அன்புச்செழியன் நல்லவரா கெட்டவரா? இரு அணியாகப் பிரிந்து நிற்கும் தமிழ்த் திரையுலகம்!

அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் பல்வேறு அனுபவங்களைப் பகிர்கிறார்கள். பல புள்ளிவிவரங்களை அளிக்கிறார்கள்...
அன்புச்செழியன் நல்லவரா கெட்டவரா? இரு அணியாகப் பிரிந்து நிற்கும் தமிழ்த் திரையுலகம்!


அன்புச்செழியனுக்கு எந்த அமைச்சராவது ஆதரவளித்தால் அவர்களுக்கும் எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிப்போம். 

தயாரிப்பாளர் அசோக் குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த விஷால் உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய வார்த்தைகள் இவை. 

அவர் சொல்லிய இரு நாள்களில் அன்புச்செழியனுக்கு ஆதரவாகத் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் சிலர் ஒன்றுசேர்ந்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். தயாரிப்பாளர் தாணு, நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை தேவயானி, நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா உள்ளிட்ட சிலர் அன்புச்செழியனின் நற்குணங்களை அக்கூட்டத்தில் விளக்கியுள்ளார்கள். அறிக்கைகளிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் அன்புச்செழியனுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தமிழ்த் திரையுலகம் எடுத்த நிலையில் திடீரென அன்புச்செழியனுக்கு ஆதரவான குரல்கள் கடந்த இரு நாள்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. 

அந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் தாணு, அன்புச்செழியனுக்கு ஆதரவாக நிறைய பேசினார்.

அன்புச்செழியன் இந்த துறையில் முதலீடு செய்யவில்லை என்றால் நாங்கள் எல்லாம் இல்லை. சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினிமுருகன்' படப்பிரச்சினையின் போது அனைவருடனும் பேசி, படம் வெளியிட உதவி செய்தவர் அன்புச்செழியன். உத்தம வில்லன் பட வெளியீட்டின்போது பிரச்னை ஏற்பட்டது. மதுரையிலிருந்து கிளம்பி வந்த அன்புச்செழியனிடம் சாலையின் ஓரத்தில் வைத்து முழுப்பிரச்னையையும் விளக்கினோம். அனைத்தையும் அவர் சரிசெய்துகொடுத்தார்.

அவர் ஒரு விநியோகஸ்தரும்கூட. தங்க மகன் படம் நஷ்டமானபோது ஸ்ரீக்ரீன் நிறுவனத்துக்கு ரூ. 2 கோடி விட்டுக்கொடுத்தார். அசோக் குமார் குடும்பத்துக்கு உதவவேண்டும் என்றால் நான் அப்படத்துக்கு முதலீடு செய்கிறேன். சசிகுமார் அல்லது விஷால் நடிக்கட்டும். அதில் வரும் பணத்தை அசோக் குமார் குடும்பத்துக்குத் தரலாம்.

படத்தின் நெகடிவ் உரிமத்துக்குக் கொடுக்கக்கூடிய பணம் நடிகர்களின் சம்பளத்துக்குப் போய்விடும். மீதிப்பணத்தைக் கொடுக்கக்கூடியவர், அன்புச்செழியன். நான் தயாரித்த பெரிய படங்கள், சிறு படங்கள் என அனைத்துக்குமே அவர்தான் பணம் தந்துள்ளார். திரையுலகில் ஒரு படம் கூட அன்புச்செழியனால் நின்றது கிடையாது. அப்படிப்பட்ட அன்புச்செழியன் மீது இப்படியொரு பழியா என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அன்புச்செழியனைத் தவறாகப் பேசி இந்தத் தொழிலை நசுக்கிவிடவேண்டாம். எந்தவொரு சூழ்நிலையும் அன்புச்செழியன் திரையுலகை விட்டு விலகக்கூடாது. அன்புச்செழியன் ஒதுங்கினால் திரையுலகம் இல்லை என்றார். 

தாணு சொல்வதைப் படித்தால் ஆச்சர்யமாக உள்ளதா? 

சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் சமீபத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர் இயக்குநரும் நடிகருமான சசிக்குமாரின் மைத்துனர். அசோக்குமார் தனது தற்கொலைக்கு, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் எழுதிய இருபக்கக் கடிதத்தில் கூறியதாவது: 'தங்கள் நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. அதன் காரணமாகப் பிரபல திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் பெற்றதாகவும், அவர் கடந்த 6 மாதமாக பணத்தைக் கேட்டு தொல்லை தந்து வந்ததுடன், பலவிதமாக மிரட்டல் விடுத்தும் வந்தார். வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தேன்' என உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இயக்குநர் சசிகுமார், இயக்குநர்கள் பாலா, அமீர், சமுத்திரக்கனி ஆகியோருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று புகார் தெரிவித்தார். அவரது புகாரை அடுத்து திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் அன்புச்செழியன் தலைமறைவானார். இதையடுத்து அவரை கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை, தேனி மாவட்டங்களில் நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் அவர் பதுங்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் அந்த இடங்களுக்கு தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர். இதற்கிடையே விமானம் மூலம் அன்புச்செழியன் தமிழகத்தை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மேற்கொண்டுள்ளனர். அன்புச்செழியனுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கமல் கூறியதாவது: கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதைச் சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாகவேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள் என்று கூறினார். கமலின் ட்வீட்டில் அன்புச்செழியனின் பெயர் இடம்பெறவில்லை. 

