

நெடுவாசல்: சமூக ஆர்வலர், திரைப்பட இயக்குநர் பங்கேற்பு
By DIN | Published on : 22nd May 2017 12:16 PM | அ+அ அ- |
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசலில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ், திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம் ஆகியோர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, நெடுவாசல் மக்கள் ஏப். 12-இல் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர்.
39-வது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் பியூஷ்மனுஸ் பேசியது:
நெடுவாசல் பகுதியின் பசுமையும், இப்பகுதி மக்கள் மரம் வளர்ப்பதில் கொண்டுள்ள ஆர்வமும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இங்கு போராடிவரும் மக்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையளிக்கிறது. இத் திட்டம் ஒட்டுமொத்த விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்பதால் அனைவரும் ஒன்றிணைந்து போராடி திட்டத்தை முடக்க வேண்டும் என்றார்.
இயக்குநர் மு. களஞ்சியம் பேசியது: வளங்களை அழிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தை அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. வளங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு எந்த வளர்ச்சியை அரசு காட்டப்போகிறது? தங்களது வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளவே மக்கள் போராடி வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். திட்டம் ரத்தாகும் வரை மக்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டார்கள் என்றார்.