தமிழ் சினிமாவில் வெறும் கிளாமர் டாலாக மட்டுமே சித்தரிக்கப்பட்டு வீணடிக்கப்பட்ட ஹீரோயின்!

ஸ்ரேயா போன்று தோற்றத்துக்கு மட்டுமே பாந்தமாக இல்லாமல் அதை விட வெகு பாந்தமாக, நேர்த்தியாக... நடிக்கவும் தெரிந்த நடிகைகளை வீணடிப்பது கூட ஒரு வகையில் கலைக்குற்றமே!
தமிழ் சினிமாவில் வெறும் கிளாமர் டாலாக மட்டுமே சித்தரிக்கப்பட்டு வீணடிக்கப்பட்ட ஹீரோயின்!

ஸ்ரேயா சரண்...

தமிழ் சினிமாவுக்கு இவர் இறக்குமதியானது எனக்கு 20 உனக்குப் 18 திரைப்படம் மூலமாகத்தான். அந்தப் படத்தின் நாயகி த்ரிஷா எனினும் ஸ்ரேயாவும் அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்திருப்பார்.

ஸ்ரேயாவின் திரைப்பட வரலாற்றை எடுத்துக் கொண்டால் ஆரம்பம் முதலே இன்று வரை அவரை ஒரு கிளாமர் டாலாகத்தான் கோலிவுட் கொண்டாடியிருக்கிறது. கோலிவுட் மட்டுமல்ல டோலிவுட், பாலிவுட்டும் கூடத்தான். ஆனால் ஸ்ரேயா கிளாமர் தவிர குடும்பப் பாங்கான பெண் கதாபாத்திரத்துக்கும் பாந்தமாகப் பொருந்துவார் என்பதை ‘மனம்’ தெலுங்குத் திரைப்படம் நிரூபித்தது. மனம் திரைப்படத்தில் சமந்தாவைக் காட்டிலும் ஸ்ரேயா வரும் காட்சிகள் தான் படத்தின் அழகியல் எபிஸோட்கள்!

ஆனால் தமிழில் மட்டும் ஏனோ ஸ்ரேயாவை பார்பி பொம்மை மாதிரியான கதாநாயகி வேடங்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள். அதைத்தாண்டியும் அவருக்கு நடிப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்த தகுதியுண்டு என்பதை தமிழ் இயக்குனர்கள் நம்பவில்லையோ... என்னவோ?! ஏனெனில் தமிழில் ஸ்ரேயாவின் திரைப்பட லிஸ்ட்டைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

2003 ஆம் வருடம் எனக்கு 20 உனக்குப் 18 திரைப்படத்த்துக்குப் பின் 2005 ஆம் ஆண்டில் மழை திரைப்படத்தில் நடித்தார், அதற்குப் பின் 2006 ல் தனுஷ் ஜோடியாக திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்திலும் 2007 ல் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்திலும், விஜய்க்கு ஜோடியாக ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்திலும் நடித்தார். மீண்டும் இரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2009 ஆம் ஆண்டில் தோரணை, கந்தசாமி, திரைப்படங்களிலும் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டுமாகவும் நடித்தார். 2010 ல் குட்டி, ஜக்குபாய் திரைப்படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் ஸ்ரேயா நடித்த தமிழ் திரைப்படங்களான குட்டி, தோரணை, ரெளத்திரம் தமிழில் மனதில் நிற்கும் படியான ஹீரோயின் வேடங்கள் எதுவும் ஸ்ரேயாவுக்கு வழங்கப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை படங்களிலும் ஸ்ரேயாவுக்கு சிரத்தையெடுத்து நடிப்பதற்கோ, தனது நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதற்கோ பெரிதாக எந்த வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. கண்களைக் கூசச் செய்யும் கவர்ச்சியான உடைகளில் பாடல்காட்சிகளில் நடனமாட ஸ்ரேயா எதற்கு? அதற்கெனவே அப்போது ரகஷியாக்களும், முமைத்கான்களும் இருந்தனரே! ஆனாலும் ஸ்ரேயாவும் தமிழ் சினிமாக்களில் அப்படித்தான் பயன்படுத்தப் பட்டிருந்தார் என்பது வாஸ்தவமே!  சிம்புவின் அன்பானவன், அடங்காதவன் அசராதவனில் 80 களின் கிராமத்துப் பெண் போல தாவணி உடுத்திய ஸ்ரேயா காட்டப்பட்டிருந்தாலும் நடிப்பதற்கான தேவையைப் பொறுத்தவரை ஸ்ரேயாவின் பாத்திரத்துக்கான சிரத்தை அந்தப்படத்திலும் இல்லவே இல்லை. ஸ்ரேயா அதில் முற்றிலுமாக வீணடிக்கப்பட்டிருந்தார்.

கல்லூரிக் காலத்தில் நாகார்ஜூன், பிரபு தேவா நடிப்பில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘சந்தோஷம்’ என்ற திரைப்படமே ஸ்ரேயா நடிப்பில் நான் காண நேர்ந்த முதல் திரைப்படம். ஸ்ரேயாவைப் பொறுத்தவரை அன்று கண்ட அதே தோற்றத்தில் தான் இன்று வரை இருக்கிறார். அந்தத் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாகின்றன. 15 வருடங்களாக ஒரு நடிகை ஒரே அளவில் கச்சிதமாக உடலைப் பேணுவது திரைப்படத்துறையில் பெரிதில்லை என்றே எண்ணினாலும் முகமும், சருமமும் கூட அன்று கண்டதைப் போலவே இன்றும் இருந்தால் நிச்சயம் அதற்காக அவர்கள் மெனக்கெடுகிறார்கள் என்று தான் பொருள். மனம் திரைப்படத்தை கண்ட போதே தோன்றியது ஸ்ரேயாவை இந்த அளவுக்கு அருமையான குணச்சித்திரப் பாத்திரத்தில் வேறு எந்த மொழியிலும் எந்த இயக்குனரும் யோசித்துப் பார்த்திருக்கவில்லையே! சபாஷ்! என்று தோன்றியது. ஸ்ரேயா போன்று தோற்றத்துக்கு மட்டுமே பாந்தமாக இல்லாமல் அதை விட வெகு பாந்தமாக, நேர்த்தியாக... நடிக்கவும் தெரிந்த நடிகைகளை வீணடிப்பது கூட ஒரு வகையில் கலைக்குற்றமே!

அதைத்தான் நமது தமிழ் இயக்குனர்கள் இதுவரை செய்து வந்திருக்கிறார்கள்.

தற்போது தமிழ், தெலுங்கில் இருமொழிப்படமாக தயாராகி வரும் ‘நரகாசுரன்’ திரைப்படத்தில் தனது முந்தைய தமிழ் திரைப்படங்களைப் போலல்லாது முற்றிலும் வித்யாசமாக துளியும் கிளாமர் அற்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக ஸ்ரேயா அறிவித்திருக்கிறார். பார்க்கலாம் இதிலாவது ஸ்ரேயாவின் நடிப்புத்திறனுக்கு முழுத்தீனி கிடைக்குமா என!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com