அன்புச்செழியனுக்கு ஆதரவாக இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி ஆடியோ வடிவில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: கடந்த 8 வருடங்களாக நான் தயாரிக்கும் படங்களுக்கு அன்புவிடமிருந்துதான் ஃபைனான்ஸ் வாங்குகிறேன். அவர் ஏதோ எழுதி வாங்கி வைத்துக்கொள்வார் என்று வரும் செய்திகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் என்னிடமிருந்து அவர் எதையுமே எழுதி வாங்கியதில்லை. வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக் கொள்வார் என்று சொல்வது எல்லாம் வடிகட்டிய பொய். எனது அனுபவத்தில் அப்படி எந்தவொரு விஷயமுமே கிடையாது. என் படங்களின் வெளியீட்டு உரிமையை அவர் கேட்டதில்லை. எனக்கொரு படம் செய்து கொடுங்கள் என்றுதான் கேட்டுள்ளார். சினிமா கஷ்டம் தெரிந்த ஃபைனான்சியர். ஒரு ஃபைனான்சியர் கொடுத்த பணத்தைக் கேட்பது எந்த வகையில் அநியாயம் என்பது தெரியவில்லை என்று அன்புச்செழியனுக்கு மகத்தான அதரவை அளிக்கிறார்.

இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அன்புச்செழியனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: 

நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் திரு. அன்புச்செழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். வாங்கிய பணத்தை முறையாகத் திரும்பச் செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரைச் சற்று மிகைப்படுத்திச் சித்தரிப்பதாகத் தோன்றுகிறது. திரைப்படத்துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், கடன் வாங்கி படம் எடுத்துதான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள். எனக்கும் கடன் இருக்கிறது. உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று அன்புச்செழியனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.

அன்புச்செழியனுக்கு ஆதரவாக இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் வெளியிட்டு பிறகு அதை நீக்கினார். எம்.ஜி.ஆர், சிவாஜி போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே... என்று எழுதினார் சீனு ராமசாமி. 

ஆனால் அசோக் குமார் இறந்த முதல் இருநாள்களில் அன்புச்செழியனுக்கு எதிராகச் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் திரையுலகினர் பேசினார்கள். முதல் எதிர்ப்புக்குரல் அசோக் குமார் இறந்த சில மணி நேரங்களில் இயக்குநர் அமீரிடமிருந்து வந்தது. அசோக்குமார் தற்கொலை தொடர்பாக அமீர் செவ்வாய்க்கிழமை இரவு வளசரவாக்கம் காவல் நிலைய வாயிலில் கூறியது: இயக்குநர் சசிகுமார் நிறுவனத்துக்கும் அன்புச்செழியனுக்கும் இடையே 10 ஆண்டுகளாக வரவு-செலவு நடைபெற்றுள்ளது. சசிகுமார் நிறுவனம், அன்புச்செழியனுக்கு முறையாக வட்டி செலுத்தியிருக்கிறது. தான் கொடுத்த பணம் முழுவதையும் அன்புச்செழியன் தரப்பில் கேட்டதாலேயே பிரச்னை எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் சசிகுமார் தயாரித்து நடித்த கொடிவீரன் திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிபோகும் நிலை ஏற்பட்டது. இதனால் நெருக்கடிக்கு ஆளான அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழக திரைப்படத் துறையினர் சந்திக்கும் இத்தகைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ் திரைப்படத் துறையில் உள்ள அனைத்து சங்கத்தினரும் இணைந்து கந்துவட்டி முறையை ஒழிப்பதற்கு முன் வர வேண்டும். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் இப்பிரச்னைக்கு பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இதற்குக் காரணமான மதுரை அன்பு தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்குச் சிலர், மதுரை அன்பு பெயரை வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லையா என்று விமரிசனம் செய்தார்கள். இதையடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியதாவது:

நான் கடவுள் சமயத்தில் இந்த அன்புச்செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் லிங்குசாமி, கெளதம் மேனன், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேரும் பல நடிகர்களும் இந்த அன்பு செழியனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இமான் இசையமைப்பாளரிடம், எந்தப் படத்துக்கு அவர் இசையமைக்கவேண்டும் என்று மறைமுகமாகச் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் இந்த அவல நிலைக்குக் காரணமான அன்புச்செழியன் தண்டிக்கப்படவேண்டும். மத்திய அரசுக்கும் வருவாய்த்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதி பணம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு செய்யவும் என்று கூறினார். 

உடனடியாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடமிருந்து அறிக்கைகளும் ஃபேஸ்புக் பதிவுகளும் வெளிவந்தன. 

கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்றத் தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்து வட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும். பொறுத்தது போதும். கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப் பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு. காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலைஅல்ல. கொலை. இந்தச் சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான அசோக்குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார் விஷால். 

தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அன்புச்செழியன் குறித்து விஷால் எழுதியதாவது: அசோக் குமார் விஷயத்தில் அன்புச்செழியன் செய்துள்ளது மிகவும் தவறானது. அதில் நியாயமுமல்ல. அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் உள்பட அனைவரும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத்தான் போகிறோம். யாரும் ஓடிவிடமாட்டோம். கடுமையாக உழைத்து எங்கள் கடனை நிச்சயம் அடைப்போம். இனிமேலும் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்று கூறினார்.  

இயக்குநர் கெளதம் மேனன் ட்விட்டரில் கூறியதாவது: அசோக் உன்னுடைய மரணம் ஈவிரக்கம் அற்ற ஒரு பணப்பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன்... ஆனால்... நீ உயிரோடிருந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்பியிருப்போம் என்றார்.

இந்த விவகாரம் குறித்து அன்புச்செழியன் இதுவரை நேரடியாக பேட்டி எதுவும் அளிக்கவில்லை. தன்னுடைய கோபுரம் பிலிம்ஸ் மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டதாவது:

அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டு, ஒரு கடிதம் எழுதி வைத்ததாகவும் அதில் சில வார்த்தைகள் எழுதி வைத்துள்ளதாகவும் செய்திகளில் வந்துள்ளது. அசோக்குமார் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம், அவர் எழுதி வைத்ததுதானா? நாங்கள் அசோக்குமாருடன் எந்தப் பண வரவு, செலவும் செய்யவில்லை. படம் தயாரிப்பதற்கு சசிகுமார் தான் எங்களிடம் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் எந்த வியாபார தொடர்பும் இல்லாத அசோக்குமார், எங்களை கடிதத்தில் எழுதியுள்ளார் என்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. எங்களிடம் பணம் பெற்று படம் தயாரிக்கின்றனர். பட ரிலீசின்போது அதைத் திருப்பிக் கொடுப்பார்கள். இதுதான் சினிமா நடைமுறை. எந்த முதலீடும் இல்லாமல் சிலர் படம் தயாரிக்க வருகிறார்கள். 

எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் இவர்களை நம்பி பணம் தருகிறோம். ஒரு படத்துக்கு பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு, படமும் தயாரிக்காமல் வீடு, கார் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். பண உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள். இதுபோல் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அலைவதாக தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக சினிமா தொழிலில் இருக்கிறோம். எங்கும் எங்கள் மேல் எந்தப் புகாரும் கிடையாது. அசோக்குமார் என்பவர் எழுதியதாக சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்று தன்மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்திருந்தார் அன்புச்செழியன்.

சீனு ராமசாமியின் ட்வீட்டுக்குப் பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டதுதான் ஒட்டுமொத்த காட்சியையும் மாற்றியமைத்தது.

நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் திரு. அன்புச்செழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். வாங்கிய பணத்தை முறையாகத் திரும்பச் செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரைச் சற்று மிகைப்படுத்திச் சித்தரிப்பதாகத் தோன்றுகிறது. திரைப்படத்துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், கடன் வாங்கி படம் எடுத்துதான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள். எனக்கும் கடன் இருக்கிறது. உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று அன்புச்செழியனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். இதன்பிறகுதான் அன்புச்செழியனுக்கு ஆதரவான குரல்கள் அதிகமாகின. 

நடிகை தேவயானி இவ்வாறு புகழ்ந்தார். அன்புச்செழியன் எங்களிடம் நேர்மையாக நடந்து கொண்டார். நாங்களும் நேர்மையாக நடந்து கொண்டோம். அவர் சிறந்த மனிதர். படப்பிடிப்பின்போது அவர் எங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுத்ததில்லை என்றார். 

