பாகுபலி முன்மாதிரித் திரைப்படமே... ஆனால் நினைவிருக்கட்டும் அந்த முன் மாதிரி உருவாக்கப்பட்டது கிராபிக்ஸ் குதிரைகளால்: கமல்!

ஹாலிவுட்டுடன் போட்டியிடும் அளவுக்கு நாம் வளர்ந்து விட்டோம் என அவர்கள் சொன்னால், நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுண்டு; உங்கள் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்து சற்று நிறுத்துங்கள்
பாகுபலி முன்மாதிரித் திரைப்படமே... ஆனால் நினைவிருக்கட்டும் அந்த முன் மாதிரி உருவாக்கப்பட்டது கிராபிக்ஸ் குதிரைகளால்: கமல்!

இன்று கமல் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியை காண நேர்ந்தது. அதில் கடைசியாக பிரமாண்ட வெற்றிப்படமான பாகுபலி குறித்து தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். இன்று இந்தியா முழுக்கவே பாகுபலி குறித்து பேச்சிருக்கிறது. 

படம் வெகு பிரமாண்டமானது, அதன் வசூலோ அதைக் காட்டிலும் வெகு பிரமாண்டமானது. அதற்காக அவர்கள் மிக மிக மெனக்கெட்டு கடுமையாக உழைத்துள்ளனர். ஆனால் அதற்காக ஹாலிவுட்டுடன் போட்டியிடும் அளவுக்கு நாம் வளர்ந்து விட்டோம் என அவர்கள் சொன்னால், நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுண்டு; உங்கள் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்து சற்று நிறுத்துங்கள்... ஏனெனில் இவை கிராபிக்ஸ் குதிரைகள் மட்டுமே! என்பேன்.

பாகுபலி தொழில்நுட்ப தரத்திலும் பிற திரைப்படங்களைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. நம்முடைய உயர்ந்த கலாச்சாரத்தை பிரதிபலிப்பதோடு, திரையில் சொல்வதற்கு நம்மிடையே நிறையக் கதைகள் உண்டு என்பதையும் பாகுபலி நிரூபித்துள்ளது. ஆனால் 2000 வருடங்களாலான கலாச்சாரம் நம்முடையது என்று அவர்கள் சொன்னால், இடையில் தலையிட்டு ஒரு விசயத்தைச் சொல்ல நான் விரும்புகிறேன். நாம் 2000 வருடப் பழமையானவர்கள் அல்ல! நம்முடையது 70 வருட பழமையே! சந்திர குப்த மெளரியர் அல்லது அசோகர் காலத்துக்கெல்லாம் நாம் திரும்பிச் செல்ல வேண்டாம். அவர்கள் நமது மூதாதையர்கள் அல்ல.. இன்றைய நவீன வாழ்வில் நம்மால் அவர்களைப் பின்பற்றவோ அல்லது அவர்களை விளங்கிக் கொள்ளவோ முடியாது. ஆனால் நாம் அப்படிப் பட்ட திரைப்படங்கள் வழியாக இறந்த காலம் மற்றும் நிகழ்காலம் இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்வில் நழுவிக் கொண்டும், சறுக்கிக் கொண்டும் இயல்பற்ற ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது தான் இந்தியாவின் குழப்பம்.

இந்த நிலை சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலுமே நாம் அப்படித்தான் இருக்கிறோம். இதில் உண்மை எதுவென்றால்; அவ்வளவு தான் முடிந்து விட்டது, என்று நாம் எண்ணும் போது தான் உண்மையான ஆரம்பமே நிகழத் தொடங்கிறது.” 

இவ்விதமாகக் கமல் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com