ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்துப் போராட்டம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் உருவ பொம்மையை எரித்து தமிழர் முன்னேற்றப் படையினர் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்துப் போராட்டம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் உருவ பொம்மையை எரித்து தமிழர் முன்னேற்றப் படையினர் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
கடந்த ஒரு வாரமாக தனது ரசிகர்களை நேரில் சந்தித்து வரும் நடிகர் ரஜினி, அரசியலுக்கு வருவது தொடர்பான சில கருத்துகளைத் தெரிவித்தார்.
இதனால் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி எனக் கூறப்பட்டு வருகிறது. அதேவேளையில் ரஜினி, அரசியலுக்கு வருவதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழர் முன்னேற்றப் படையினர் அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் அமெரிக்கத் தூதரகம் அருகே கதீட்ரல் சாலையில் திங்கள்கிழமை காலை திரண்டனர்.
ரஜினி வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தினர். உடனே அந்த அமைப்பினர், தாங்கள் வைத்திருந்த ரஜினி உருவப் பொம்மையை எரித்து கோஷமிட்டனர். உருவப் பொம்மைக்குள் பட்டாசுகளை வைத்திருந்ததால், அது வெடித்துச் சிதறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பின் தலைவி வீரலட்சுமி, பொதுச் செயலர் கணேஷ், நிர்வாகி ரஞ்சித் உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனர்.
இருவர் சிறையில் அடைப்பு: கைது செய்யப்பட்டதில் 18 பேரை போலீஸார் மாலையில் விடுவித்தனர். அதேநேரத்தில் கணேஷ், ரஞ்சித் ஆகிய இருவர் மீது மட்டும் போலீஸார் நாட்டு வெடிகுண்டு வைத்து உருவப் பொம்மையை வெடிக்கச் செய்ததாக வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

போராட்டத்தின் விளைவாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு உள்ளது. இந்நிலையில் அரசியல் ரீதியான கருத்துகளை ரஜினி கூறத் தொடங்கிய பின்னர், அங்கு கூடுதலாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ரஜினிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டதால், அவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக போயஸ் தோட்ட பகுதிக்கு திங்கள்கிழமை சென்ற அனைவரையும் விசாரித்த பிறகே போலீஸார் அனுமதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com