திரைப்படப் பாடலாசிரியர் நா.காமராசன் காலமானார்

தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் நா.காமராசன் (74) உடல்நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானார்.
திரைப்படப் பாடலாசிரியர் நா.காமராசன் காலமானார்

தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் நா.காமராசன் (74) உடல்நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானார்.
1942-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரத்தில் பிறந்த அவருக்கு, மனைவி லோகமணி, மகள் தைப்பாவை, மகன் திலீபன் ஆகியோர் உள்ளனர்.
இன்று இறுதிச் சடங்கு: அவரது உடல் சென்னை கோடம்பாக்கம் கங்கா நகரில் (பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம்) உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (மே 25) காலை 9 மணி வரை அஞ்சலி செலுத்த வைக்கப்படும். பின்னர் சொந்த ஊரான போடி மீனாட்சிபுரத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு வியாழக்கிழமை (மே 25) மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர். மூலம் அறிமுகம்: திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். மூலம் பாடலாசிரியராக நா.காமராசன் அறிமுகமானார். 'பல்லாண்டு வாழ்க', 'நீதிக்குத் தலைவணங்கு', 'இதயக்கனி', 'இன்று போல் என்றும் வாழ்க', 'நவரத்தினம்', 'ஊருக்கு உழைப்பவன்', 'வெள்ளை ரோஜா', 'நல்லவனுக்கு நல்லவன்', 'இதயகோவில்', 'உதயகீதம்', 'நான் பாடும் பாடல்', 'தங்கமகன்', 'அன்புள்ள ரஜினிகாந்த்', 'கை கொடுக்கும் கை', 'காக்கிச்சட்டை', 'காதல் பரிசு', 'முந்தானை முடிச்சு' உள்பட 33 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். பஞ்சவர்ணம் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதியுள்ளார்.
விருதுகள்: கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, பாரதிதாசன் விருது ஆகியவற்றை நா.காமராசன் பெற்றுள்ளார்.
தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர், காலப்போக்கில் வசனகவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றில் தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர்.
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1964-ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்தபோது நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.
அரசு அதிகாரியாக...முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கதர் வாரிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1991-இல் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின்
உறுப்பினராக இவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.
எழுதிய நூல்கள்: கறுப்பு மலர்கள், கிறுக்கன், நாவல்பழம், மகாகாவியம், சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி, தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும், சூரியகாந்தி சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், ஆப்பிள் கனவு, அந்த வேப்பமரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
பாடப் புத்தகத்தில்...இவரது பெரியார் காவியம் கவிதைத் தொகுப்புகள், இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பாடமாக இடம்பெற்றுள்ளது. இவரது 'கறுப்பு மலர்' புத்தகத்தில் திருநங்கைகள் பற்றி இவர் எழதிய கவிதை பலரால் பாராட்டப் பெற்றது.
சிறந்த பேச்சாளர்: இலக்கியத் துறை, திரைப்படத்துறை, அரசியல் துறை ஆகியவற்றில் கால் பதித்து முத்திரை பதித்தவர். சிறந்த பேச்சாளர்.


தன் கால்களில் இரத்தம் கசியக் கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா. காமராசன்தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன்கூட
மறந்துவிடக் கூடாது
- கவிஞர் வைரமுத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com