கடைசி நேரச் சிக்கல்களுக்குப் பிறகு 'புரியாத புதிர்' வெளியானது! விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி!

மதியக் காட்சி முதல் புரியாத புதிர் படம் தமிழகம் முழுக்க வெளியாகியுள்ளது..
கடைசி நேரச் சிக்கல்களுக்குப் பிறகு 'புரியாத புதிர்' வெளியானது! விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி!

விஜய் சேதுபதி நடித்து இன்று வெளியாகவிருந்த 'புரியாத புதிர்' படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் படப்பிரச்னைகள் இன்றும் தொடர்ந்ததால் காலைக் காட்சிகள் ரத்தாயின. இதன்பிறகு மதியக் காட்சி முதல் புரியாத புதிர் படம் தமிழகம் முழுக்க வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (பெஃப்சி) பொதுச் செயலர் அங்கமுத்து சண்முகம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள 'புரியாத புதிர்' படம் வெள்ளிக்கிழமை (செப்.1) வெளியாக உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றியுள்ளனர். இந்த படத்தில் பணியாற்றிய பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான சம்பளத் தொகையான ரூ. 22 லட்சத்து 13 ஆயிரத்து 51 வழங்கப்படவில்லை. இந்த தொகையை வழங்காமல், இந்தப் படத்தை செப். 1 ஆம் தேதி திரையிடுவதற்கு ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் உரிமையாளர் ஜெ.சதீஷ்குமார் திட்டமிட்டுள்ளார். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைக் கருத்தில் கொண்டு இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, 'புரியாத புதிர்' படத்தை வரும் 14ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும், எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இரவோடு இரவாக இப்பிரச்னை குறித்து இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து புரியாத புதிர் படம் இன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியிட்டார்கள்.

இந்நிலையில் படப்பிரச்னைகள் இன்றும் முழுமையாகத் தீர்க்கப்படாததால் கேடிஎம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 12 மணிக் காட்சிகள் ரத்தாயின. இதனால் முதல் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். 

இதன்பிறகு சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்பட்டன. கேடிஎம் வழங்குவதில் இருந்த பிரச்னைகளும் முழுவதுமாக நீங்கின. இதனால் மதியக் காட்சி முதல் புரியாத புதிர் படம் தமிழகம் முழுக்க வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com