சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்குப் பிடிவாரண்ட் ஏன்? பின்னணி என்ன?

ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டபோது, நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மன உளைச்சல்களை...
சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்குப் பிடிவாரண்ட் ஏன்? பின்னணி என்ன?

பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், ஸ்ரீபிரியா, விவேக், விஜயகுமார், இயக்குனர் சேரன், அருண் விஜய் ஆகிய 8 நடிகர்களுக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 8 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காரணத்தால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவை உதகை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உதகையைச் சேர்ந்த பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று வெளியான இந்தச் செய்தியால் என்ன காரணத்துக்காக இந்த உத்தரவு என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.   

2009ம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி, விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டதாகச் செய்தி ஒன்று வெளியானது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார்கள். அதுதான் இன்று இந்த நிலைமைக்கு கொண்டுவர வைத்துள்ளது. 

அந்தக் கூட்டத்தில் நடிகர் சூர்யா பேசியதாவது: பத்திரிகைகள் வழிகாட்டியாக, ஒரு ஆசிரியர் செய்ய வேண்டிய பணியைச் செய்ய வேண்டும். நிறைய பத்திரிகைகள் நான் கேட்காமலேயே என் வீட்டுக்கு வருகின்றன. அவற்றை நானே பலமுறை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளேன், சின்ன வயதுக்காரர்கள் பார்க்கக்கூடாது என்பதால். பல தடவை இதுபோல நடந்துள்ளது. நானும் என் குடும்பத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். வயிற்றைக் கழுவுவதற்காக இதுபோன்ற அவதூறுகளை எழுதுகிறார்கள். நடிகர் சங்கம் சார்பில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கான செலவை நான் ஏற்கிறேன். அந்த குழுவைக் கொண்டு அவதூறு எழுதுபவர்களை நசுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியொரு கூட்டம் நடக்கக் கூடாது. அந்த அளவுக்கு நடவடிக்கை இருக்க வேண்டும் என்று பேசினார். 

சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் பேச்சுக்குப் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். இதையடுத்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

சமுதாயத்துக்கு வழிகாட்டியாகப் பத்திரிகைகள் இருக்க வேண்டும். ஆதாரமற்ற செய்திகளைப் படங்களுடன் பிரசுரம் செய்ததில், அந்தக் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருமே காயப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிற ஒரு மேடையில் என் கருத்துக்களை நான் பகிர்ந்துகொண்டேன். ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டபோது, நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருகிறேன். மன உளைச்சல்களைச் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் மீடியாவை சேர்ந்த நண்பர்கள்தான் ஆதாரமான செய்திகளை வெளியிட்டு எனக்கு ஆறுதல் அளித்துள்ளனர். 

என்னுடைய பேச்சில், அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய, சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிற, எல்லோருக்கும் ஆசிரியராக இருக்கிற அருமையான தொழில் என்றே பத்திரிகைகளைப் பற்றி சொன்னேன். எல்லாத் துறையிலும் இருப்பதுபோல மீடியாவிலும், ஒரு சிலரின் செயல்பாடுகள் மீட்கமுடியாத பாதிப்பை, இழப்பை தனிப்பட்ட நபர்களுக்கு ஏற்படுத்துகின்றன. அதைக் கண்டிக்கிற உரிமை ஒரு நடிகனாக இல்லாமல், சக மனிதனாகவே எனக்கு இருக்கிறது. அவதூறு செய்திகளைப் பற்றி நான் பேசிய கருத்துக்கள், ஒட்டுமொத்த மீடியாவைப் பற்றி பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. என் மீது அக்கறையுள்ள பத்திரிகை நண்பர்களும் என்னிடம் இது குறித்து பேசினார்கள். பத்திரிகை தொழிலுக்கும், தர்மத்துக்கும் விரோதமாக இருக்கிற ஒரு சிலரைப் பற்றி நான் வெளிப்படுத்திய வருத்தங்கள், ஒட்டுமொத்த பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் சொன்னதாக திரித்துக் கூறப்படுகிறது. 

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை உலகத்தோடு என் குடும்பம் நல்லுறவு பேணி வந்திருக்கிறது என்பதை நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. உண்மைக்கு மாறான அத்தகைய திரிபுகளை உங்கள் கவனத்துக்கு நேரடியாக கொண்டு வரவே இந்த விளக்கம். பத்திரிகை நண்பர்களோடும், மீடியா உலகத்தோடும் எனக்கு இருந்து வரும் ஆரோக்கியமான நல்லுறவை நான் பெரிதும் மதிக்கிறேன். என் கருத்துகள் தவறாக திரிக்கப்படுவதைக் கவனத்துக்குக் கொண்டு வந்த, என் பத்திரிகை நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

இதற்குப் பிறகு உதகையைச் சேர்ந்த பத்திரிகையாளர், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனால் 8 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காரணத்தால் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், ஸ்ரீபிரியா, விவேக், விஜயகுமார், இயக்குனர் சேரன், அருண் விஜய் ஆகிய 8 நடிகர்களுக்கும் உதகை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com