எவ்வித வெட்டுமின்றி தெலுங்கு மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ்: தணிக்கை வாரியம்

ஒரு நேரடிப் படத்துக்கு முதல்முறையாகச் சான்றிதழ் அளிக்கப்படும்போது எவ்வளவு காலம் பிடிக்குமோ அதேதான் டப்பிங் படத்துக்கும்...
எவ்வித வெட்டுமின்றி தெலுங்கு மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ்: தணிக்கை வாரியம்

மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்தி படத்துக்குச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என தணிக்கை வாரியத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். 

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றங்களில் மெர்சல் படம் தொடர்பாக வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பு - அதிரிந்தி (Adirindhi) இன்று வெளியாவதாக இருந்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தணிக்கையில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் நீக்கப்படவேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. தணிக்கைக் குழுவின் கோரிக்கையை ஏற்று தெலுங்கு மெர்சலில் ஜிஎஸ்டி வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், தேனாண்டாள் பட நிறுவனத்தைச் சேர்ந்த அதிதி ரவிந்தர்நாத் இதுபற்றி ட்விட்டரில் கூறியதாவது: அதிரிந்தி படத்தின் தணிக்கைப் பணிகள் இயல்பாக, முறைப்படி நடைபெற்று வருகின்றன. வசனங்களை நீக்குவது குறித்த செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஒரு நேரடிப் படத்துக்கு முதல்முறையாகச் சான்றிதழ் அளிக்கப்படும்போது எவ்வளவு காலம் பிடிக்குமோ அதேதான் டப்பிங் படத்துக்கும் தேவைப்படும். தணிக்கை வாரியத்தின் இணையத்தளத்தில் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறை குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்துக்கும் எவ்வளவு காலமாகும் என்கிற தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. தெலுங்குப் படச் சான்றிதழ் குறித்து மெர்சல் படக்குழுவுக்கு எவ்விதத் தகவலும் செல்லவில்லை. எனில் பட வெளியீடு தள்ளிப்போனதற்கு எங்களை ஏன் குறை சொல்லவேண்டும்? தெலுங்கு மெர்சல் படத்துக்கு எவ்வித வெட்டும் இல்லாமல் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

தமிழில் வெளியானதுபோலவே தெலுங்கிலும் மெர்சல் படம் அக்டோபர் 18 அன்று வெளியாக இருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் இதுவரை வெளிவராமல் உள்ளது. வசூலில் சாதனை படைத்து வரும் மெர்சல், விஜய் படங்களில் ரூ. 200 கோடியைத் தொடவுள்ள முதல் படம் என்கிற பெருமையை அடையவுள்ளது. அதேபோல தெலுங்கு மெர்சலும் வசூலில் சாதனை படைக்குமா என்கிற ஆவல் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com