பத்மாவதிக்காக முழு அலாவுதீன் கில்ஜியாக மாறி விட்ட ரன்வீர் சிங்கைப் பாருங்கள்!

சுல்தான் அலாவுதீன் கில்ஜி, அழகானதெல்லாம் சுல்தானுக்கே சொந்தம், எனவே உன் மனைவியை என் அந்தப்புரத்துக்கு அனுப்பி வை என ராஜபுத்திர மன்னன் ரத்தன் சிங்குக்கு ஓலை அனுப்புகிறார்.
பத்மாவதிக்காக முழு அலாவுதீன் கில்ஜியாக மாறி விட்ட ரன்வீர் சிங்கைப் பாருங்கள்!

அலாவுதீன் கில்ஜி யார் என்று தெரியும் தானே?

கில்ஜி வம்ச மன்னர். வட இந்தியாவை ஆண்ட துருக்கிய, ஆஃப்கானிய கலப்பின சுல்தான் வம்சங்களில் கில்ஜி வம்சமும் ஒன்று. அவர்களில் வரலாற்றில் இடம்பெற்ற சிறப்பு பிறிதெவரையும் விட அலாவுதீன் கில்ஜிக்கே அதிகமுண்டு. இவரது படைத்தலைவர் மாலிக்கபூரும் கூட தனது கொடுங்கோன்மையால், இந்திய சரித்திரத்தில் அலாவுதீன் கில்ஜிக்கு நிகரான இடத்தைப் பெற்றவராகிறார்.

எத்தனை கொடுங்கோலனாக இருந்தாலும் கூட போர்க்களத்தில் மிக்க கொடூரமானவர்களாகக் கருதப்பட்ட மங்கோலியர்களை இந்தியாவின் எல்லைப்புறங்களில் இருந்து ஒரேயடியாகத் துரத்திச் சென்று துருக்கியின் ஆசியா மைனர் பகுதிக்கு அப்பால் விரட்டி அடித்த பெருமை அலாவுதீன் கில்ஜியையே சேரும். தனது போரிடும் முறைகளிலாகட்டும், ஆட்சி அதிகாரத்திலாகட்டும், எல்லைப் பிரச்னைகளிலாகட்டும், தனக்கு கப்பம் கட்டும் ராஜபுத்திர அரசர்களைக் கையாள்வதிலாகட்டும் எல்லாவற்றிலுமே மிகுந்த திட்டமிடுதலுடன் ஈடுபட்டு வெற்றியை மட்டுமே ருசிக்கத் துடித்த அலாவுதீன் கில்ஜியை இந்திய வரலாறு நினைவு கூர்வது அவற்றுக்காக மட்டுமல்ல. பெரும்பாலும் அலாவுதீன் கில்ஜி என்றதும் நம் அனைவருக்குமே மாலிக்கபூரைக் காட்டிலும் சட்டென உடனடியாக நினைவில் நிழலாடக் கூடியவர் சித்தூர் ராணி பத்மினி.

ஆம், அலாவுதீன் தனது திட்டமிடலில் முற்றிலும் தோற்றுப் போனது அந்த ராஜபுத்திர அரசியிடம் தான்.

சித்தூர் ராணியும், ராஜபுத்திர மன்னன் ராவல் ரத்தன் சிங்கின் மனைவியுமான பத்மினியின் அழகு அன்றைக்கு இந்தியா முழுவதும் பிரசித்தமானது. சித்தூர் ராணி பத்மினியின் அழகை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவளது அழகின் மாண்பைப்பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜி,

‘அழகானதெல்லாம் சுல்தானுக்கே சொந்தம், எனவே உன் மனைவியை என் அந்தப்புரத்துக்கு அனுப்பி வை’

- என ராஜபுத்திர மன்னன் ரத்தன் சிங்குக்கு ஓலை அனுப்புகிறார். ராஜபுத்திரர்கள் வீரத்துக்கு மட்டுமல்ல வீர மரணத்துக்கும் கூட இந்திய வரலாற்றில் பெயர் போனவர்கள். அவர்களா... இந்த சுல்தானின் வேண்டுகோளையும், மிரட்டலையும் மதிக்கக் கூடியவர்கள்?! சுல்தான் நச்சரிக்க, ராஜபுத்திரர்கள் மறுக்க... முடிவில் பெரும் போர் மூண்டது. போரில் தோற்ற ராஜபுத்திர அரசர்களும், இளவரசர்களும் போர்க்களத்தில் தங்கள் வாளால் சிரசை அறுத்துக் கொண்டு மாள. சுல்தானின் படை எக்காளமிட்டுக் கொண்டு சித்தூர் கோட்டைக்குள் ராணியையும், அந்தப்புரப் பெண்களையும் சிறையெடுக்க அசுர வேகத்தில் குதிரையில் விரைகிறது.

