனடியாக தனது கால்ஷீட் நாட்களை ஒருங்கிணைத்து மிக அதிக அளவிலான நாட்களை பாகுபலிக்காக ஒதுக்கிக் கொடுத்து பாகுபலி1& 2 இரண்டு பாகங்களிலும் நடித்து முடித்தார். இப்போது படத்தின் பிரமாண்ட வெற்றியின் போது அவர் தனது நெருங்கிய தோழமைகளிடம் பகிர்ந்து கொண்ட செய்தியென ஒன்று உலா வருகிறது. ஒரு வேளை கதை கேட்காமலே தான் பாகுபலி சிவகாமி கதாபாத்திரத்தை மறுத்திருந்தால் எதிர்காலத்தில் அந்த மறுப்பினால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருப்பேன். எனக் கூறிக் கொண்டிருக்கிறாராம். அது உண்மையும் கூட!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com