நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் அறம் பற்றி விளக்கியுள்ள வைரமுத்து!

அறம் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை. ஆனால் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் அறம் குறித்து...
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் அறம் பற்றி விளக்கியுள்ள வைரமுத்து!

அறம் படம் நாளை வெளியாகவுள்ளது. அதே தினத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' படமும் வெளியாகவுள்ளது. அறம் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை. ஆனால் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் அறம் குறித்து ஒரு பாடலில் விளக்கியுள்ளார் வைரமுத்து. 

சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா போன்றோர் நடித்துள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாவது:

நெஞ்சில் துணிவிருந்தால், இயக்குநர் சுசீந்திரனின் அடுத்தப் படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே தொட்டு இருக்கின்றன அல்லது தோல்வியை தொட்டது இல்லை. அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப்படைப்பான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் வெளிவருகிறது. இந்தப் படைப்பு சமூகத்துக்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக இருக்கும். 

தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்தச் சமூகம் இயங்க வேண்டும். இந்த மையத்தை வைத்து இந்தப் படைப்பு இயங்குகிறது. அரசியல், கலை, சமூகம், அரசாங்கம், கல்வி, நீதி, மருத்துவம் எல்லாத் துறைகளிலும் தகுதிமிக்கவர்கள் தகுதிமிக்க இடத்தை அடையவேண்டும் என்ற உன்னத லட்சியத்தை உள்ளடக்கமாகக் கொண்டு இந்தப் படம் இயங்குகிறது. இதில் நானும் பாடல் எழுதியிருப்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும். 

சுசீந்திரன் படங்களில் எனக்கு எப்பொழுதுமே ஒரு சுதந்திரம் தருவார். எழுதி கொடுத்து இசையமைக்கலாமே என்று அவர் புன்னகையோடு கேட்கின்றபோது நான் மகிழ்ந்து போவேன். அப்படி எழுதி கொடுத்து இமான் இசையமைத்து ஒரு பாடல் இந்தப் படத்தில் உள்ளது. அது அனைவராலும் முணுமுணுக்கப்படும் என நம்புகிறேன். 

அறம் என்பது என்ன? தர்மம் செய்வது மட்டுமே அறமா, அன்னமிடுவது மட்டுமே அறமா, அள்ளித்தருவது மட்டுமே அறமா? இல்லை! 

அறத்தின் எல்லைகளை இந்தப் படம் விரிவு செய்கிறது. அதை என் வரி உறுதி செய்கிறது. 

எண்ணம் அறிந்து ஏழைப் பசிக்கு அன்னமிடுவது அறமாகும். அறிமுகம் இல்லா நோயாளிக்கு ஆப்பிள் தருவது அறமாகும். சொந்தகாரனுக்குத் தருவதல்ல அறம், நண்பனுக்கு அள்ளித்தருவதல்ல அறம், தெரிந்த முகத்திற்குத் தருவதல்ல அறம். தெரியாத முகத்திற்கு, அறிமுகம் இல்லா முகத்திற்கு எவன் ஒருவன் தருகின்றானோ அதுதான் அறம். மூத்து செறிந்த கிழவி நெற்றியில் முத்தம் தருவது அறமாகும். இரத்த பந்தம் இல்லாதவருக்கு இரத்த தானமும் அறமாகும். குற்றம், ஊழல் காணும் இடத்தில் கோவம் என்பது அறமாகும். 

போர்கள் கொலையை வெறுத்ததில்லை. சமூகம் கொலையை வெறுத்திருக்கின்றது. யுத்தத்தில் கொலை தான் தர்மம். இந்தச் சமூகம் எப்போது யுத்தத்தில் இருக்கிறதோ அப்போது கொலையும் கூட அறமாகிவிடுகிறது என்ற கீதையின் கருத்தையும், யுத்த தர்மத்தையும் இந்த படம் முன்னிலைப்படுத்துகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் எல்லாம் இந்தப் படத்தின் பெருமைக்குப் பெருமை சேர்க்கின்றார்கள். சுசீந்திரன் தொட்டதெல்லாம் வெற்றிப் படம்தான். இந்தப் படம் வெற்றியின் இன்னொரு உயரத்தை எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எட்டும் என்று நம்புகிறேன். எட்டித் தீரும் என்று வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com