மெர்சல் பட விவகாரம்: தமிழ் பண்பாட்டை மதிப்பிழக்க செய்ய வேண்டாம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து விமர்சித்ததால் பாஜகவின் எதிர்ப்பைச் சந்தித்துள்ள "மெர்சல்' திரைப்படத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், முன்னாள் நிதியமைச்சர் ப. சி
மெர்சல் பட விவகாரம்: தமிழ் பண்பாட்டை மதிப்பிழக்க செய்ய வேண்டாம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து விமர்சித்ததால் பாஜகவின் எதிர்ப்பைச் சந்தித்துள்ள "மெர்சல்' திரைப்படத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்து, அண்மையில் வெளியான "மெர்சல்' திரைப்படத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசால் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பை விமர்சிக்கும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஜிஎஸ்டி குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதால் அந்த வசனங்களை திரைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாஜக-வின் மூத்த தலைவர் ஹெச். ராஜாவும், "மெர்சல்' திரைப்பட வசனங்கள் மூலம் மோடியின் மீதான வெறுப்பை நடிகர் "ஜோசப்' விஜய் வெளிக்காட்டியுள்ளதாக சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

திரு. மோடி அவர்களே, திரைப்படம் என்பது தமிழ் கலாசாரத்தையும், மொழியையும் ஆழமாக வெளிப்படுத்தும் சாதனம் ஆகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது போல, "மெர்சல்' திரைப்படத்தில் தலையிடுவதன் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டுவிடாதீர்கள் என்று அந்தப் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் சுட்டுரை வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: 

"மெர்சல்' படத்தின் வசனங்களை நீக்க வேண்டுமென்று பாஜக வலியுறுத்தி வருகிறது. அந்தப் படத்துக்கே இந்த கதியென்றால், "பராசக்தி' திரைப்படம் இன்று வெளியாகியிருந்தால் அதன் நிலைமை என்னவாகியிருக்கும்?

திரைப்படத் தயாரிப்பாளர்களே, நீங்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசும் ஆவணப் படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்று விரைவில் உத்தரவு வந்தாலும் வரலாம் என்று ப. சிதம்பரம் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.


விமர்சனங்களை நசுக்க முயலும் பாஜகவின் முயற்சி ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது. திமுக எப்போதும் கருத்துச் சுதந்திரத்துக்கும், படைப்புச் சுதந்திரத்துக்கும் ஆதரவாக இருக்கும்.


-திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
 

அண்மைக் காலமாக தமிழக பாஜக தலைவர்கள் பலரையும் மிரட்டும் வகையில் பேசி வருவது கண்டனத்துக்குரியது. நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் குரல் எழுப்புகின்றனர். விடுதலைப் போராட்டம் முதல் திரைப்படங்களில் அரசியல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் கொள்கைகளை விமர்சிக்கக் கூடாது என்று பாஜக தலைவர்கள் பேசி வருவது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்கும் செயலாகும். 

- இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்)


தேவையற்ற விமர்சனங்களால் மெர்சல் படத்துக்கு கூடுதல் விளம்பரங்களை பாஜகவினர் அளித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. நடிகர் விஜயை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவினர் இவ்வாறு ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

- தொல்.திருமாவளவன் (விசிக)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com