சினிமா இல்லாமல் இருக்கலாம். உணவு, குடிநீர் இல்லாமல்?: கமல் பேச்சு

கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக நாம் தூங்கிக்கொண்டு இருந்துவிட்டோம், இப்பொழுதாவது விழித்துக்கொள்ள வேண்டும்...  
சினிமா இல்லாமல் இருக்கலாம். உணவு, குடிநீர் இல்லாமல்?: கமல் பேச்சு

சென்னையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் மன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கமல் பேசியதாவது: மற்ற மாநிலங்களில் விவசாய கடன்களை ரத்து செய்யும் அரசு தமிழகத்திற்கு ஏன் மறுக்கிறது? என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன். அது இதுவரை நான் சாப்பிட்ட சோறுக்கு நன்றி. புராணங்களில் பாலம் கட்டுவதற்கு அணில் உதவியதைப்போல, நான் உதவ வந்துள்ளேன். உழவனின் மகன் இல்லையென்றாலும் உழவனின் மருமகன். 

ஆறு, குளங்களை தெய்வமாக கும்பிடுங்கள். பகுத்தறிவாளனான நானே இதைக் கூறுகிறேன். கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக நாம் தூங்கிக்கொண்டு இருந்துவிட்டோம், இப்பொழுதாவது விழித்துக்கொள்ள வேண்டும். 

விவசாயிகள் மத்தியில் வாக்கு சேகரிக்க வரவில்லை; சோறு சேகரிக்கவே வந்துள்ளேன். பல ஆண்டுகளாக விவசாயிகளின் பெருமை மற்றும் தொல்லைகளைக் கேட்டு வளர்ந்தவன். வேளாண்துறையை தொழில்துறையாக்கினால்தான் அனைவரும் வாழ முடியும். டெல்லியில் ஒருவர் என்னைத் தமிழ் பொறுக்கி என்றார். நான் பொறுக்கிதான். அறிவு, ஞானம் வரும்போது பொறுக்கி என்பதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். வீடுகளாகக் கட்டினால் உணவுக்கு எங்கே செல்வது? சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும். உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com