தரமான இயக்குநர் என்று பெயரெடுத்த இயக்குநர் வெற்றிமாறனின் ஆதரவு அன்புச்செழியனின் ஆதரவுக்குரல்களுக்கு மேலும் வலு சேர்த்தது. என்னுடைய இரு படங்களுக்கு அன்புச்செழியன் ஃபைனான்ஸ் செய்திருக்கிறார். எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார், நிறைய உதவிகளும் செய்துள்ளார். என்னுடைய முதல் படத்துக்கு அவரிடம் பணம் வாங்கி பிறகு திருப்பித் தரும்போது அதற்காக வாங்கிய ஆவணங்கள் அனைத்தையுமே என் மேலாளரிடம் கொடுத்துவிட்டார் என்றார். 

இனிமேல் தமிழ்த் திரையுலகில் கந்துவட்டி இருக்கக்கூடாது. ரெட் கார்டு போட்டு எந்தப் படத்தையும் தடை செய்யக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தார் விஷால். அன்புச்செழியனை முழுமூச்சுடன் எதிர்ப்பதன் மூலம் இவ்விரண்டையும் செய்துகாட்டமுடியும் என்று நம்பினார். ஆனால் அன்புச்செழியன் குறித்த கருத்துகளிலேயே திரையுலகம் இரண்டாகப் பிளந்து நிற்கிறது. இப்பேர்ப்பட்ட அன்புச்செழியனையா கெட்டவன் என்கிறீர்கள், அவர் இல்லாவிட்டால் தமிழ்த்திரையுலம் இயங்காது என்கிறார்கள். மறுபக்கம், தமிழ் சினிமாவின் இந்த அவல நிலைக்குக் காரணமான அன்புச்செழியன் தண்டிக்கப்படவேண்டும், அவர் வீட்டில் ரெய்டு நடக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஒரு திரைப்பட ரசிகர் இதில் எதை நம்புவார்? திரையுலகுக்கு ஃபைனான்ஸ் செய்பவராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் தமிழ்த் திரையுலகில் இயங்கி வருகிறார் அன்புச்செழியன். பல வருடங்களாக அன்புச்செழியன் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் அவர் ஏராளமான நண்பர்களை இத்துறையில் பெற்றுள்ளார். அவர் தயாரித்த படங்களில் விஜய் சேதுபதி, விஷால் போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அன்புச்செழியன் மீது ஒருபக்கம் ஏராளமான புகார்கள் இருந்தாலும் அவர் பலருக்கும் தேவைப்பட்ட சமயத்தில் பணத்தைக் கொட்டிக்கொடுக்கும் நல்லவராகப் பணியாற்றியுள்ளார். தமிழ்த் திரையுலகின் இயக்கத்துக்கு ஒரு முக்கியக் காரணியாக இருந்துள்ளார். அவரைத் தெரியாதவர்களோ அவரிடம் ஃபைனான்ஸ் பெறாதவர்களோ இத்துறையில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்த நபராக வளர்ந்திருக்கிறார். மேலும், அவருக்கு ஏராளமான அரசியல் தொடர்புகள் வேறு. 

சசிகுமார் தரப்பின் நியாயங்கள் மேலும் விரிவாகப் பேசப்படவேண்டியவை. அசோக் குமார் - அன்புச்செழியன் பிரச்னை குறித்து இதுவரை சசிகுமார் விரிவாகப் பேசவில்லை. அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் பல்வேறு அனுபவங்களைப் பகிர்கிறார்கள். பல புள்ளிவிவரங்களை அளிக்கிறார்கள். ஆனால், அன்புச்செழியனுக்கு எதிரான தரப்பு பெரும்பாலும் பொதுவான குற்றச்சாட்டுகளையே முன்வைக்கிறது. இந்த நடிகரை, இந்தத் தயாரிப்பாளரை இதுபோல அன்புச்செழியன் தொந்தரவு செய்தார் என்கிற வெளிப்படையான தகவல்கள் இதுவரை இல்லை. அதை அவர்களால் பகிரமுடியாத நிலையில் அன்புச்செழியனின் ஆதரவுக் குரல்கள் மேலும் வலுவடையும். மேலும் அன்புச்செழியனும் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாகப் பேசவேண்டும். திரையுலகினரின் ஒரு தரப்பினர் மட்டும் அவரை ஏன் பரமஎதிரிகளாகப் பார்க்கிறார்கள், அது யாருடைய தவறு போன்ற முக்கியமான விஷயங்கள் மனம் திறந்து பேசவேண்டியவை.

அன்புச்செழியனையும் கந்துவட்டிக் கொடுமையையும் எதிர்ப்பதில் தமிழ்த் திரையுலகில் ஓர் ஒற்றுமை இல்லை என்பதை மட்டும் கூறமுடியும். இதனால் தயாரிப்பாளர்கள் இதுவரை சந்தித்த பிரச்னைகள் அனைத்தும் இனியும் தொடரும், அடுத்தக் குற்றச்சாட்டுகள் வரும்வரை தமிழ்த் திரையுலகம் அதே பாணியில்தான் இயங்கும். இல்லை, வேறுவழியிருக்கிறதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com