'பிக் பாஸ்' நிகழ்ச்சியை ஆரவ் வென்றது எப்படி?: சிநேகன் ஆதரவாளர்கள் கேள்வி!

பார்வையாளர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக, யாருக்கு அதிக வாக்குகளோ அவர்தான் வெற்றியாளர் என்றார் கமல்...
'பிக் பாஸ்' நிகழ்ச்சியை ஆரவ் வென்றது எப்படி?: சிநேகன் ஆதரவாளர்கள் கேள்வி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமனும் பெற்றார்கள். 

வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார். 

கடந்த சில மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனை நடிகர் ஆரவ் வென்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சிநேகன் தான் வெல்வார் என்று பலரும் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதத்தில் ஆரவ் ஜெயித்துள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்பு சமூகவலைத்தளங்களிலும் சிநேகனுக்கு ஆதரவான பதிவுகளையே அதிகம் காணமுடிந்தது. பிக் பாஸ் இறுதிப் போட்டியில், சிநேகன், ஆரவ் ஆகிய இருவர் முன்னிலையிலும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் சிநேகனுக்கு ஆதரவாகவே அதிகமாகக் குரல் எழுப்பினார்கள். இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக, 'யாருக்கு அதிக வாக்குகளோ அவர்தான் வெற்றியாளர்' என்று பார்வையாளர்களைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அழுத்தம்திருத்தமாகக் கூறினார் கமல். இந்நிலையில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதால் சிநேகன் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். விஜய் டிவியின் முடிவு குறித்துச் சமூகவலைத்தளங்களில் பலர் தங்களுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பிக் பாஸ் குறித்து ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவுகள் எழுதிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், இறுதிப்போட்டிக்குப் பிறகு சிநேகன் குறித்து தன் ஃபேஸ்புக்கில் எழுதியதாவது: 

சிநேகனுக்கான என் ஆதரவு - அவருக்கு அந்த வீட்டில் இருந்த கமிட்மெண்ட், உழைப்பு... ஆரம்பத்தில் தனக்குத் தெரிந்த நண்பர்களுடன் வளைய வந்தாலும் இடையில் புரிந்துகொள்ளும்போது மற்றவர் குறித்த தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயங்காமல் இருத்தல், அனைவரையும் அனுசரித்துப் போகும் தலைமைப் பண்பு, எல்லோருக்கும் உணவு இருக்கிறதா என பார்த்து பின் கடைசியிலேயே தானும் உண்பது, மன அழுத்தத்தில் யார் இருந்தாலும் அவரை தன் விருப்பு வெறுப்பு பாராமல் ஆற்றுப்படுத்துவது, மற்றவர்கள்- முக்கியமாய் பெண்கள் அவரை நன்றாக உபயோகித்துக்கொண்டு கடைசியில் சந்தர்ப்பம் பார்த்து அழவைத்துவிட்டுப் போயினர். ஆனாலும் தொடர்ந்து மற்றவர்களுக்கு அவர் தன் பலவீனங்களிடையே உதவிக்கொண்டிருந்தது... அல்லது உதவுவதையே பலவீனமாகக் கொண்டவராய் இருந்தது, அவ்வப்போது அடுத்தவர் பற்றிய தன் மனவேதனைகளை பிறரிடம் ஒரு வடிகாலாகப் பகிர்ந்துகொண்டாலும் அதில் வசைச்சொற்களோ அடுத்தவரைக் கவிழ்க்கும் தீவிரத் திட்டங்களோ இல்லாதிருந்தது. அதனாலேயே அது புறம்பேசல் வகையில் சேராது. 

