விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம். ஆனால்...: தயக்கத்தை வெளிப்படுத்தும் ‘பிக் பாஸ்’ ஜூலி!

அந்த ஒரே காரணத்துக்காக மட்டும்தான் யோசிக்கிறேன். இல்லையென்றாலும் கூடிய சீக்கிரம்...
விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம். ஆனால்...: தயக்கத்தை வெளிப்படுத்தும் ‘பிக் பாஸ்’ ஜூலி!

விவசாயிகளின் போராட்டத்தில் தன்னால் கலந்துகொள்ளமுடியாமல் போனாலும் வேறொரு களத்தில் என்னைச் சந்திக்கலாம் என்று ‘பிக் பாஸ்’ ஜூலி பேட்டியளித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள்.

இந்தப் போட்டியில் கலந்துகொண்டு பாதியில் வெளியேறிய ஜூலி, இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது. ஆனால் இதையும் மக்கள் நடிப்பு என்று சொல்லிவிட்டால் என்னால் தாங்க முடியாது. உண்மையிலேயே தாங்கமாட்டேன். உணர்வுடன் நம்முடைய உழைப்பாளிகளுக்காக நிற்கும்போது நீ விளம்பரத்துக்காக இதைச் செய்கிறாய் என்றால் நான் தாங்கமாட்டேன். அந்த ஒரே காரணத்துக்காக மட்டும்தான் யோசிக்கிறேன். இல்லையென்றாலும் கூடிய சீக்கிரம் ஒரு களத்தில் இறங்குவேன் என்று கூறியுள்ளார். 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரான ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராகக் களமிறங்கினார். 

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் இவருடைய கோஷங்கள் வீடியோக்களாக சமூகவலைத்தளங்கில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது, வீரத்தமிழச்சி என்கிற பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக வாட்ஸப்பில் வதந்திகள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒரு பேட்டியில், தான் நலமுடன் உள்ளதாக ஜூலி அறிவித்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அவர் அறிமுகமானது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. தொடக்க விழாவின்போது, இந்த நிகழ்ச்சியின் மூலமாகப் புதிய குடும்ப உறுப்பினர்களைப் பெறப்போகிறேன் என்று நட்புணர்வுடன் பதில் அளித்து கமலிடம் பாராட்டுப் பெற்றார் ஜூலி.

ஆரம்பம் முதல், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக அதிகம் விவாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஜூலி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தலைவர்களை விமரிசித்தது ஏன் என ஜூலியிடம் காயத்ரி ரகுராமும் ஆர்த்தியும் கேள்வி எழுப்பி நெருக்கடி அளித்தது நிகழ்ச்சியில் பரபரப்பை உண்டாக்கியது.

நிகழ்ச்சியில் பல சந்தர்ப்பங்களில் - தான் ஒரு சாதாரண பெண், மற்ற போட்டியாளர்களைப் போல எந்த சினிமா பின்புலமும் இல்லாதவள், இதனால் நான் ஜெயித்துவிடுவேன் என மற்றவர்கள் நினைக்கிறார்கள் எனப் பேசினார் ஜூலி. ஆனால், அந்நிகழ்ச்சியில் திடீரென ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் உண்டானதால் ரசிகர்களின் ஆதரவை இழந்த ஜூலி, பிறகு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com