அமலா பால் மட்டுமல்ல, வரி ஏய்ப்பு செய்த மற்றொரு பிரபல நட்சத்திரம்!

அமலா பால் வரி ஏய்ப்பு செய்த விவகாரம் வெளியானதையடுத்து கேரளப் பிரபலங்களின் வாகனங்களைச் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது...
அமலா பால் மட்டுமல்ல, வரி ஏய்ப்பு செய்த மற்றொரு பிரபல நட்சத்திரம்!

அமலா பால் வரி ஏய்ப்பு செய்த விவகாரம் வெளியானதையடுத்து கேரளப் பிரபலங்களின் வாகனங்களைச் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல நடிகை அமலா பால் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ் கிளாஸ் வகை பென்ஸ் காரை வாங்கினார். ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட பென்ஸ் காரை கேரளாவில் பதிவு செய்யாமல் புதுச்சேரி முகவரி கொடுத்துப் பதிவு செய்துள்ளார். ஆனால் அமலா பால் அளித்துள்ள புதுச்சேரி முகவரியில் பொறியியல் கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். எனவே அமலா பால் அளித்துள்ளது போலியான முகவரி எனத் தெரிய வந்துள்ளது. அந்த முகவரியில் தங்கியுள்ள மாணவர், தனக்கும் அமலா பாலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார். 

புதுச்சேரியைச் சொந்த மாநிலமாகக் கொண்ட ஒருவர் மட்டுமே புதுச்சேரியில் பதிவு செய்யமுடியும். இதனால் போலி முகவரி அளித்து கேரளாவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது. கேரளாவில் உள்ள அமலா பால், புதுச்சேரி முகவரியை அளித்து ரூ. 20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது விழுந்துள்ளது. புதுச்சேரியில் ரூ. 20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பு கொண்ட கார்களுக்கு ரூ. 55 ஆயிரம் சாலை வரி செலுத்தினால் போதுமானது. அதேசமயம், கேரளாவில் காரின் மதிப்பில் 20 சதவிகிதத்தை சாலை வரியாக அளிக்கவேண்டும். எனவே அமலா பால் வாங்கிய பென்ஸ் காருக்கு கேரளாவில் ரூ. 20 லட்சம் வரை வரி செலுத்தவேண்டியிருக்கும். இதனால் புதுச்சேரி முகவரி அளித்து ரூ. 55 ஆயிரம் மட்டும் வரியாகச் செலுத்தி காரைப் பயன்படுத்தி வருகிறார். இதையடுத்து எர்ணாகுளம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

கேரளாவில் மட்டுமல்ல புதுச்சேரியிலும் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போலி முகவரியில் நடிகை அமலா பால் கார் வாங்கியது குறித்து 15 நாள்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துச் செயலாளருக்கு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.

அமலா பாலுக்கு மட்டுமல்லாமல் கொடுவல்லி நகராட்சி கவுன்சிலர் காரத் ஃபைசலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஃபைசலும் தன்னுடைய காரை புதுச்சேரியில் பதிவு செய்து ரூ. 10 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளார். அமலா பால் ரூ. 20 லட்சமும் ஃபைசல் ரூ. 10 லட்சமும் வரி ஏய்ப்பு செய்துள்ளதால் ஏழு நாள்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் போக்குவரத்துத்துறை அலுவலகத்துக்கு வருமாறு இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலும் சாலை வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்ஸ் ஈ காரை வாங்கிய ஃபகத், புதுச்சேரியில் பதிவு செய்ததால் ரூ. 14 லட்சம் வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளது. ரூ. 14 லட்சத்துக்குப் பதிலாக ரூ. 1.5 லட்சம் மட்டுமே சாலை வரியாக அளித்துள்ளார். ஃபகத் ஃபாசில் அளித்துள்ள புதுச்சேரி முகவரியும் போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள ஊடகம் ஒன்று இதுகுறித்த செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள அரசின் விதிமுறைப்படி, மற்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனம், கேரளாவில் ஒருவருடம் பயன்படுத்தப்பட்டால், மீண்டும் கேரளாவில் பதிவு செய்து, அதன் விலையில் 20 சதவிகிதம் சாலை வரியாக அளிக்கப்பட வேண்டும். மேலும் போலி முகவரியை அளித்து பதிவு செய்திருந்தால் ஏழு வருடங்கள் வரை சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும். ஆனால் அமலா பால், ஃபகத் ஃபாசில், ஃபைசல் ஆகியோர் இந்த விதிமுறையை மீறியுள்ளதால் சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

போக்குவரத்துத்துறை ஆணையர் அனில் கந்த் இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது: பிரபலங்கள் வாங்கிய அனைத்து கார்களையும் சோதனைக்கு உட்படுத்துகிறோம். இதுகுறித்த விசாரணையை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டோம். வரி ஏய்ப்பு செய்துள்ள எல்லா பிரபலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். இவர்கள் இதுபோல செய்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com