இந்திய சினிமாவில் பெண்களுக்கு முதல்முதலாக வாய்ப்பு தந்தவர் இவர்தான்!

1939-ம் ஆண்டிலேயே ஒரு பெண் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை போராட்டங்கள் பற்றியும் இந்தச் சமூகத்தில் அவள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் ‘ஆத்மி’ என்ற ஒரு அழுத்தமான திரைக்கதையை தந்தவர் இவர்.
இந்திய சினிமாவில் பெண்களுக்கு முதல்முதலாக வாய்ப்பு தந்தவர் இவர்தான்!

இன்று சமூக பிரச்னைகள் பற்றியும், சீர் திருத்தங்கள் பற்றியும் இந்தியா முழுவதிலும் பல இயக்குநர்கள் படம் எடுத்து வரும் நிலையில் இவை அனைத்திற்கும் ஒரு முன்னோடியாக விளங்கியவர் இந்தி திரைப்பட இயக்குநர் வி.சாந்தாராம் என்பதை அறிவீர்களா? பாம்பே, சிவாஜி, கத்தி, அறம், தனி ஒருவன் போன்ற படங்களின் பெயரை கேட்டவுடன் நமது நினைவிற்கு வருவது என்னவோ அந்தப் படங்களில் இருக்கும் ஆழமான  சமூக பிரச்னை நிறைந்த கதைக்களம் தான். இவை மட்டும் இல்லை இந்தியா முழுவதிலும் இன்றைய காலகட்டத்தில் சமூக பிரச்னைகள் பற்றி பேசும் ஆயிரத்திற்கும் அதிகமானா படங்களை சுட்டிக் காட்டலாம், ஆனால் 1939-ம் ஆண்டிலேயே ஒரு பெண் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை போராட்டங்கள் பற்றியும் இந்தச் சமூகத்தில் அவள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் ‘ஆத்மி’ என்ற ஒரு அழுத்தமான திரைக்கதையை தந்தவர் இவர்.

நவம்பர் 18-ம் தேதி 1901-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த இவர் தன்னுடைய 20-ம் வயதிலேயே திரை துறையில் ஒரு நடிகனாகக் கால் பதித்தார். ‘சுரேகா ஹரன்’, ‘ஸ்த்ரி’ ஆகிய ஆறு திரைப்படங்களின் நடித்த இவர் சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகங்களை கொண்ட இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதைப் பெற்றவர்.

தனது இளம் வயதிலேயே திரையுலகத்தின் மீது இவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு 60 ஆண்டுகளுக்கும் மேல் இவர் சினிமா துறையில் இருந்த போதும் ஒரு கடுகளவும் குறையவில்லை என்பதே உண்மை. இந்தியாவின் ஆரம்பக் காலங்களில் வந்த வண்ணப் படங்களில் இவர் இயக்கிய ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ திரைப்படம் தான் இந்தியாவின் முதல் டெக்னிக் கலர் படம் ஆகும். மௌன படங்கள் மட்டும் வெளி வந்த காலகட்டத்திலேயே ஆறு திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

‘அம்ரித் மந்தன்’ படம் வாயிலாக இந்தி, தமிழ், மராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமானார். இவருடைய ‘அமர்ஜோதி’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பல பாராட்டுகளை பெற்றது. திரைப்பட நடிகை ஜெயஸ்ரீயை மணந்த இவர் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விவாகரத்து செய்து, ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ திரைப்பட கதாநாயகியான சந்தியாவை மறுமணம் புரிந்தார். இவர்களுக்குப் பிறந்த மகள் ராஜ்யஸ்ரீயும் பின்னாளில் மிகப் பெரிய நடிகை ஆனார்.

இந்தியாவில் பல காலங்களாக ஆண்களே பெண்களை போல் வேடமணிந்து நடித்து வந்த சூழலில் பெண்களையே கதாநாயகிகளாக முதன் முதலில் அறிமுகப்படுத்தியது இவர்தான். அன்று பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இந்தியா திரையுலகில் பெண்களுக்கான ஒரு நிரந்தர இடத்தையே இவர் தந்துவிட்டார். ஆண்களே பெண்களாக நடித்த சூழலில் இன்று பெண்களை முதன்மைப் படுத்திய பல திரைப்படங்கள் வெளி வருகிறது என்றால் அதற்கெல்லாம் ஒரு ஆரம்ப புள்ளியாக இவர் இருந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

‘பாபுரா சினிமா கம்பெனியில்’ முதன் முதலில் சேர்ந்த இவர் அங்குத் தயாரிப்பு, ஸ்பெஷல் எஃபக்ட், ஆய்வுநிலைய வேலை ஆகிய சினிமா துரைக்குத் தேவையான அனைத்து நுட்பமான கலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் தனது நண்பர்களுடன் இனைந்து 1929-ம் ஆண்டு ‘பிரபாத் ஃபிலிம் கம்பெனி’ ஒன்றை ஆரம்பித்தார். பின்னர் 1941-ல் அதிலிருந்து விலகி ‘ராஜ்கமல் கலா மந்திர்’ என்கிற திரைப்பட நிறுவனத்தைத் துவங்கினார்.

பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை போராட்டங்களை குறித்து ‘துனியா நா மானே’ என்கிற படம், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி ‘படோஸி’ போன்ற சமூக அக்கறை நிறைந்த படங்கள் பலவற்றை இயக்கியுள்ளார். இவர் இயற்றிய ‘சகுந்தலை’ திரைப்படம் வர்த்தக ரீதியில் வெளிநாட்டில் திரையிடப்பட்ட முதல் இந்திய படம் ஆகும். மேலும் பொது உடைமை கோட்பாடுடைய நாடுகளில் இவர் இயக்கிய ‘டாக்டர் கோட்னிஸ் கீ அமர் கஹானி’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.  

தமிழக மக்களின் இதய கணி என அன்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் இவருடைய ‘தோ ஆங்கே பாரஹ் ஹாத்’ படத்தைத் தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ என்ற பெயரிலும், ‘ஆப்னா தேஷ்’ திரைப்படத்தை ‘நம் நாடு’ என்ற பெயரிலும் உருவாக்கி நடித்தார். இதில் ‘தோ ஆங்கே பாரஹ் ஹாத்’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வெள்ளிக் கரடி’ விருதை வென்றது. 

இந்திய திரையுலகில் பல புதுமைகளை புகுத்தியவரும், கலை உலகிற்கே தனது ஒப்பற்ற திறமையினால் பெருமை சேர்த்தவருமான வி.சாந்தாராம் தன்னுடைய 89-வது வயதில் காலமானார். உலக அரங்கில் இந்திய திரைத்துறைக்கு என ஒரு தனி அடையாளத்தைத் தேடி கொடுத்த இவரின் 116-வது பிறந்த நாளான இன்று நினைவு கூர்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com