இங்கே தான் அலாவுதீன் எதிர்பார்த்திராத மாபெரும் சோகம் நிகழ்ந்து விடுகிறது.

சுல்தானின் ஆசைக்கு இணங்க சற்றும் விருப்பமற்ற ராணி பத்மினி மிகுந்த மன உரத்துடன் தன்னுடனிருந்த மொத்த அந்தப்புரத்துப் பெண்களையும் இணைத்துக் கொண்டு நெருப்பில் குதிக்க முடிவு செய்து விடுகிறார். முடிவில் வெற்றிக் களிப்பில் ராணியைச் சிறையெடுக்க ஓடோடி வந்த சுல்தானை வானை முட்டி உயர்ந்தெழுந்து ஆடிய மாபெரும் தீச்சுவாலைகள் தான் வரவேற்றன. திகைத்துப் போன சுல்தானை நோக்கி சிதைக்குள் இருந்து வெளிவந்தன ராணி பத்மினியின் நெஞ்சுரம் மிக்க வார்த்தைகள். இது தான் ராஜபுத்திரப் பெண்கள் சுல்தானுக்கு அளிக்கும் பரிசு என! சித்தூரின் மிகப்பெரிய சோக நிகழ்வாக இன்றளவும் இந்த நிகழ்வு நினைவு கூரப்படுகிறது. அன்றைக்கு ராணி பத்மினியுடன் சிதையில் இறங்கியவர்கள் மொத்தம் 74,500 அந்தப்புரப் பெண்கள். அத்தனை பெண்களையும் ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது அலாவுதீனின் கொடுங்கோன்மை.

ஆகவே தான் அதை நினைவு கூரும் வகையில்,

சுவாமி விவேகானந்தர் காலத்தில் கடிதம் அனுப்பும் போது மிகவும் அந்தரங்கம் என்பதைக் குறிக்க 74 1/2 என்று கடிதத்தின் மீது முத்திரையிட்டு அனுப்பும் வழக்கம் இருந்ததாம். அதன் பொருள், அனுமதியின்றி அக்கடிதங்களை யாரும் திறந்து படிக்கக் கூடாது என்று அர்த்தமாம்.

தங்களது விருப்பமின்றி, அனுமதியின்றி தங்களைச் சிறையெடுக்க வந்த அந்நியனுக்கு ராஜபுத்திரப் பெண்கள் அளித்த மாபெரும் பரிசான கூட்டுத் தற்கொலையை நினைவு கூறும் வகையில் கடிதங்களைக் கையாள்வதில் இப்படி ஒரு முறை, அந்நாளில் பின்பற்றப் பட்டு வந்திருக்கிறது என்பதே ஆச்சர்யமான சங்கதி தான்!

சரி இனி தலைப்புக்கு வருவோம்.

‘பாஜிராவ் மஸ்தானி’ திரைப்படப் புகழ் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த திரைப்படமான ‘பத்மாவதி’ யில் சித்தூர் ராணி பத்மினியாக, நடிகை தீபிகா படுகோன் நடித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதே திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங் நடிக்கவிருப்பதாக முன்னதாகச் செய்திகள் வெளியாகி இருந்தாலும், கில்ஜி வேடத்தில் ரன்வீர் எப்படி இருப்பாரோ? என்றொரு ஐயமிருந்தது. இதோ தனது ரசிகர்களின் ஐயத்தைப் போக்க அந்த முரட்டு மன்னனின் வேடத்தில் ரன்வீர் சிங் தனது புதிய புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். 

அட... அட மராட்டிய பேஷ்வா பாஜிராவாகட்டும், சுல்தான் அலாவுதீனாகட்டும் ரன்வீர் சிங் கன கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்.

முழுமையாக அலாவுதீன் கில்ஜியாகவே மாறி விட்ட ரன்வீர் சிங்கைப் பாருங்கள்.

Image & Concept courtesy: wikipedia, twitter.com.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com