லஷ்மி குறும்படம் மூலமாக அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை லஷ்மி ப்ரியா! (படங்கள்)

தமிழ்த் திரையுலகில் லஷ்மி ப்ரியாவுக்கு பெரிய படங்களின் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... 
லஷ்மி குறும்படம் மூலமாக அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை லஷ்மி ப்ரியா! (படங்கள்)

யூடியூப் தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட லஷ்மி குறும்படம் (இயக்கம் - சர்ஜுன் கேஎம்) சமூகவலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அன்பில்லாத கணவன், சலிப்பான வாழ்க்கை என வாழும் லஷ்மிக்கு ஒரு புதிய சிநேகிதன் கிடைக்கின்றான். முதல் உரையாடலிலேயே அவன் வீட்டுக்குச் செல்கிறாள் லஷ்மி. அதே தினத்தில் அவனுடன் இணைகிறாள். பிறகு தன் சகஜ வாழ்க்கையைத் தொடர்கிறாள்...

இதுபோல அமைந்த கதை சரியா, தவறா என்றொரு விவாதம் சமூகவலைத்தளங்களில் நடைபெற்று வரும் வேளையில் இந்தக் குறும்படத்தில் நடித்த லஷ்மி ப்ரியா சந்திரமெளலி, அதிகக் கவனம் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே சில படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த லஷ்மி ப்ரியா. ஆங்கில நாடகங்களிலும் கிரிக்கெட் உள்ளிட்ட சில விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ள லஷ்மி ப்ரியா, சங்கர் சிமெண்ட் விளம்பரத்தில் நடித்து பரவலான கவனத்தைப் பெற்றார். அடுத்ததாக, இந்த லஷ்மி குறும்படத்தில் சிறப்பாக நடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார். ட்விட்டரில் தனக்குக் கிடைக்கும் பலருடைய பாராட்டுகளையும் அவர் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். 

2010ல் வெளிவந்த முன்தினம் பார்த்தேனே மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லஷ்மி ப்ரியா, சுட்ட கதை படத்தில் கதாநாயகியாக நடித்தார். தர்மயுத்தம் என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். 2015-ல் வெளிவந்த மாயா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்த லஷ்மி ப்ரியா, நவம்பர் 30 அன்று வெளிவரவுள்ள ரிச்சி படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்தப் பாராட்டுகளும் குறும்படம் மீதான விமரிசனங்களும் லஷ்மி ப்ரியாவை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுசென்றுள்ளன. இந்தத் திடீர் புகழால் லஷ்மி ப்ரியா நடித்த இதர குறும்படங்களுக்கும் யூடியூபில் அதிகப் பார்வைகள் கிடைத்து வருகின்றன. இதையடுத்து தமிழ்த் திரையுலகில் லஷ்மி ப்ரியாவுக்கு பெரிய படங்களின் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com