செவிலியர் போராட்டத்தில் கலந்துகொள்ள பிக் பாஸ் ஜூலிக்கு அனுமதி மறுப்பு!

நானும் ஒரு செவிலியர்தான். என்னையும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அனுமதியுங்கள் என்கிற ஜூலியின் கோரிக்கையை காவல்துறையினர் நிராகரித்ததால்...
செவிலியர் போராட்டத்தில் கலந்துகொள்ள பிக் பாஸ் ஜூலிக்கு அனுமதி மறுப்பு!

மருத்துவத் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் கடந்த 2015 -ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சுமார் 11,000 செவிலியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்திடவும், காலமுறை ஊதியம் வழங்கிடவும் வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் 2,000-த்துக்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணாசாலையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை முதலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து டிஎம்எஸ் வளாகத்தில் கடந்த மூன்று நாள்களாகப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.

இந்நிலையில் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள பிக் பாஸ் புகழ் ஜூலி, டிஎம்ஸ் வளாகத்துக்கு இன்று வருகை தந்தார். 

ஆனால், வளாகத்தின் நுழைவு வாயிலிலேயே ஜூலியைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். செவிலியர் போராட்டத்தில் கலந்துகொள்ள ஜூலிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். நானும் ஒரு செவிலியர்தான். என்னையும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அனுமதியுங்கள் என்கிற ஜூலியின் கோரிக்கையை காவல்துறையினர் நிராகரித்ததால் ஜூலி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். 

பிறகு இதுகுறித்து ஜூலி ஒரு பேட்டியில் கூறியதாவது: கூலி வேலை செய்கிறவர்கள் ஒரு நாளைக்கு ரூ. 500 சம்பாதிக்கிறார்கள். ஆனால் செவிலியர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருநாளைக்கு ரூ. 250 தான் கிடைக்கிறது. இது மிகவும் குறைவு என்பதால் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தேன் என்று பேட்டியளித்தார். போராட்டத்தில் பங்கேற்க ஜூலி முன்வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரான ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராகக் களமிறங்கினார். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் இவருடைய கோஷங்கள் வீடியோக்களாக சமூகவலைத்தளங்கில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது, வீரத்தமிழச்சி என்கிற பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக வாட்ஸப்பில் வதந்திகள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒரு பேட்டியில், தான் நலமுடன் உள்ளதாக ஜூலி அறிவித்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அவர் அறிமுகமானது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் உண்டானதால் ரசிகர்களின் ஆதரவை இழந்த ஜூலி, பிறகு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய ஜூலி, இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது. ஆனால் இதையும் மக்கள் நடிப்பு என்று சொல்லிவிட்டால் என்னால் தாங்க முடியாது. உண்மையிலேயே தாங்கமாட்டேன். உணர்வுடன் நம்முடைய உழைப்பாளிகளுக்காக நிற்கும்போது நீ விளம்பரத்துக்காக இதைச் செய்கிறாய் என்றால் நான் தாங்கமாட்டேன். அந்த ஒரே காரணத்துக்காக மட்டும்தான் யோசிக்கிறேன். இல்லையென்றாலும் கூடிய சீக்கிரம் ஒரு களத்தில் இறங்குவேன் என்று கூறினார். இதையடுத்து அரசு மருத்துவமனை செவிலியர் போராட்டத்தில் கலந்துகொள்ள முன்வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com