போலி ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளதாக தனுஷ் மீது மீண்டும் புகார்!

நடிகர் தனுஷ் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளதால் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலூர் தம்பதியர்...
போலி ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளதாக தனுஷ் மீது மீண்டும் புகார்!

நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று மேலூர் தம்பதியர் உரிமை கோருவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்ட நிலையில் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் மேலூர் தம்பதியர் மனு அளித்துள்ளார்கள்.

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியர், திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களைப் பரிசோதனை செய்த மருத்துவர் குழு, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி பி.என்.பிரகாஷ் கடந்த ஏப்ரம் மாதம் இவ்வழக்கில் பிறப்பித்த உத்தரவு:

பதினோறாம் வகுப்பு படிக்கும் வரை தங்களுடன் இருந்த மகன் காணாமல் போனதாகவும், அவர் தான் பிறகு தனுஷ் என்ற பெயருடன் திரைப்படங்களில் நடிப்பதாகவும் மேலூர் தம்பதியர் கூறுவதை ஏற்க முடியவில்லை. இதற்கு போதுமான ஆதாரங்களையும் அவர்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை. 15.2.2002-இல் நடிகர் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், 17.6.2002-இல் கலைச்செல்வன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததாக, மேலூர் தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர். நடிகர் தனுஷ் 2002 பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன்பே திரைப்படத்துறையில் பணியாற்றுவது தெளிவாகிறது. கதிரேசன் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் 13.4.1987 பிறந்த தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை ஆவணங்களில் பிறந்த தேதி 7.11.1985 என்று உள்ளது. இதுபோன்ற கூற்றுகள் கதிரேசன் தம்பதியரின் வாதங்களை மேலும் வலுவிழக்கச் செய்கிறது. இவர்கள் தரப்பில் வழக்குத் தொடர எவ்வித முகாந்திரமும் இல்லை. 4.10.2016 அன்று கதிரேசன் தம்பதியர் தரப்பில் நடிகர் தனுஷூக்கு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கதிரேசன் தம்பதியரின் பராமரிப்புக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வீதம் கடந்த ஓராண்டிற்குச் சேர்த்து ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் தொனியில் உள்ளது. நீதிமன்றம் உத்தரவிடுவது போல வழக்குரைஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது தவறு. இதுபோன்ற பல காரணங்களால் கதிரேசன் தம்பதியர் மீது இந்த நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுகிறது. மேலும், கலைச்செல்வன் தான் தனுஷ் என்பதை நிரூபிக்க மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் தம்பதியர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடுவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்கிலும் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது. 2002-2003 இடைப்பட்ட காலங்களில் காணாமல் போன தங்களது மகன் கலைச்செல்வன் தான் தனுஷ் என்பதை நிரூபிக்க கதிரேசன் தம்பதியரிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. முகாந்திரம் இல்லாத ஒரு வழக்கில் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது. கதிரேசன் தம்பதியர் தரப்பில் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும் பரிசீலித்தபோது கதிரேசன் தம்பதியரின் கோரிக்கையில் முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. இதனால், இந்த வழக்கை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு திருப்பி அனுப்ப முடியாது. கதிரேசன் தம்பதியரின் மகன் உண்மையில் காணாமல் போய் இருக்கலாம் ஆனால், அவர் தான் தனுஷ் என்று கூற முடியாது. எனவே கதிரேசன் தம்பதியரின் வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் தனுஷின் மனு ஏற்கப்படுகிறது. தனுஷிற்கு எதிராக மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கதிரேசன் தம்பதியர் தொடர்ந்துள்ள வழக்கு ரத்து செய்யப்படுகிறது. கதிரேசன் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட துணை மனுக்கள் முடிக்கப்படுகின்றன என்று உத்தரவில் குறிப்பிட்டார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் மேலூர் தம்பதியர் கூறினர். 

இந்நிலையில் நடிகர் தனுஷ் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளதால் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலூர் தம்பதியர் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் மனு அளித்துள்ளார்கள். வழக்கின்போது தனுஷ் தாக்கல் செய்த பள்ளி, சாதி சான்றிதழ் போலியானவை, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com