மாணவி அனிதா தற்கொலை: திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்!

கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலையா? விமானஓட்டி கனவு நிறைவேறாதவர்தான் கலாம்....
மாணவி அனிதா தற்கொலை: திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்!

மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் மாணவி அனிதா (17) அரியலூர் அருகே நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திரையுலகினர் பலரும் அனிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா. இவருக்கு 4 அண்ணன்கள் உள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே என கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்த அனிதா, வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற செந்துறை போலீஸார் அனிதாவின் சடலத்தைப் பிரேதபரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாணவி அனிதாவின் மறைவுக்கு திரையுலகினர் சமூகவலைத்தளங்கள் வழியாகவும் பேட்டிகள், அறிக்கைகள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். அதன் தொகுப்பு:

ரஜினி

மாணவி அனிதாவின் முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது. விபரீத முடிவை எடுக்கும் முன்பு அனிதா என்னவெல்லாம் நினைத்தாரோ? அனிதாவின் குடும்பத்துக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கமல்

அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராகப் போராட வேண்டியவர்கள் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் அனைவரும் சோர்வடையக் கூடாது. இது போன்ற துயரம் இனியும் நடக்கக் கூடாது. தமிழகத்தின் நலன் காக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனிதா தற்கொலை செய்து கொண்டதால் நல்ல மருத்துவரை இழந்து விட்டோம்.

கவிஞர் வைரமுத்து

'அடி பாவி மகளே' என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இந்தத் தற்கொலைக்கு ஒட்டுமொத்த நிகழ்காலமும் பொறுப்பேற்க வேண்டும். மரணம் மூன்று வகை. இயல்பான மரணம் - அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு; இன்னொன்று கொலை - அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு; 3-ஆவது தற்கொலை-அது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு. அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது?, தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது. தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு.

சிவகார்த்திகேயன்

இந்த தேசம் 'தகுதி'யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது. என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி.

இயக்குநர் பா. இரஞ்சித்

ஒரு தலைமுறையின் பெருங்கனவை சிதைத்த சமுக நீதியற்ற இந்த தேசத்தில் உன் கடைசி நிமிட வலி பரவட்டும் நாடெங்கும்.

ஜி.வி. பிரகாஷ்

கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவக் கனவோடு பிறந்த அனிதா - இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும் சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை. 

இயக்குநர் சேரன்

பிரதமருக்கும் முதல்வர்களுக்கும்  தெரியுமா, ஒவ்வொரு மாணவனின் கனவும் இவ்வளவு ஆசைகளையும் எதிர்பார்ப்பையும் கொண்டது என... எம் முன்னோர்கள் அகத்தியர் தொடங்கி பலரும் இயற்கை மருத்துவம் மூலம் எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டார்கள்... எந்த நீட் தேர்வு எழுதினார்கள்? இரண்டுமாத பயிற்சியே மருத்துவ படிப்புக்கு தகுதி எனில் பன்னிரண்டு வருட பள்ளிப்படிப்பு எதற்கு? நீட் தகுதி அறியவா தட்டிக்கழிக்கவா? சூழ்ச்சி உள்ளது. நீட் தேர்வு எழுதியவர்களே தகுதியெனில் ஏற்கனவே இருக்கும் மருத்துவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்? எம்எல்ஏ-க்கு நிற்பவர்களுக்கும் இதுபோல தேர்வு வைக்கலாமே?

விவேக்

உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி.ஆயினும் உன் வலி புரிகிறது.எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்? இதற்கு மேல் என்ன படிக்க? ஒரு அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது. அனிதாவின் அவசரம் பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல. கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலையா? விமானஓட்டி கனவு நிறைவேறாதவர்தான் கலாம்.

இயக்குநர் விக்னேஷ் சிவன்

கனவுகள் சிதைந்துவிட்டன. எல்லாம் முடிஞ்சு போச்சு. நொறுங்கிப் போயிருக்கும் அனிதாவின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள்.  

ஆர்.ஜே. பாலாஜி

தகுதியில்லாத, ஊழல்மிக்க தலைவர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகளால் ஏழை மாணவர்கள் தங்களுடைய கனவையும் தற்போது உயிரையும் விட வேண்டியுள்ளது. 

நடிகை வரலட்சுமி

இதுபோன்ற ஒரு படிப்பு தான் நம் நாட்டுக்குத் தேவைப்படுகிறதா? அனிதா மற்றும் அவரது குடும்பத்தினரை எண்ணி மனம் வருந்துகிறேன். மாற்றங்கள் ஏற்பட இது சரியான நேரம். 

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்

முதலில் அரசியல்வியாதிகள் ஆவதற்கு ஒரு நீட் தேர்வு வையுங்கள்.தங்கள் மகளின்,சகோதரியின் படுகொலையை சட்டபூர்வமாக செய்ததற்கு மக்களின் அனுதாபங்கள்.

பாடலாசிரியர் உமாதேவி

தமிழக மாணவர்களைக் கொலைசெய்யும் வெட்கங்கெட்ட மத்திய - மாநில அரசுகளே....'நீட்'டை தடை செய்யுங்கள். 

இயக்குநர் ராம்

நீட் ஒரு அரசபயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com