தனது திரைப் பிரவேசம், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் திருமணம் குறித்து பிரபாஸ்...

இந்தப் படத்துக்காக 4 ஆண்டுகள் அல்ல 7 ஆண்டுகள் உழைக்க நேர்ந்திருந்தாலும் நான் யோசித்திருக்கவே மாட்டேன். இன்று இந்தியா முழுக்க என்னை கொண்டாடுகிறார்கள் என்றால் அந்தப் பெருமை ராஜமெளலிக்கே!
தனது திரைப் பிரவேசம், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் திருமணம் குறித்து பிரபாஸ்...

சிறு வயதில் நடிகனாக வேண்டும் என்ற கனவெல்லாம் எனக்கு இருந்ததில்லை. ஏனெனில் நானொரு கூச்ச சுபாவி. அப்பா தயாரிப்பாளர், பெரியப்பா தெலுங்கில் அந்தக் கால ரெபல் ஸ்டார் (புரட்சி நடிகர்) என குடும்பமே சினிமாவில் இருந்த போதும் எனக்கு சினிமா கனவு அப்போது இல்லை. ஆனால் எனக்கு 18 அல்லது 19 வயது ஆன போது திடீரென்று தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அப்பாவே ஒரு தயாரிப்பாளர் என்பதால் அவரிடம் என் ஆர்வத்தைச் சொன்ன போது என் அப்பா சூர்ய நாராயண ராஜூவும் பெரியப்பாவும் பிரபல தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜுவும் மிகவும் மகிழ்ந்து போனார்கள்.

திரைப் பிரவேஷம்...

இப்படித்தான் 2002 ஆம் வருடம்  ‘ஈஸ்வர்’ தெலுங்குப் படம் மூலமாக நான் சினிமாவுக்கு வந்தேன். அறிமுகமாகி சரியாகப் பத்து வருடங்கள் கழித்து 2012 ல் ராஜமெளலி பாகுபலி திரைப்படம் குறித்து என்னிடம் பேசினார். அன்றிலிருந்து இன்று வரை எனக்கு அது ஆச்சரியமான விசயமே! என்னால் பாகுபலியாக முடியும் என்ற ராஜமெளலியின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற மிகுதியான கவனமே என்னை அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போகச் செய்தது. பிரபாஸ் வேறு பாகுபலி வேறு என்ற எண்ணமே இல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிப் போனேன். நான் மட்டுமல்ல கிட்டத்தட்ட பாகுபலியில் நடித்த அனைவருமே அப்படித்தான் இருந்தார்கள். இந்தப் படத்தில் சிலரது தேவை முதல் பாகத்தில் அதிகமிருந்தது, சிலரது தேவை இரண்டாம் பாகத்தில் அதிகமிருந்தது. எனவே அவர்கள் அந்தந்த காலகட்டத்தில் பாகுபலிக்காக உழைத்து விட்டு வேறு வேறு படங்களிலும் கமிட் ஆகிக் கொள்வது எளிதாக இருந்தது. ஆனால் எனக்கு அப்படியல்ல; பாகுபலியில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்கள் எனக்கு. படத்தின் இரண்டு பாகங்களிலுமே எனக்கு வேலை இருந்தது. இதற்கு நடுவில் வேறு படங்களில் கமிட் ஆனால் நிச்சயமாக கவனம் சிதறும். அது பாகுபலிக்கு தேவையில்லாத தொல்லை எனக் கருதியே நான் இந்த நான்கு ஆண்டுகளில் வேறு படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி...

