ஃபெப்சி வேலை நிறுத்தம் தொடங்கியது: காலா உள்ளிட்ட 30 படங்களின் படப்பிடிப்புகள் பாதிப்பு!

தயாரிப்பாளர் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று முதல் ஃபெப்சி அமைப்பு மீண்டும் வேலை நிறுத்தத்தை..
ஃபெப்சி வேலை நிறுத்தம் தொடங்கியது: காலா உள்ளிட்ட 30 படங்களின் படப்பிடிப்புகள் பாதிப்பு!

தயாரிப்பாளர் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று முதல் ஃபெப்சி அமைப்பு மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் உருவாகிவரும் காலா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஃபெப்சி அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் பல நிபந்தனைகளை விதித்திருந்ததால், அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஃபெப்சி அமைப்பு பெரும் பங்கு வகித்து வருகிறது. உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்ததில் இந்தத் தொழிலாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. 

சலுகைகளைப் பெறுவதில் தயாரிப்பாளர் சங்கத்துடன் பல சச்சரவுகள் இருந்தாலும், எங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்து தமிழ் சினிமா பயணத்துக்கு உதவியிருக்கிறோம். தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை உணர்ந்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைகூட விட்டுக் கொடுத்து வந்திருக்கிறோம். 

இந்நிலையில், எங்களது அமைப்பின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக புதிய அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ளது. இன்னொரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது. இது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை நடந்த போராட்டம் எங்களது உரிமைக்கான போராட்டமாக இருந்தது. இனி அடிப்படை வாழ்க்கைக்காக போராட வேண்டியுள்ளது. ஃபெப்சி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலைமைக்கு காரணம், தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிவிப்புதான். இதை உடனே வாபஸ் வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இதைக் கண்டிக்கும் விதமாக வரும் 5 -ஆம் தேதி கண்டன ஆர்பார்ட்டமும் நடைபெறவுள்ளது என்றார். 

இந்நிலையில் திட்டமிட்டபடி, ஃபெப்சி அமைப்பின் வேலை நிறுத்தம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் காலா உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com