தமிழ்நாட்டின் பாதிப் பணம் வைத்திருக்கும் அன்புச்செழியன் வீட்டிலும் ரெய்டு செய்யவும்: இயக்குநர் சுசீந்திரன் கோரிக்கை

நான் கடவுள் சமயத்தில் இந்த அன்புச்செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள்...
தமிழ்நாட்டின் பாதிப் பணம் வைத்திருக்கும் அன்புச்செழியன் வீட்டிலும் ரெய்டு செய்யவும்: இயக்குநர் சுசீந்திரன் கோரிக்கை

சென்னை வளசரவாக்கத்தில், சினிமா ஃபைனான்சியர் கடனைக் கேட்டு மிரட்டியதால், திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இதற்குக் காரணமான மதுரை அன்பு தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்குச் சிலர், மதுரை அன்பு பெயரை வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லையா என்று விமரிசனம் செய்தார்கள்.

இதையடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியதாவது:

நான் கடவுள் சமயத்தில் இந்த அன்புச்செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் லிங்குசாமி, கெளதம் மேனன், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேரும் பல நடிகர்களும் இந்த அன்பு செழியனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இமான் இசையமைப்பாளரிடம், எந்தப் படத்துக்கு அவர் இசையமைக்கவேண்டும் என்று மறைமுகமாகச் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் இந்த அவல நிலைக்குக் காரணமான அன்புச்செழியன் தண்டிக்கப்படவேண்டும். மத்திய அரசுக்கும் வருவாய்த்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதி பணம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு செய்யவும் என்று கூறியுள்ளார்.

வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பா. அசோக்குமார் (44). இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனர். சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தை அசோக்குமார் நிர்வகித்து வந்தார். அத்துடன் சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராகவும், அலுவலக நிர்வாகியாகவும் இருந்தார். வழக்கமாக காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் அசோக்குமார் செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. இந்நிலையில் அலுவலக ஊழியர்கள், அவரது செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டபோதும் அவரிடமிருந்து பதில் இல்லை. அதையடுத்து, அசோக்குமார் வீட்டுக்கு ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அவர் தனது உடற்பயிற்சி அறையில் சடலமாகத் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த வளசரவாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, அசோக்குமார் எழுதிய இருபக்கக் கடிதம் கிடைத்தது. அதில், 'தங்கள் நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. அதன் காரணமாக பிரபல திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் பெற்றதாகவும், அவர் கடந்த 6 மாதமாக பணத்தைக் கேட்டு தொல்லை தந்து வந்ததுடன், பலவிதமாக மிரட்டல் விடுத்தும் வந்தார். வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தேன்' என உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இயக்குநர் சசிகுமார், இயக்குநர்கள் பாலா, அமீர், சமுத்திரக்கனி ஆகியோருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று புகார் தெரிவித்தார். அவரது புகாரை அடுத்து திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com