முதல்நாள் முதல் (ஃபைனலுக்கு நேரடியாக கோல்டன் டிக்கெட் வாங்கிவிட்டாலும்) இறுதிநாள் வரை பிக்பாஸ் கொடுக்கும் போட்டிகளில் சின்சியராகப் பங்கெடுத்தல், கீழ்ப்படிதல்... பிக்பாஸ் மற்றும் கமலுக்கு அடங்கியவராகவே சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவராகவே இருந்தது, தன் இருப்பு ஒரு மாதம் ஆனதற்குப் பார்ட்டி கொடுக்கவேண்டும் என்று பிந்து நினைத்தால் சிநேகன் இன்றைக்கு பஜ்ஜி, கேசரி செய்துதருவார் என்று உரிமையோடு உத்தரவு போடமுடிகிறது. சாதா சமையல் முதல் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை, சுண்டல் வரை எல்லாவற்றையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு சலிக்காமல் சளைக்காமல் சமைத்துப்போடுகிறார். சமையல்- மற்ற க்ளீனிங் வேலைகள் போல் செய்தால் செய்யலாம், இல்லாவிட்டால் அப்படியே விடலாம் என்கிற வேலை இல்லை. மூன்று வேளையும் மாற்றி மாற்றி எத்தனை பேர் புதிது புதிதாக வந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து செய்தே ஆகவேண்டிய வேலை. க்ளீனிங் குழு வேலைகளிலும் தன்னுடையதைத் தவிர மற்றவர்களுடையதையும் சேர்த்து செய்யவேண்டியிருந்தது. புலம்பிக்கொண்டேயாவது செய்துமுடித்தார். 

இதைத் தவிர மற்ற போட்டிகள், டாஸ்க்குகளையும் தன்னளவில் மிக சின்சியராகச் செய்கிறார். வெற்றிபெற்ற குழுக்களிலெல்லாம் இவருடைய பங்கே பிரதானமாக இருந்திருக்கிறது. அயர்ன்பாக்ஸுக்கு கரி பற்றவைப்பதிலிருந்து வாசலில் கோலமிடுவது வரை இவருக்குத் தெரியாத வேலையே இருக்கவில்லை. எப்பொழுது திறந்தாலும் அவரது படுக்கை டிராயரில் சீராக அடுக்கப்பட்ட துணிமணிகள், டேபிளில் வரிசையாக அடுக்கப்பட்ட அலங்காரப் பொருள்கள், எப்பொழுதும் எந்தக் காரசாரப் பேச்சு அல்லது சோர்வினிடையேயும் வீட்டின் டைனிங் சேர் தொடங்கி அனைத்தையும் யதார்த்தமாக ஒழுங்குபடுத்திக்கொண்டே இருந்தது என்று எல்லாவற்றிலும் இருந்த அலாதியான நேர்த்தி..... இந்த செயல்பாடுகளை அவ்வப்போது குறிப்பிட்டே பாராட்டியிருக்கிறேன். இப்பொழுதும் ஒரு "வீடு" என்பதில் இருப்பவரில் தலைமைப்பண்புக்கான மிக முக்கியமான அவசியமான தகுதிகள் அனைத்தும் சிநேகனுக்கே இருந்ததாக நம்புகிறேன் என்று சிநேகனுக்கு ஆதரவாக எழுதியுள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில், ஆராம்? ஆரவாம். ஆரு? ஆரவ். ஆரவ்வ்வ்வ்வ்வ்வ்! #அநியாயம் என்று பிக் பாஸ் இறுதிப்போட்டி குறித்த தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

வெற்றியாளர் ஆரவ் ஒரு பேட்டியில், பிக் பாஸ் போட்டியை கணேஷ் வெங்கட்ராமன் அல்லது சிநேகன் ஆகிய இருவரில் ஒருவர்தான் ஜெயிப்பார் என எண்ணினேன். அவர்கள் இருவரும் கடுமையான சவாலை அளிக்கும் போட்டியாளர்களாக இருந்தார்கள். எல்லா டாஸ்க்குகளிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார்கள். என்னுடன் பிக் பாஸில் இருவரும் நீண்டநாள் பயணிப்பார்கள் என எண்ணினேன். அதுதான் நடந்தது. அவர்கள் போட்டியில் ஜெயித்திருந்தாலும் நான் சந்தோஷப்பட்டிருப்பேன் என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளின் இறுதிப் போட்டிகள் எப்போதும் பரபரப்பையும் சர்ச்சைகளையும் உண்டு பண்ணுபவை. அரவிந்தாக்‌ஷன் சூப்பர் சிங்கராகத் தேர்வு செய்யப்பட்டபோது பெரிய சர்ச்சை ஒன்று வெடித்தது. அதேபோல பிக் பாஸ் சீஸன் 1 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் முடிவும் சர்ச்சைக்குரியதாக அமைந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com