சோலோ படத்தை வெட்டிச் சாகடிக்காதீர்கள்; நடிகர் துல்கர் சல்மான் உருக்கமான வேண்டுகோள்!

படத்தை வெட்டி, இஷ்டத்துக்கு மாற்றுபவர்கள் படத்தைச் சாகடிக்க உதவுபவர்களே...
சோலோ படத்தை வெட்டிச் சாகடிக்காதீர்கள்; நடிகர் துல்கர் சல்மான் உருக்கமான வேண்டுகோள்!

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், தன்ஷிகா, நேகா, ஸ்ருதி ஹரிஹரன் போன்றோர் நடித்துச் சமீபத்தில் வெளியான படம் சோலோ. மலையாளத்தில் உருவான இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இந்தப் படத்தின் கடைசிக் காட்சி மாற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் துல்கர் சல்மான், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது:

சோலோ படம் நான் நினைத்ததை விடவும் நன்றாக வந்துள்ளது. அதன் ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன். இயக்குநர் பிஜாய் நம்பியார் மனத்தில் வைத்திருந்த அசல் வடிவம் இது. இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் என்பதால் வசன ரீதியாகச் சில பிரச்னைகள் இருந்தன. ஆனால், எனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. இப்படி ஒரு படம் கிடைத்தால் இதுபோல மீண்டும் உழைக்கத் தயார். குறைந்த பட்ஜெட்டில் இப்படியொரு படம் எடுக்க எங்கள் உழைப்பைச் சிந்தி படத்தை உருவாக்கியுள்ளோம்.

சார்லி, பெங்களூர் டேஸ் போல ஏன் சோலோ இல்லை எனக் கேட்கிறார்கள். இந்தப் படத்தில் நான் ஏன் நடித்தேன், தவிர்த்திருக்கலாமே என்று கேட்கிறார்கள். எனக்கு இப்படிப்பட்ட படங்களில் நடிப்பது பிடித்திருக்கிறது. வித்தியாசமான படங்களில் நடிக்க விருப்பம் கொள்கிறேன். வித்தியாசம் - சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தைதான்.  ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு தரப்புக்கும் மட்டும் வித்தியாசமான படங்களைப் பிடிப்பதில்லை. கிண்டல் செய்கிறார்கள். 

இந்த உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஏராளமான கதைகள் உள்ளன. செய்திகளில் இருந்தும் பார்க்கும் மக்களில் இருந்தும் நான் கதைகளைத் தேடுகிறேன். எந்தக் கதையையும் சொல்லும் துணிச்சலை ரசிகர்கள் எனக்குத் தந்துள்ளார்கள் என எண்ணுகிறேன். ஒரு அசல் கதையை நன்றாகச் சொன்னால் நீங்கள் கொண்டாடுவீர்கள். 

சோலோ படத்தில் இடம்பெற்ற ருத்ரா கதாபாத்திரத்தை நான், நாசர் சார், ஹாசினி மேடம், நேஹா என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்தோம். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை அனைவரும் கிண்டல் செய்கிறபோது என் மனம் உடைகிறது. ஹாசினியின் கதாபாத்திரம் ருத்ரா கதாபாத்திரத்திடம் உண்மையைச் சொல்லும் காட்சி, என் வாழ்க்கையில் நான் கண்ட மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்றாக இருந்தது. அது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் காட்சியில் மக்களுடன் சேர்ந்து சிரிக்கிறார்களா, அல்லது எங்களைப் பார்த்து சிரிக்கிறார்களா என்று தெரியவில்லை. டார்க் வகை காமெடி அப்படித்தான் இருக்கும். ஆனால் அதை நக்கலடித்து, படத்தை வெறுத்து தரக்குறைவாகப் பேசுவது படத்தைச் சாகடிக்கவே செய்கிறது. எங்கள் இதயத்தை உடைக்கிறது. இதுவரை நீங்கள் அளித்த தைரியத்தை அழிக்கிறது. 

எனவே கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன். சோலோ படத்தைச் சாகடிக்காதீர்கள். திறந்த மனத்துடன் அந்தப் படத்தைப் பாருங்கள். கண்டிப்பாக ரசிப்பீர்கள். படத்துக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் படத்தை வெட்டி, இஷ்டத்துக்கு மாற்றுபவர்கள் படத்தைச் சாகடிக்க உதவுபவர்களே என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com