நானும் ரஞ்சித்தும் சக பயணிகள்: 'அறம்' இயக்குனர் கோபி நயினார் அறிக்கை - முடிவுக்கு வந்த சர்ச்சை? 

இயக்குநர் ரஞ்சித்தும் நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள் என்று 'அறம்' இயக்குனர் கோபி நயினார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் காரணமாக,..
நானும் ரஞ்சித்தும் சக பயணிகள்: 'அறம்' இயக்குனர் கோபி நயினார் அறிக்கை - முடிவுக்கு வந்த சர்ச்சை? 

சென்னை: இயக்குநர் ரஞ்சித்தும் நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள் என்று 'அறம்' இயக்குனர் கோபி நயினார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் காரணமாக, ரஞ்சித்தின் டிவீட்டினால் எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்துள்ள படம் 'அறம்'. மாவட்ட ஆட்சித்தலைவராக மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ள  இந்தப்படம் விமர்சனரீதியாக பாராட்டினைப் பெற்றிருப்பதுடன் வசூல்ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

பலதரப்பிலிருந்தும் இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தினை வாழ்த்தி, இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்ட ஒரு ட்வீட்டால் புதிய சர்ச்சை எழுந்தது. அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த பதிவில் , '#அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி...#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர் & படக்குழுவினர்க்கும் #தோழர் நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்' என்று தெரிவித்துள்ளார்.

ஒரு திரைப்படத்தினைப் பொறுத்த வரை இயக்குநர்தான் முக்கியமானவர். ஆனால் ரஞ்சித் தன்னுடைய இந்தப்பதிவில் அறம் இயக்குனர் கோபி நயினார் பெயரைக் கூட குறிப்பிடாமல், நடிகை நயன்தாரவை 'தோழர் நயன்தாரா' என்று விளித்திருந்தது பலத்த சர்ச்சையினைக் கிளப்பியது. சமூக வலைத்தளங்களில் ரஞ்சித்துக்கு எதிரான தொடர் கண்டங்கள் பதியப்பட்டன.

முன்னதாக இயக்குநர் ரஞ்சித்தின் இரண்டாவது படமான 'மெட்ராஸ்' திரைப்படத்தின் சில காட்சிகள், கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி பாதியிலேயே நின்று போன 'கறுப்பர் நகரம்' என்ற படத்தின் காட்சிகள்தான் என்ற சர்ச்சை உருவாகி, இது தொடர்பாக அப்பொழுது தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து செய்யுமளவுக்கு நீண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடர் சர்ச்சைகளில் மத்தியில் 'அறம்' திரைப்பட இயக்குனர் கோபி நயினார் நேற்று அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’இயக்குநர் ரஞ்சித்தும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள். ஆனால் சில நலன்விரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான சூழலல்ல.

தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன். நானும், இயக்குநர் ரஞ்சித்தும் இந்தச் சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கின்றன. குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்துச் செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போதுதான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமையக் கூடும்.

ஆதலால், உறவுகளைச் சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன். நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தத்தை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’

இவ்வாறு அந்தப் பதிவில் கோபி நைனார் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் டிவீட்டினால் எழுந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது என்று கூறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com