கடலோரக் கவிதையிலோ, மைதிலி என்னைக் காதலியிலோ அறிமுகமாகியிருக்க வேண்டியது!

கிளாமரான நடிகையைப் போய் அம்மனாக நடிக்க வைத்திருக்கிறார்களே?! என்று மக்கள் குறிப்பாகப் பெண்கள் தியேட்டருக்கு வராமலோ, ரம்யாவை விமரிசித்தோ படத்தைப் புறக்கணித்து விடவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. 
கடலோரக் கவிதையிலோ, மைதிலி என்னைக் காதலியிலோ அறிமுகமாகியிருக்க வேண்டியது!

பிரபல சேனல் ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த செய்தி இது. ரம்யா கிருஷ்ணன் தமிழில் அறிமுகமானது ‘வெள்ளை மனசு’ எனும் திரைப்படம் மூலமாக என்பதே இது வரை நாமறிந்த செய்தி. ஆனால் ரம்யா முதலில் அறிமுகமானது தமிழில் அல்ல மலையாளத்தில்... 1984 ஆம் ஆண்டில் மம்முட்டி, மோகன்லால் இருவரும் இணைந்து நடித்த ‘நேரம் புலரும்போல்’ எனும் திரைப்படத்தில் தனது 13 வயதில் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். ஆனால் அந்தப் படம் வெளிவரத் தாமதமானதால் 1985 ஆம் ஆண்டில் வெளியான ‘வெள்ளை மனசு’ திரைப்படமே அவரது முதல் திரைப்பிரவேசமாகக் கருதப் படுகிறது. 

ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் அப்பால் பாரதிராஜா மற்றும் டி.ராஜேந்தர் இருவருமே ரம்யாவின் நாட்டிய ஆல்பத்தைப் பார்த்து விட்டு அவரை ஒப்பந்தம் செய்ய அணுகியதாகவும் இரண்டில் ஒரு வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க கால தாமதமானதால் அந்த வாய்ப்பு அப்போது கை நழுவியதாகவும் ரம்யா கூறியுள்ளார். அவரது மீள் நினைவில் அந்த இரு படங்களாக கடலோரக் கவிதையும்,  மைதிலி என்னைக் காதலியும் இருக்கலாம் என்றும் அவர் தெதனது பேட்டியில் கூறி இருக்கிறார். தமிழில் அறிமுகமான தொடக்க காலத்தில் ரம்யா கிருஷ்ணன் ராசியில்லாத நடிகையெனக் கருதப் பட்டார்.  சிறு வயதில் பரதம் கற்றுக் கொண்டு அரங்கேற்றம் செய்துள்ள ரம்யா நடிகையான பிறகு தனது நாட்டியப் பயிற்சியைத் தொடர முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். முதலில் தமிழில் அறிமுகமானாலும் இவருக்கான நல்ல கதாபாத்திரங்களை அளித்து திரையுலகில் ரம்யாவுக்கென ஒரு ஸ்திரமான இடத்தைத் தக்க வைக்க உதவியது டோலிவுட் தான். அங்கே கிளாமர் நாயகியாக பல படங்களில் நடித்து வெற்றி கரமான நடிகையான பிறகே தமிழில் படையப்பா, பஞ்ச தந்திரம் என அவரைக் கொண்டாடும் படங்களாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

பிறகு சில காலம் தமிழ், தெலுங்கு இரண்டிலுமே பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். திரைப்படங்களில் நாயகியாக வாய்ப்புகள் குறையத் தொடங்குகையில் அடுத்ததாக சொந்தமாக தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிப்பில் இறங்கி அவரே அதில் நாயகியாகவும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் தெலுங்கில் அவருக்கு நல் வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்கி வெற்றிகரமான நடிகையாக உதவிய பிரபல இயக்குனர் கே.ராகவேந்திர ராவின் சிஷ்யரான இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி மூலமாக பாகுபலி வாய்ப்பு கதவைத் தட்டியது.

இன்று ரம்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என பிரதான மொழிகள் அனைத்திலுமே பிஸியான நடிகையாகி விட்டார். பாகுபலியால் தான் மட்டுமல்ல தன்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரது வாழ்க்கையிலும் மிகப் பெரிய மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டிருப்பதாக ரம்யா அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

கடலோரக் கவிதையிலும், மைதிலி என்னைக் காதலியிலும் ரம்யா நழுவ விட்ட வாய்ப்புகளால் நமக்கு கிடைத்தவர்கள் நடிகை ரேகாவும், அமலாவும். அவர்களும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகைகளே. தென்னிந்திய பட உலகைப் பொறுத்த வரை ரம்யாவின் கிராப் ஆரம்பத்தில் தள்ளாடினாலும் பின்னர் நிதானமான வேகத்தில் இருந்தது. இடையில் தெலுங்கில் ‘அம்மன்’ என்றொரு திரைப்படம் நடித்தார். அது ரம்யாவின் வாழ்வில் ஒரு திருப்புமுனை. தமிழை விட தெலுங்கில் ரம்யாவின் கிளாமர் அப்பீல் அதிகம். ஒரு கிளாமர் நாயகியை  மக்கள் வணங்கும் தெய்வமாகக் காட்டும் துணிவு அந்த இயக்குனருக்கு இருந்தது. இந்த திரைப்பட அனுபவம் குறித்துப் பேசுகையில் ரம்யா பகிர்ந்து கொண்ட மற்றொரு விசயம்; “அம்மன்” திரைப்படமும், சிரஞ்சீவியுடன் அளவிட முடியாத கிளாமருடன் ரம்யா நடித்த மற்றொரு திரைப்படமும் ஒரே காம்ளக்ஸில் உள்ள இரண்டு தியேட்டர்களில் வெளியானதாம். ஆனால் மக்கள் ரம்யாவை இரண்டு படங்களிலுமே அந்தந்த படங்களில் உள்ள கதாபாத்திரங்களுக்குத் தக்க உரிய வகையில் ஏற்றுக் கொண்டனராம். இத்தனை கிளாமரான நடிகையைப் போய் அம்மனாக நடிக்க வைத்திருக்கிறார்களே?! என்று மக்கள் குறிப்பாகப் பெண்கள் தியேட்டருக்கு வராமலோ, ரம்யாவை விமரிசித்தோ படத்தைப் புறக்கணித்து விடவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. 

தென்னிந்தியப் படங்களில் ரம்யாவுக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுமே வித்யாசமானவை. இந்தியில் ஷாரூக்கானுடன் ஒரு படத்தில் வில்லியாகவும் நடித்திருக்கிறார். தமிழிலும், தெலுங்கிலும் கிளாமர் நாயகி, அம்மன், பஞ்சதந்திரத்தில் கால் கேர்ள் கதாபாத்திரம், ஒரே கடல் திரைப்படத்தில் கம்பானியன், ஏன் சில திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் நம்பர் டான்ஸராகக் கூட ஆடியிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com