அன்புச்செழியன் உத்தமர்; தவறாகச் சித்தரிக்கப்படுவது வேதனை: ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ள இயக்குநர் சீனு ராமசாமியின் பதிவு!

அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே என்று பிரபல இயக்குநர் சீனு ராமசாமி...
அன்புச்செழியன் உத்தமர்; தவறாகச் சித்தரிக்கப்படுவது வேதனை: ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ள இயக்குநர் சீனு ராமசாமியின் பதிவு!

அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே என்று பிரபல இயக்குநர் சீனு ராமசாமி பதிவு எழுதியுள்ளார்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனரான இவர், சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராவும், அலுவலக நிர்வாகியாகவும் இருந்து வந்தார். தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார், தனது கடிதத்தில் ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் பெற்ற கடனுக்கு கந்துவட்டி கொடுத்து வந்ததும் அவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும் அதனால்தான் தற்கொலை முடிவு எடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதத்தின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். அதேவேளையில் இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் அன்புச்செழியன் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் என வலியுறுத்தினர். தலைமறைவாக உள்ள அன்புச்செழியனைக் கைது செய்வதற்கு 3 தனிப்படைகள் அமைத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் உத்தரவிட்டார்.

அன்புச்செழியனை கைது செய்வதற்கு மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தனிப் படை போலீஸார் விரைந்துள்ளனர். அவரது இருப்பிடத்தை அறிய அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அன்புச்செழியனை ஓரிரு தினங்களுக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியதாவது: 

எம்.ஜி.ஆர், சிவாஜி போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே... என்று எழுதியுள்ளார்.

திரையுலகினர் ஒன்று சேர்ந்து அன்புச்செழியனுக்கு எதிராகக் குரல் எழுப்பி வரும் வேளையில் பிரபல இயக்குநரான சீனு ராமசாமி, அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பதிவு வெளியிட்டிருப்பது ஆச்சர்யங்களை உருவாகியுள்ளது. ரசிகர்களும் சீனு ராமசாமிக்குக் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் மறுமொழி அளித்துவருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com