பிரபல நடிகர்கள் தொகுப்பாளரானால், கற்றுக்குட்டி தொகுப்பாளர்களின் ஏக வசன காம்பியரிங்கில் இருந்து  டிவி ரசிகர்களுக்கு விடுதலை கிட்டுமா?!

இவரைப் போலவே இப்போது பெரிய திரைகளில் அதிகம் தலைக்காட்டாத நடிகர்கள் பலரும் இப்படி ஒரு முடிவெடுத்தால் சின்னத்திரைக்கு கணிசமான அனுபவம் வாய்ந்த தரமான தொகுப்பாளர்கள் கிடைக்கக் கூடும்.
பிரபல நடிகர்கள் தொகுப்பாளரானால், கற்றுக்குட்டி தொகுப்பாளர்களின் ஏக வசன காம்பியரிங்கில் இருந்து  டிவி ரசிகர்களுக்கு விடுதலை கிட்டுமா?!

நடிகர்கள் எல்லோருமே தங்கள் வாழ்நாள் முழுதும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருக்க முடியாது தானே! தமிழில் எம்.ஜி,ஆர் மட்டுமே கடைசி வரை ஹீரோவாக மட்டுமே நடித்தவர் என்று நினைவு.  அந்தக் கால சூப்பர் ஹீரோக்களில் சிவாஜி, ஜெமினி எல்லாம் கூட பிற்காலத்தில் 80 களின் நாயகர்களுடன் குணச்சித்திர கதபாத்திரங்களில் நடித்து முடித்தவர்கள் தான். கடைசி வரை நாங்கள் ஹீரோவாக மட்டும் தான் நடிப்போம். வயதான பின்னும் கூட ஹீரோவுக்கு அண்ணனாகவோ, அப்பாவாகவோ சித்தப்பாவாகவோ அல்லது குணச்சித்திர வேடங்களிலோ நாங்கள் நடிக்கவே மாட்டோம் என்று பல நடிகர்களால் சொல்ல முடிவதில்லை. இத்தனைக்கும் அவர்களுக்கும் ஒரு காலத்தில் குறிப்பிடத் தக்க அளவில் கணிசமான ரசிகப் பட்டாளங்கள் இருந்திருப்பார்கள். ஆனாலும் அந்தப் புகழ் மற்றும் பெருமைகளுக்கு  ஆயுள் என்பது குறைவு. 

தெற்கத்திப் பக்கம் நடிகர் கார்த்திக் மற்றும் பிரபு இருவரது புகைப்படங்களையும் மாட்டி வைத்திருக்கும் பல வீடுகளைக் காணும் வாய்ப்பு உங்களுக்கும் கிட்டியிருக்கும். இன்று அதெல்லாம் ஒரு காலம் என்று ஆகி விட்டது. ஒரு காலத்தில் ஹீரோவாக கோலோச்சிய நடிகர்கள் தங்களது 50 வயதுகளின் ஆரம்பத்தில் ஹீரோ வாய்ப்புகளுக்காக காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்து சின்னத்திரை மற்றும் விளம்பரங்களின் பக்கம் திரும்புவதும் கூட புத்திசாலித் தனமான முடிவு தான். 

தமிழில் இப்படி புத்திசாலித்தனமான முடிவெடுத்த நடிகர்கள் எனில் அதில் சத்யராஜுக்குத்  தான் முதலிடம். மனிதர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பிஸியான குணச்சித்திர நடிகராக இருப்பதோடு  ஜவுளிக்கடை, மசாலாப் பொடி விளம்பரங்களிலும் கூட நடித்து தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் அனைத்து வீடுகளிலும் புகுந்து வெளிவந்து கொண்டிருக்கிறார். அவரை அடுத்து பிரபு இவரும் குணச்சித்திர வாய்ப்புகளை ஒப்புக் கொண்டு அவற்றைத் திறம்படச் செய்வதோடு நகைக்கடை விளம்பரங்களிலும் தோன்றி வருகிறார். இவர்களைத் தொடர்ந்து கமல், பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதன் மூலம் விஜய் தொலைக்காட்சி வாயிலாக அடுத்ததாக சின்னத்திரையில் அடி எடுத்து வைக்கவிருக்கிறார். 

இவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக விளங்கக் கூடிய பெருமை அமிதாப் பச்சனையே சேரும். ஏனெனில் இவர்கள் அனைவருமே ஏதோவொரு காலகட்டத்தில் தங்களது சின்னத்திரை மற்றும் விளம்பர பிரவேசங்களுக்கு முன்னுதாரணமாக அமிதாப்பையே குறிப்பிட்டிருப்பார்கள். இந்தித் திரையுலகில் தான் ஹீரோவாக இயங்கி வந்த அந்த நாள் முதல் இன்று வரை அமிதாப்பின் இடம் வேறு யாரும் நெருங்க முடியாத இடமே! 

