தமிழ் சினிமாவின் கதி என்னவாகும்?

மீம்ஸ்களையும் ஜோக்குகளையும் படித்து வேதனையுடன் சிரிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.
தமிழ் சினிமாவின் கதி என்னவாகும்?

சமீபத்தில் படித்த மீம்ஸ் இது -

ஆட்டோக்காரர் (மற்றொரு ஆட்டோகாரரிடம்) - அவங்க ரொம்ப வசதியான குடும்பம் போலருக்கு....எங்க போகணும்னு கேட்டா தியேட்டருக்குன்னு சொல்றாங்க...

***
இனிமே தியேட்டருக்கு போகும் ஒரே ஒருத்தர் தமிழ் ராக்கர்ஸ் மட்டுமா தான் இருக்கும்....

***

திரையரங்கு என்பது வெறும் பொழுதுபோக்குக்கான ஒரு இடம் மட்டுமல்ல. அது மக்களின் வாழ்வியலுடன் கலந்துவிட்ட ஒன்றாகும். எந்தத் தரப்பு மக்களாக இருந்தாலும் சரி அவர்களது கவலைகள் பிரச்னைகளை சில மணி நேரமாவது மறக்க புகலிடமாக திரையரங்கை தேர்வு செய்வார்கள். இளைஞர்களுக்கு அது இன்னொரு வாசஸ்தலம். நண்பர்களுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க தியேட்டரைப் போலச் சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. காதலர்களின் கோட்டை என்றால் அது காலம் காலமாக தியேட்டர்கள் தான். சென்னையில் குடும்பமாக வெளியே செல்லலாம் என்று முடிவு செய்தால் முதலில் நினைவுக்கு வரும் இடம் திரையரங்குதான். அதன் பின்னர் தான் பீச், பார்க் எல்லாம். இப்படி பெரும்பான்மை மக்களின் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ள திரையரங்குகள் சமீப காலமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக் கனியாகிக் கொண்டிருப்பது சோகம்.

சில ஆண்டுகளுக்கு முன் லாபம் இல்லை என தமிழகத்தில் பல திரையரங்குகள் இடிக்கப்பட்டன. சில திரையரங்குகள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் திருமண மண்டபங்கள் அல்லது ப்ளாட்டுகள் கட்டப்பட்டன. கிராமங்களைப் பொருத்தவரையில் டெண்டு கொட்டாய் எல்லாம் என்றோ மூட்டைக் கட்டுப்பட்டு நவீன தியேட்டர்கள் வந்தன. அதன் பின் அதுவும் லாபமில்லை என்ற நிலைவந்ததும் இடிக்கப்பட்டன.மிக சில ஆனால் மீண்டும் புத்துயிர்ப்பாக மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் நகரங்களில் கட்டப்பட்டுவந்தன. ஆனால் அது எளிவர்களை நிராகரித்தே வந்தது. அத்திரையரங்குகளின் கட்டணம் சாமான்யர்களை கவனம் வைத்து நிர்ணயிக்கப்படவில்லை. இப்படி தொடர் நிராகரிப்புக்கு உள்ளானவர்களால் தான் திருட்டு டிவிடி கோலோச்சத் தொடங்கியது. 

தற்போது சென்னையில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 15, அதிகபட்சக் கட்டணம் ரூ. 150 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ. 120 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ. 150 ஆகவும், ரூ. 95 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.118.80 ஆகவும், ரூ. 85 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.106.30 ஆகவும், ரூ.10 ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.15-ஆகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள கட்டணத்தில் 25 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தான் இந்த விலை உயர்வு. 

இப்படி திரையரங்குகளில் டிக்கெட்டின் விலை அதிகரித்துக் கொண்டே போகுமெனில் மக்கள் அங்கு செல்வதைத் தவிர்த்து, தொலைக்காட்சி அல்லது வேறு ஊடகங்களை தஞ்சம் அடைந்துவிடுவார்கள்.  ஏற்கனவே தொலைக்காட்சி சீரியலில் தொலைந்து போயிருந்த பெண்கள் கூட்டம் இந்தத் திரையரங்குக் கட்டண உயர்வுக்குப் பிறகு நிச்சயம் திரை அரங்குப் பக்கம் திரும்பவே மாட்டார்கள். காரணம் தியேட்டருக்கு குடும்பத்துடன் படம் பார்க்க வேண்டுமென்றால் இரண்டாயிரம் ரூபாய் செலவாகும். அது ஒரு மினி சுற்றுலாவைப் போல பட்ஜெட் போட்டு அவ்வளவு அத்தியாவசியமாக அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா, அது எப்படியானாலும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி சானலில் விரைவில் வெளிவந்துவிடும் என்று பொறுமையாக காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். விளம்பரங்களுக்கு இடையே ஒரு சினிமாவைப் பார்க்கும் தலைவிதிதான் மத்தியதர வர்க்கத்துக்கு விதிக்கப்படுகிறது. 

இது தொடருமானால் திரைத்துறைக்குத் தான் ஆபத்து. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது போல படங்கள் எடுக்கப்படும் வேகத்தில் தொலைக்காட்சி அல்லது மாற்று ஊடகத்தில் (இணையம்) வெளியிடப்பட வேண்டிய நிலைதான் வரும். விழிப்புணர்வுடன் செயல்பட்டு திரையரங்குகளுக்குச் செல்லும் பழக்கத்தை தக்க வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் நல்லது. இல்லையெனில் மேற்சொன்ன மீம்ஸ்களையும் ஜோக்குகளையும் படித்து வேதனையுடன் சிரிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com