பா.இரஞ்சித்தின் மற்றொரு வித்தியாசமான கதாநாயகித் தேர்வு - ஹுமா குரேஸி! யார் இவர்?

தமிழ் ரசிகர்களுக்கு பாலிவுட் நடிகைகள் பலரைத் தெரிந்திருந்தாலும் இந்தப் பெயரும் இந்த முகமும் புதிது.
பா.இரஞ்சித்தின் மற்றொரு வித்தியாசமான கதாநாயகித் தேர்வு - ஹுமா குரேஸி! யார் இவர்?

30 வயது ஹியூமா குரேஸி, காலா படத்தில் ரஜினியின் ஜோடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு பாலிவுட் நடிகைகள் பலரைத் தெரிந்திருந்தாலும் இந்தப் பெயரும் இந்த முகமும் புதிது. ரஜினி ஜோடியாக வித்யா பாலன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹுமாவின் பெயர் கதாநாயகியாக வெளியானது பலருக்கும் இன்பதிர்ச்சிதான். 

டெல்லியைச் சேர்ந்த ஹுமா ஆங்கில நாடகங்களில் நிறைய நடித்தவர். இவருடைய தாய் காஷ்மிரி. தந்தை சலீம் குரேஸி கடந்த 30 வருடங்களாக 8 உணவகங்களைச் சொந்தமாக நடத்திவருகிறார். மாடலாகவும் இருந்த ஹுமாவுக்கு முதல்முதலாக அபய் தியோலுக்கு ஜோடியாக நடிக்க அழைப்பு வந்தது.  'நாடகங்களைப் பார்க்கச் செல்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு மும்பைக்குச் சென்று ஆடிஷனில் கலந்துகொண்டேன். அதில் கதாநாயகியாகத் தேர்வாகவே வேறுவழியின்றி ஊர் திரும்பி உண்மையைச் சொன்னேன். எதிர்ப்புகள் கிளம்பினாலும் நான் உறுதியாக இருந்ததால் ஓகே சொன்னார்கள்’ என்கிறார் ஹுமா.  'மும்பைக்கு வந்த சமயத்தில் டெல்லியில் இருந்த என் காதலரைப் பிரியநேர்ந்தது. காதலும் போனது’.

'பெற்றோருக்குச் செலவு வைக்க விரும்பாமல் நான்கு பெண்களுடன் ஒரு சிறிய அறையில் தங்கினேன். காலையில் கழிவறைக்குச் செல்ல எங்களிடையே அடிதடியே நடக்கும். சாதாரண ஹோட்டலில்தான் சாப்பிடுவேன். ரிக்‌ஷாவில் செல்வேன். சிலசமயம் காசைச் சேமிப்பதற்காக நீண்டதூரம் நடப்பேன்; என்கிறார். ’ஒருவருடம் பார்க்கலாம். எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் டெல்லி திரும்பிவிடலாம் என்றிருந்தேன். ஆனால் அமீர் கான், ஷாருக் கான், அமிதாப் பச்சன் ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன’ என்கிற ஹுமாவுக்குத் திருப்புமுனை இயக்குநர் அனுராக் காஷ்யப் வடிவில் வந்தது. 

ஹிந்துஸ்தான் லீவருடனான இரு வருட விளம்பர ஒப்பந்தத்தின்படி விளம்பரங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். சாம்சங் செல்பேசிக்கான விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அவரைக் கண்ட இயக்குநர் அனுராக் காஷ்யப், உடனே தன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். 

கேங்ஸ் ஆஃப் வாசபூர் படம்தான் ஹுமாவின் முதல் படம். சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த புதுமுக நடிகை என இரு ஃபிலிம்ஃபேர் விருதுகளை அப்படம் இவருக்குப் பெற்றுத் தந்தது. 'இந்தப் படத்தில் நடிக்கவேண்டாம் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். இதுபோன்ற படத்தில் நடிப்பதற்குப் பதிலாக காதல் படம் ஏதாவதொன்றில் நடி என்றுதான் அறிவுரை வழங்கினார்கள். நல்லவேளையாக நான் சரியாக முடிவெடுத்தேன்’ என்கிறார். இதற்கு முன்பு அஜித்துக்கு ஜோடியாக பில்லா 2 படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படப்பிடிப்பு தாமதமாகவே அவர் அப்படத்தில் நடிக்கவில்லை.

2012-ல் வெளியான Luv Shuv Tey Chicken Khurana படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதுவும் அனுராக் தயாரித்த படம்தான். ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த ஜாலி எல்எல்பி 2 படம் இவருக்கு மேலும் பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தச் சமயத்தில் இவருக்குத் தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது. 

அனுராக் காஷ்யப் உடன்...
அனுராக் காஷ்யப் உடன்...

இதர பாலிவுட் நடிகைகள் போல ஹுமாவும் கிசுகிசுக்களில் அடிபட்டவர்தான். சல்மான் கானின் சகோதரர் சோஹைல் கான் மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டவர். சோஹைல் கான் கிசுகிசு பற்றி ஹுமாவின் பதில் - 'அவர் எனக்குச் சகோதரர் போல. அப்படிப்பட்ட நபருடன் இணைத்துப் பேசுவது நியாயமா?’ அனுராக்குடனான காதல்? ’இயக்குநடன் வெளியே சென்றால் காதலா? இதனால் தான் வாய்ப்புகள் பெற்றேனா? இதனால் என் திறமையை நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்’ என்று பதில் அளித்துள்ளார். எனினும் அனுராக் - கல்கி பிரிவுக்கு ஹுமாவையே காரணமாகச் சொல்கின்றன மும்பை ஏடுகள்.

*

பா.இரஞ்சித்தின் கதாநாயகிகள் தேர்வு இதுவரை சோடை போனதில்லை. அதில் அவருக்கென தனி ரசனை வெளிப்படும். வழக்கமான பிரபலக் கதாநாயகிகளைத் தன் படத்தில் பயன்படுத்தமாட்டார். ஆனால் இவர் படத்தில் நடித்தபிறகு அக்கதாநாயகிகளுக்குத் தனிக்கவனம் கிடைத்துவிடும். மேலும் இவர் படத்தில் வெளிப்படுகிற கதாநாயகிகளின் அழகும் நடிப்பும் இதர படங்களில் தென்படாது. அட்டகத்தி நந்திதாவையும் மெட்ராஸ் கேத்ரீன் தெரசாவையும் மற்ற படங்களில் எப்படிப் பார்த்தோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். கெளதம் மேனன் போல பா.இரஞ்சித்தும் கதாநாயகிகளைப் புதுவிதமாகக் காண்பிக்கக்கூடியவர். இதனாலேயே ஹுமாவை அவர் தேர்வு செய்திருப்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

வழக்கமாக ரஜினி படங்களில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகைகளையே தேர்வு செய்வார்கள். அதிலும் ரஜினியின் சமீபத்திய படங்களான எந்திரன், கோச்சடையான், லிங்கா, கபாலி ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்கள் - ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா, ராதிகா ஆப்தே. இந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் அறியாத ஹுமா குரேஸி தேர்வு செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே ஆச்சர்யம்தான்.

அழகு மட்டுமல்லாமல் நடிப்பும் அவசியம் என்கிற தகுதித்தேர்வின்படி காலாவின் கதாநாயகியாகியுள்ளார் ஹுமா. ரஜினி பட நாயகிகளின் வரிசையில் ஹுமாவுக்கு எத்தகைய பெருமை கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com