கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும்: 2.0 விழாவில் ரஜினி பேச்சு

ஒரு வாய்ப்பு கிடைப்பது கடினம். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால்...
கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும்: 2.0 விழாவில் ரஜினி பேச்சு

இந்தியாவில் 2.0 படம் போல இன்னொரு படம் எடுக்கமுடியும் என்றால் அது ஷங்கரால் தான் முடியும் என 2.0 விழாவில் ரஜினி பேசியுள்ளார்.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றியுள்ளார்கள். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.

2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் நேற்று நடைபெற்றது. படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. அவற்றில் இரு பாடல்கள் வெளியிடப்பட்டன.

துபையில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினி தமிழில் பேசினார். அவர் பேசியதாவது:

ரஜினியாக வாழ்வது, கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை வைத்ததால் சுலபமாக உள்ளது. 40 வருட சினிமா வாழ்க்கை எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. நாலு வருடம் போலத்தான் உள்ளது. மக்களின் அன்புதான் எல்லாவற்றுக்கும் காரணம். 

ஷங்கர் மேலுள்ள நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் நடித்தேன். இந்தப் படத்துக்காக நான் மிகவும் கஷ்டப்பட்டதாக ஷங்கர் கூறியுள்ளார். ஒரு வாய்ப்பு கிடைப்பது கடினம். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நம்மை விட ஒரு முட்டாள் இருக்கமுடியாது. ஒருவர் பெயர், புகழுடன் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் திறமை, கடின உழைப்பு மட்டுமல்ல, அவருக்குக் கிடைத்த வாய்ப்புகளும்தான். வாய்ப்புகள் சிலருக்குத்தான் வரும். இல்லாவிட்டால் நாம்தான் வாய்ப்பை உருவாக்க வேண்டும். அந்த வாய்ப்பு அடுத்தவர்கள் வயிற்றில் அடிக்காமல் நியாயமானதாக நேர்மையாக இருக்கவேண்டும்.

நல்ல படங்களை ஆதரியுங்கள். படத்தில் நல்லது இருந்தால் அதன் கலைஞர்களைப் பாராட்டுங்கள். படம் சுமாராக இருந்தால் மற்றவர்களின் மனம் நோகும்படி சமூகவலைத்தளங்களில் விமரிசனம் செய்யாதீர்கள எனக் கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நமது கலாசாரத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். 

துபைக்கு முதல்முறையாக வந்துள்ளேன். விமானம் மாறுவதற்காக துபை விமானநிலையம் வரை வந்துள்ளேன். ஆனால் அதற்கு வெளியே போனதில்லை. தென்கிழக்கு ஆசியாவில் துபை என்பது, அமெரிக்கா போல. இந்தியர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துபை அரசுக்கும் அரசருக்கும் ஓர் இந்தியனாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

எனக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஒரு பந்தம் உண்டு. அது தொடர்ந்துகொண்டிருக்கிறது. பேருந்து நடத்துநராக இருந்தபோது ஓட்டுநர்கள், நடத்துநர்களில் பலர் இஸ்லாமியர்கள்தான். எனவே என் நண்பர்களாக அவர்கள்தான் இருந்தார்கள். சென்னைக்கு வந்தபோது ஒரு நண்பரின் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாகத் தங்கியிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இஸ்லாமியர்தான். பிறகு போயஸ் கார்டனில் சொந்த வீடு வாங்கினேன். அந்த வீடும் ஒரு இஸ்லாமியரிடமிருந்துதான் வாங்கினேன். நான் ஒரு சொத்து வாங்கினேன். அதுவும் ஒரு இஸ்லாமியருடையதுதான். ராகவேந்திர மண்டபமும் ஒரு இஸ்லாமியரிடமிருந்து வாங்கியதுதான். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன். ஆனால் ஒரு படத்தின் பெயரைச் சொன்னாலே அதிரும். பாட்ஷா (பலத்த கைத்தட்டல்). ஆக, எனக்கும் இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் இடையே ஏதோ ஒரு பந்தம் உள்ளது.     

2.0 பட வாய்ப்பை அளித்த ஷங்கர், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோருக்கு நன்றி. சுபாஷ்கரனுக்குப் படங்கள் மூலம் சம்பாதிக்கவேண்டும் என்கிற எண்ணம் கிடையாது. பணம் சம்பாதிக்க அவருக்குப் பல தொழில்கள் உண்டு. இந்தியாவில் நல்ல படம், இந்திய மண்ணில் இதுவரை எடுக்காத ஒரு படம் என்கிற நோக்கத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான் என எல்லோரும் இந்தப் படத்துக்கு அமைந்தது தெய்வ சங்கல்பம். 2.0 போல இன்னொரு படம் இந்தியாவில் வருமா என எனக்குத் தெரியாது. ஆனால் அப்படியொரு படம் எடுக்க ஷங்கரால் முடியும்.

இது ஹாலிவுட் படங்களுக்கு நிகரானது என்று நாங்களே பெருமையடித்துக் கொள்ளக்கூடாது. படம் பார்க்கும் நீங்களே அதை உணர்வீர்கள். நெ.1. ஹாலிவுட் கலைஞர்கள் இதில் பணிபுரிந்துள்ளார்கள். ஷங்கர் சொன்னதற்காக, கதை கேட்ட பிறகு தேதிகளை மாற்றியமைத்து இதில் பணிபுரிய ஒப்புக்கொண்டார்கள் என்றால் இப்படத்தின் கதை எப்படி இருக்கும் என எண்ணிக்கொள்ளுங்கள் எனப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com