மேற்கு வங்க முதல்வருக்கு நன்றி தெரிவித்து கமல் ட்வீட்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் நடிகர் கமல்ஹாசன் நேற்று சந்தித்துப் பேசினார்...
மேற்கு வங்க முதல்வருக்கு நன்றி தெரிவித்து கமல் ட்வீட்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் நடிகர் கமல்ஹாசன் நேற்று சந்தித்துப் பேசினார். கமல் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் கமல் கூறியதாவது: மீண்டும், மீண்டும் என்னை அழைத்து சினிமா குடும்பத்தைப் பெருமைப்படுத்துவதற்காக நன்றி. இக்குடும்பத்தில் ஒருவனாக உள்ளதற்கு நான் பெருமைப்படுகிறேன். வேற்றுமையும் ஒற்றுமையும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. உங்களுடைய லண்டன் பயணத்துக்கு என் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க அரசின் சார்பில் கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவுக்கு அந்த அரசின் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்தது. இதற்காக சென்னையிலிருந்து அவர் நேற்று காலை 11.15 மணிக்கு கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். சர்வதேச திரைப்பட விழா தொடங்குவதற்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கமல் சந்தித்தார். சுமார் 10 நிமிஷம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் இருவரும் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தனது ட்விட்டர் பக்கங்களில் தமிழக அரசை விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது நேரடி அரசியலுக்கு வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை அண்மையில் சந்தித்துப் பேசிய நடிகர் கமல்ஹாசன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலையும் சந்தித்தார். 

நற்பணி இயக்கத்தினர் தன்னுடன் தொடர்பில் இருக்கும் வகையில் "மய்யம் விசில்' என்ற செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். மேலும், கட்சி தொடங்குவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com