பாகுபலிக்கு முன்பே ராஜமெளலி இயக்கத்தில் நான்  ‘சத்ரபதி’ தெலுங்குப் படத்தில் நடித்திருக்கிறேன். அப்போதிருந்தே எனக்குத் தெரியும் ராஜமெளலி படமென்றால் எப்படி இருக்கும் என்று... நான் ராஜமெளலியின் மீது வைத்த நம்பிக்கை அப்போதும், இப்போதும் வீணாணதே இல்லை. பொதுவாக தெலுங்கில் தயாரிப்பாளர் வட்டாரங்களில் எப்போதுமே ராஜமெளலி குறித்து ஒரு பொதுவான கமெண்ட் உண்டு. அது என்னவென்றால்? ராஜமெளலி எப்போதுமே  நமது எதிர்பார்ப்பதைக்  காட்டிலும் 10 மடங்கு அதிகமான பெர்பெக்ட்னஸை தனது படங்களில் கொண்டு வரக் கூடியவர் என்பதே. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் அவர். இந்தப் பெருமை போதும் எனக்கு. பாகுபலி போன்ற படங்கள் அரிதான படங்கள்; ஒரு நடிகனுக்கு இப்படியான வாய்ப்புகள் அடிக்கடி கதவைத் தட்டாது. அந்த வகையில் நான் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எனவே இந்தப் படத்துக்காக 4 ஆண்டுகள் அல்ல 7 ஆண்டுகள் உழைக்க நேர்ந்திருந்தாலும் நான் யோசித்திருக்கவே மாட்டேன். இன்று இந்தியா முழுக்க என்னை கொண்டாடுகிறார்கள் என்றால் அந்தப் பெருமை ராஜமெளலிக்கே! 

எனது திறமையை வெளிக்காட்டுவதை விட ராஜமெளலியின் கனவை நனவாக்கவே முயற்சித்தேன்...

பாகுபலியாக நடிக்கும் போது எனக்கு என் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை விட ராஜமெளலியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே மிகுதியாக இருந்தது. ஏனெனில் ராஜமெளலி எனக்கு முன்பே எனக்காக பலமுறை யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பிறகே ஷாட்டுக்குப் போவார். எனவே அவர் எதிர்பார்க்கும் நடிப்பை சரியாக வெளிப்படுத்தினாலே போதும் என்ற உணர்வே எனக்கு அதிகமிருந்தது. அந்தக் கதாபாத்திரத்துக்காக உடல் அளவிலும், மனதளவிலும் நான் தயாரானேன். இதோ இன்று பாகுபலியாக உங்கள் முன் நிற்கிறேன். இப்போது வரை பாக்ஸ் ஆபீஸில் பாகுபலிக்கான கலெக்ஷன் நிதானமான அளவில் முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறது. 

ஒரு நடிகனாக பாகுபலி படத்தால் நான் பெற்றது அதிகம். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வருணிக்க இயலாது. இத்தனைக்கும் அடிப்படை நான் ராஜமெளலியின் மீது வைத்த உறுதியான நம்பிக்கையும் மரியாதையும் தான்!

பாகுபலிக்கு அடுத்து சாஹூ...

இப்போது நான் எனது அடுத்த படமான சாஹூவுக்காக என்னைத் தயார் செய்ய வேண்டும். சாஹூ தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிப் படமாக வெளிவரவிருக்கிறது. பாகுபலி எனது வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தாலும் நான் அதிலிருந்து வெளிவந்து இனி சாஹூவுக்காக என்னைத் தயார் செய்ய வேண்டும். இப்போது நான் அந்த முயற்சியில் தான் இருக்கிறேன். விரைவில் சாஹூ படப்பிடிப்பு தொடங்கி விடும். ஆக்ஸன் த்ரில்லராக தயாராகவிருக்கும் சாஹூ சமகாலப் படம். என்கிறார் பிரபாஸ்.

திருமணம் குறித்து...

தற்போது 37 வயதாகும் பிரபாஸ் அவரது திருமணம் குறித்த கேள்விகளுக்கு மட்டும் எப்போதும் உறுதியான பதில் அளிப்பதில்லை. ஏனெனில் சில பேட்டிகளில் அவருக்கே அதைப் பற்றிய உறுதி இல்லையென்கிறார். இன்னொரு பக்கம் தனது பெண் ரசிகைகளை மனமுடையச் செய்யக் கூடாது என்று தான் பிரபாஸ் இப்படிச் சொல்கிறார் என்றும் ஒரு வதந்தி உலவுகிறது. ஆனால் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பிரபாஸ் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாகி விட்டார் என்பதையே காட்டுகின்றன அவரது பதில்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com