எனக்கு அதிகம் பேச வராது : அமீர்கான்

அமீர் கானை டிவிட்டரில் கிட்டத்தட்ட 20.9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்
எனக்கு அதிகம் பேச வராது : அமீர்கான்

அமீர் கானை டிவிட்டரில் கிட்டத்தட்ட 20.9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். தவிர இந்தியா மற்றும் சீனாவின் மைக்ரோ ப்ளாகிங் வீபொ (Weibo) எனும் இணையதளத்திலும் இவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். சமூக வலைத்தளங்களை விட, தன்னுடைய படங்களின் மூலமே ரசிகர்களிடம் சென்று அடைவதை விரும்புகிறேன் என்கிறார் அமீர் கான். தன்னைப் பற்றி அவர் கூறிக் கொள்வது இதுதான்,‘நான் அதிகம் பேசுபவன் இல்லை’.

சீனாவில் 'டங்கல்' சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து இந்த மாதம் வீபொவில் அதிகமாகத் தொடரப்பட்டும் இந்தியர் அமீர் கான் என்பது பெருமையான செய்தி.

இனி நீங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பீர்களா என்று அமீர் கானிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அவர், 'அதெல்லாம் இல்லை, எப்போதும் போலவே இருப்பேன். தேவைப்படும் போது நிச்சயம் சமூக வலைதளங்களில் வருவேன். 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' பட வேலைகளுக்காக இப்போது தான் மால்டாவில் இருக்கிறேன். என்னுடைய முழு கவனமும் இந்தப் படத்தில் தான் இருக்கிறது. என்னால் இதிலிருந்து அத்தனை சீக்கிரம் வெளிவர முடியாது. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி என்னுடைய ரசிகர்களை என் படங்கள் மூலமாக தொடர்பு கொள்வதையே விரும்புவேன். அதுவே போதுமானது’ என்றார் அமீர்.

அதனால் தான் நீங்கள் ரெகுலராக சமூக வலைத்தளங்களில் வருவதில்லையா என்று விடாப்பிடியாக கேட்ட நிருபரின் கேள்விக்கு அமீர், ‘சோஷியல் மீடியா மக்களுடன் தொடர்பில் இருக்க உதவுகின்ற ஒரு நல்ல விஷயம்ம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் என்னை போல ஒருவனுக்கு அது ஏற்ற களமல்ல. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரி. என்னுடைய இயல்பிலேயே நான் அதிகம் பேசாதவன். எனவே எனக்கு சோஷியல் மீடியாவின் தேவை அதிகம் இருப்பதில்லை. அதனால் தான் என்னால் இதில் அதிகமாக பகிர்ந்து கொள்ள எதுவுமில்லை. நான் இப்படித்தான் இருக்கிறேன்.

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படமான டங்கலுக்குப் பிறகு அமீர் கானின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்திரைப்படத்தின் கதை பெரும்பாலோனரை ஈர்த்ததே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக, ஓய்வு பெற்ற ஒரு மல்யுத்த வீரனாக, தன்னுடைய குழந்தைகளுக்கே குரு, என பன்முகத்தன்மையுடன் அமீர் கான் இப்படத்தில் நடித்தது உலக சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் ரசிகர்கள் நெகிழ்ந்து கரைந்து போனார்கள். டங்கல் திரைப்படம் தான் ஹாலிவுட் அல்லாத வெறொரு மொழிப் படம் மிகவும் அதிகமான வசூல் சாதனை பெற்றது என்பது சரித்தர நிகழ்வு. இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.{pagination-pagination}

சீனாவில் இத்திரைப்படம் 7000 திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. Shuai Jiao Baba என்ற பெயரில் டங்கல் சீனாவில் திரையிடப்பட்டது. படம் வெளிவந்த முதல் வாரமே ரூ. 187 கோடியை வசூலித்த டங்கல், இதுவரை ரூ. 810 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது. டங்கலுக்கு முன்னால் அமீர் நடித்த பிகே, 3 இடியட்ஸ், டூம் 3 போன்ற படங்கள் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. தற்போது பிகே படத்தை விடவும் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல், சீனாவில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது டங்கல். 

சீன ரசிகர்களுக்கு அமீருக்கும் அப்படியென்ன ஈர்ப்பு? இதற்கு அமீர் சொல்வது ஒன்று தான். இந்தப் படம் அனைவரையும் உணர்வு ரீதியாக இணைத்துவிட்டது. அந்த கதாபாத்திரங்களும் கதையம்சமும் சேர்ந்து அதை அதிகப்படுத்தியிருக்கலாம். என்றார். இந்தப் படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் தங்கள் சொந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். இந்தப் படம் தங்களுக்கு இத்தனை நெருக்கமாக மாறுவதற்கான காரணங்களையும் கூறியுள்ளார்கள். அமீரின் நடிப்பும் கதாபாத்திரமும் அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சீனாவில் இத்தகைய புகழை ஒரு பக்கம் டங்கல் பெற்றிருந்தாலும், சீனாவின் பெண்ணியவாதிகளை இப்படம் கொதிப்படையச் செய்துள்ளது. ஆணாதிக்க சிந்தனை என்று அவர்கள் இப்படத்தை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அமீர் கான் படத்தை பற்றி வந்த நேர்மறையான கருத்துக்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கிறார். இந்தத் திரைப்படம் ஆண், பெண் உறவு நிலைகளைச் சொல்லும் படமில்லை. ஒரு சமூகம் பெண்களை எப்படி பார்க்கிறது. அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் ஏன் மறுக்கிறது போன்ற சில விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. தவிர இது மல்யுத்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இந்தப் படம் வெளியான பிறகு அதன் கூடுதல் கவனம் பெற்றிருப்பது சிறப்பு. நிறைய மக்கள் மல்யுத்தத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள் என்பதே இந்தப் படத்தின் வெற்றி என்றார்.

மல்யுத்தத்தை கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவதையும் அமீர் மறுக்கிறார். இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட் மிகவும் முக்கியமான விளையாட்டு, அது பலருக்கு ஒரு மதம் போன்றது. எல்லாவற்றையும் ஒப்புமை படுத்த முடியாது. மல்யுத்தமோ கிரிக்கெட்டோ இரண்டுமே பெரும் தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.

- நட்டாலியா நிங்தெளஜாம் (தமிழில் உமா பார்வதி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com