அமிதாப்... ‘கோன் பனேகா குரோர்பதி’ வாயிலாக சின்னத்திரையில் தடம் பதித்தார் எனில் அவரைப் பின்பற்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நாகார்ஜூன் தமிழில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், சூர்யா, அரவிந்த் ஸ்வாமி உள்ளிட்டோர் அதையே தெலுங்கு மற்றும் தமிழில் செய்தார்கள். ‘குரோர்பதி’ போலவே சர்வதேச அளவில் பெருவாரியான ரசிகர்களைப் பெற்ற மற்றொரு நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’ இதை இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். அதையே இப்போது கமல் தமிழில் வழங்கப் போகிறார். இவர்களுக்கெல்லாம் இப்படி ஒரு ரூட் என்றால் அமீர் கான் ‘சத்யமேவ ஜெயதே’ என்று ஒரு ரியாலிட்டி ஷோவின் நெறியாளராக ஸ்டார் தொலைகாட்சியில் தேசப் பிரச்சினைகள் பலவற்றைப் பற்றிப் பேசி மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றார். இப்படி ஏதோ ஒரு வகையில் சினிமா தாண்டி சின்னத்திரையில் தத்தமது பங்கை இவர்கள் ஆற்ற முயற்சிப்பது அவர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் உவப்பானதே என்பதை அந்தந்த நிகழ்ச்சிகளின் டி.ஆர்.பி ரேட்டிங்குகள் காட்டி இருக்கும்.

இவர்களைப் பின்பற்றி இயக்குனர் ஜீவாவின் 12 B திரைப்படத்தில் நமக்கு அறிமுகமான இந்தி நடிகர் சுனில் ஷெட்டி கூட அடுத்ததாக சின்னத்திரைக்கு வரப் போகிறாராம். இவர் முன்னதாக அக்‌ஷய் குமார் தொகுத்தளித்த த்ரில் அட்வெஞ்சர் நிகழ்ச்சியை ஒத்த "India's asli champion hai dum!" எனும் அட்வெஞ்சர் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவிருக்கிறாராம். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிதாக இந்திப் படங்களில் தலைகாட்டாத சுனில் ஷெட்டி தற்போது திடீரென இப்படி ஒரு நிகழ்ச்சியில் சின்னத்திரையில் தலைகாட்டுவது ஏன்? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்; என் தலையில் இருக்கும் நரை முடிகளை நான் விரும்புகிறேன். அவற்றை மறைக்க விரும்பவில்லை நான். திரைப்படங்களில் அண்ணன், அப்பா, சித்தப்பா போன்ற கெளரவமிக்க குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்க எனக்கு எந்த மனத்தடையும் இல்லை. அதன் தொடக்கம் தான் இந்த சின்னத்திரை பிரவேஷம். இந்த அட்வெஞ்சர் தொடரின் மூலமாக என்னைப் பற்றி அதிகம் அறிந்திராத இந்தியாவின் கடைக்கோடி கிராம மக்களைக் கூட இனி அடைவேன் என நம்புகிறேன். எனத் தெரிவித்திருக்கிறார்.

இவரைப் போலவே இப்போது பெரிய திரைகளில் அதிகம் தலைக்காட்டாத நடிகர்கள் பலரும் இப்படி ஒரு முடிவெடுத்தால் சின்னத்திரைக்கு கணிசமான அனுபவம் வாய்ந்த தரமான தொகுப்பாளர்கள் கிடைக்கக் கூடும்.

ஒரே ஒரு தொலைக்காட்சியில் மட்டும் தான் இப்படி என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு இன்று தொலைக்காட்சி தொகுப்பாளர்களிடையே நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகக் கலந்து கொள்பவர்களை ஒருமையில் விளிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இப்படி விளிப்பது சம்மந்தப் பட்டவர்களின் அனுமதியுடன் தான் நடக்கிறதா? என்பது தெரியவில்லை. இதையாவது ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம் என்றாலும்; தொகுப்பாளரையும், தொலைக்காட்சி சேனல்களையும் நம்பி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் நிலையே சில நேரங்களில் தொகுப்பாளர்களின் இரட்டை அர்த்த கேள்விகளால் தர்ம சங்கடத்துக்கு உள்ளாகி விடும் போது சாமானிய வெகு ஜன பங்கேற்பாளர்களின் நிலை குறித்து என்ன சொல்வது? ஒரு நிகழ்ச்சியை பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளரை தர்ம சங்கடப் படுத்தாமல் தரமாக தொகுத்து வழங்குவது என்பது தற்போது அரிதாகி வருகிறது. இந்த நிலை எப்போது மாறும்?!

எது எப்படியோ... திறமை வாய்ந்த நடிகர்கள் தொகுத்து வழங்கும் போது; இன்றைய கற்றுக்குட்டி தொகுப்பாளர்கள் ஜாலி என்றும் ஜோவியல் என்றும் நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் ”வா போ என விளித்து கேலி செய்வதாக நினைத்து எதிர்பாலினரை மகா மட்டமாக விமர்சிக்கும் அரைகுறை தொகுத்து வழங்குதல்களைக் காண்பதிலிருந்து ஏதோ கொஞ்சம் விடுதலை கிடைக்கும் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு என்று நம்புவோம். அந்த மட்டில்  இது நிச்சயம் வரவேற்கக் கூடிய விசயம் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com