மாம்பழக் கதை சொல்லி கேன்ஸ் திரைவிழாவில் வென்ற முதல் இந்தியக் குறும்படம் All I Want!

மாம்பழத்தை மையமாக வைத்தது ஏன்? என்ற கேள்விக்கு இயக்குனரின் பதில்; இந்தப் படத்தில் மாம்பழத்தை பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றாக ஆக்கியதற்கு காரணம் எனது மாம்பழக் காதலே!
மாம்பழக் கதை சொல்லி கேன்ஸ் திரைவிழாவில் வென்ற முதல் இந்தியக் குறும்படம் All I Want!

தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 70 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் வெனிக மித்ராவின் குறும்படமான All I Want இரண்டு விருதுகளை வென்றுள்ளது. கேன்ஸ் விழாவில் ஜெனரல் ஷோகேஸ் கேட்டகிரியில் ஆடியன்ஸ் சாய்ஸ் விருதை வென்றிருப்பதாக படத்தின் இயக்குனர் வெனிக மித்ரா தெரிவித்துள்ளார். இப்படத்தில் ஒலி அமைப்பு வேலைகளில் பங்கு பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற இந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞரான ரெசூல் பூக்குட்டி, இந்தியாவின் இந்த வெற்றியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 ஆறு கண்டங்களில் இருந்து, 30 நாடுகள் பங்கு பெற்ற இந்த போட்டியில் ஜெனரல் ஷோகேஸ் கேட்டகிரி பிரிவில் மட்டும் 231 குறும்படங்கள் பங்கேற்றன. அவற்றிலிருந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப் பட்டவை வெறும் 6 குறும்படங்கள் மட்டுமே. இந்தியா, கிரீஸ், சீனா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அப்படித் தேர்வான 6 படங்களில் வென்ற முதல் இந்தியக் குறும்படம் எனும் பெருமையை வென்றுள்ளது வெனிக மித்ராவின் ‘All I Want' என ரெசூல் பூக்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

விருது வென்ற குறும்படம் All I Want சொல்லும் கதை மிக எளிமையானது ஆனால் உறுதியானது என்கிறார் படத்தின் இயக்குனர். அப்படியென்ன கதை என்கிறீர்களா? அதாவது சமூகத்தில் ஒரு சாரருக்கு மிக மிக சல்லிசாகத் தெரியக் கூடிய ஒரு விசயம் மற்றொரு சாரருக்கு எப்படி மிக மிகப் பிரயத்தனத்துடன் கூடிய கடினமான விசயமாக மாறி விடுகிறது என்பது தான் இக்கதை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் 5 ஸ்டார் ஹோட்டலில் தினமும் டின்னர் சாப்பிடுவது என்பது 5 இலக்க சம்பளம் வாங்குபவர்களுக்கு போகிற போக்கில் இயல்பாக நடந்து முடிந்து விடுகிற விசயமாக இருக்கலாம், அதுவே ஒரு தினக்கூலியாக ஊதியம் பெறும் நபருக்கு அது எத்தனை கடினமான விசயமாக இருக்குமென்று நினைத்துப் பாருங்கள். இது தான் இந்தக் குறும்படத்தின் கதை. தெருவோரத்தில் வசிக்கும் ஒரு சிறுவன் தனக்குத் தானே சொந்தக் காசில் ஒரு மாம்பழம் வாங்கி உண்ண ஆசைப்படுகிறான். அதற்கான அவனது பிரயத்தனம் மிக்க பயணமே 'All I Want' திரைக்கதையாக விரிகிறது.

மாம்பழத்தை மையமாக வைத்தது ஏன்? என்ற கேள்விக்கு இயக்குனரின் பதில்;

இந்தப் படத்தில் மாம்பழத்தை பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றாக ஆக்கியதற்கு காரணம் எனது மாம்பழக் காதலே! அதோடு நான் ஒருமுறை மும்பையில் எனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்மணிக்கு உதவும் நோக்கில் கொஞ்சம் பணத்தை கொடுத்தேன், இந்தப் பணத்தை வைத்து உன் மகளுக்கு ஏதாவது வாங்கிக் கொள் என்றேன். ஆனால் அவரோ; இந்தப் பணத்தை தருவதற்குப் பதிலாக நீங்கள் என்னிடம் மாம்பழங்களை விலைக்கு வாங்கிக் கொள்ள முடியுமா? என்றார். அவர் அப்படிக் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது; ஏனெனில் மும்பையில் மாம்பழங்கள் மிகவும் மலிவானவை மட்டுமல்ல தேவைக்கு மிக அதிகமாகவே எளிதாகக் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நான். அதையே அவரிடமும் சொன்னேன். அதற்கு அந்தப் பெண்மணி ‘மாம்பழங்கள்’ உங்களுக்கு வேண்டுமானால் எளிதான, மலிவான விசயமாக இருக்கலாம் ஆனால் என் போன்றவர்களுக்கு அல்ல! என்றார். எங்களுக்கிடையிலான இந்த உரையாடலில் விளைந்தது தான் இந்தக் குறும்படம். இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் எனக்கு வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்தக் குறும்படத்தின் பின்னணி இது தான். தெருவோர சிறுவனான 8 வயது  ரத்தன் ஒரு மாம்பழத்தை தானே சொந்தமாக விலைக்கு வாங்கத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் All I Want  கேன்ஸ் விருது பெற்ற குறும்படத்தின் கதை. என்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com