பெண்களைக் கொச்சைப்படுத்திய மூத்த தெலுங்கு நடிகர்: கடும் கண்டனங்களும் விளக்கமும்!

தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகரான அவர் தன் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பேசியிருக்க வேண்டும்...
பெண்களைக் கொச்சைப்படுத்திய மூத்த தெலுங்கு நடிகர்: கடும் கண்டனங்களும் விளக்கமும்!

பெண்கள் படுக்கையில் உபயோகமானவர்கள்!

இந்த வாக்கியத்தை ஒரு நடிகர் மேடையில் பேசியுள்ளார். அது தற்போது தெலுங்குத் திரையுலகில் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நாக சைதன்யா, ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள Rarandoi Veduka Chudham படத்தின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். அப்போது மூத்த தெலுங்கு நடிகரும் 600 படங்களில் நடித்தவருமான  சலபதி ராவிடம் (73) படத்தில் வருகிற மனஅமைதிக்குப் பெண்கள் ஆபத்தானவர்கள் என்கிற வசனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்குப் பதிலளித்த சலபதி ராவ், பெண்கள் ஆபத்தானவர்கள் அல்லர். அவர்கள் படுக்கையில் உபயோகமானவர்கள் என்று பேசினார். 

இதையடுத்து பெண்களைக் கேவலமாகப் பேசிய சலபதி ராவின் கருத்துக்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் நாகார்ஜுனா கூறியதாவது: தனிப்பட்ட முறையிலும் என் படங்களிலும் பெண்களை மதிக்கும்படி நடந்துகொள்பவன் நான். சலபதி ராவின் கருத்தை நான் ஏற்கவில்லை என்றார். நாக சைதன்யாவும் சலபதி ராவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அவ்விழாவில் கலந்துகொண்ட நடிகை ராகுல் ப்ரீத் சிங் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: எனக்கு அவர் சொன்னதன் அர்த்தம் தெரியாது. எனக்கு அர்த்தம் புரிந்திருந்தால் மேடையிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பேன். தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகரான அவர் தன் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பேசியிருக்கவேண்டும். மூத்த நடிகர்களின் கருத்து வெளிப்படும்போது மரியாதை அளிக்கும்விதமாக மெளமாக இருப்பதே என்னைப் போன்ற புதிய நடிகைகளின் வழக்கமாக உள்ளது. ஆனால் இச்சம்பவம் அதுபோன்று இல்லை. இத்தகைய தருணங்களில் எல்லைக்கோடு வகுத்துக்கொண்டு அவர் பேசவேண்டும் என்று கூறியுள்ளார். 

சர்ச்சையில் அகப்பட்டுக்கொண்ட சலபதி ராவின் பதில் என்ன?

நான் தவறாகப் பேசியதாக ஏன் ஊடகங்கள் எண்ணவேண்டும்? மன அமைதிக்குப் பெண்கள் ஆபத்தானவர்கள் என்று மட்டும் சொல்லலாமா? நாம் என்ன பாம்புகளுடனா தூங்குகிறோம்? இல்லை. அதனால்தான் சொன்னேன். பெண்கள் ஆபத்தானவர்கள் அல்லர். அதனால்தான் நாம் அவர்களுடன் இணைந்து தூங்குகிறோம் என்றேன். இதைத் தவறு என ஊடகங்கள் ஏன் எண்ணுகின்றன. தெலுங்கு அறியாத ஊடகங்களும் இச்செய்தியைப் பரப்பிவிட்டன. பெண்களைத் தவறாக நடத்தவில்லை. பெண்களைத் தாயாகவும் சகோதரியாகவும் நாம் எண்ணி மரியாதை அளிக்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com