நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 2 வாரம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று...
நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

நடிகர் சந்தானத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

நடிகர் சந்தானம் மற்றும் அவரது நண்பரும் கட்டட ஒப்பந்ததாரருமான சண்முகசுந்தரமும் சேர்ந்து திருமண மண்டபத்துடன்கூடிய அடுக்குமாடி கட்டடத்தை கட்டி வந்தனர். இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. சந்தானம் தான் கொடுத்த பணத்தை சண்முகசுந்தரத்திடம் திருப்பி கேட்டுள்ளார். இந்தப் பிரச்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் சண்முகசுந்தரம், அவரது நண்பர் பிரேம் ஆனந்த் ஆகியோரை சந்தானம் தரப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், நடிகர் சந்தானத்தின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது எனக் கோரி, நடிகர் சந்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு விவரம்: என் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சண்முகசுந்தரம் என்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, கட்டடமும் கட்டித் தரவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. இந்நிலையில் பேச்சுவார்த்தைக்குச் சென்ற போது அவர்கள்தான், என் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் கொடுத்த புகாரின் பேரில் சண்முகசுந்தரம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளிலிருந்து அவர்கள் தப்பிக்கவே, என் மீது பொய்யான புகார் அளித்துள்ளனர். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஆதிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தாக்கப்பட்ட வழக்குரைஞர் பிரேம் ஆனந்தையும் இந்த வழக்கில் சேர்க்கவும், சந்தானத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் பிரேம் ஆனந்தைச் சேர்க்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, தாக்கப்பட்ட பிரேம் ஆனந்த் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெரிவிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் நடிகர் சந்தானத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. சந்தானம், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 2 வாரம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com