அரசியல் பிரவேசம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூசகமாக அறிவித்த கமல்!

அரசியல் பிரவேசம் குறித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூசகமாக அறிவித்துள்ளார் கமல்.
அரசியல் பிரவேசம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூசகமாக அறிவித்த கமல்!

அரசியல் பிரவேசம் குறித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூசகமாக அறிவித்துள்ளார் கமல்.

கடந்த வாரம் கேரளத்துக்கு வந்த கமல்ஹாசன், மாநில முதல்வர் பினராயி விஜயனை, திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். அவரை வரவேற்ற பினராயி விஜயன், ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு விருந்தளித்தார். பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தமிழக அரசியல் நிலைமை குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு கமல் அளித்த பதில்:

தமிழக அரசியலில் தொடரும் இந்த நாடகத்தை நான் காண விரும்பவில்லை. தமிழக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றோ ஆளுநரைச் சந்தித்து முறையிட வேண்டும் என்றோ நான் யாரையும் விழையவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஆளுநர் தலையிட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கமல்ஹாசன் பதிலளித்தார். அரசியலில் எந்தக் கட்சியுடன் இணைவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'திரைத் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆனால், ஒன்றை மட்டும் நிச்சயம் கூறுவேன். எனது நிறம் காவி அல்ல' என்று கமல் பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது: பெரும்பாலான இடதுசாரித் தலைவர்கள், எனது ஆதர்ச நாயகர்கள். நான் நடுநிலையோடு இருக்க விரும்புகிறேன். எந்த பக்கமும் சாயமாட்டேன். கேரளத்தை எடுத்துக் கொண்டால், மேற்கத்திய நாடுகளுக்கு இணையான தரத்தைக் கொண்டு வருவதற்காக, முதல்வர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நான் யாரையும் குருட்டுத்தனமாக பாராட்டுவதில்லை. உணர்வுப்பூர்வமாகவே பாராட்டுகிறேன் என்றார் கமல்ஹாசன். முன்னதாக, முதல்வரைச் சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: கேரளத்தில் கடந்த ஓராண்டு காலமாக நல்லாட்சி வழங்கி வரும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசைப் பாராட்டுகிறேன். இந்தச் சந்திப்பு கடந்த ஆண்டே நிகழ்ந்திருக்க வேண்டியது. ஆனால், எனக்கு விபத்து நேரிட்டதால், பினராயி விஜயனைச் சந்திக்க முடியவில்லை. என்னைப் பொருத்தவரை, இந்தப் பயணம், 'ஓர் அரசியல் கல்வி சுற்றுலா' என்றார்.  

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வரும் கமல், நடிகர் சக்தியுடனான உரையாடலின்போது, தான் அரசியலுக்குள் நுழைவதை இவ்வாறு சூசகமாக அறிவித்தார். கமல் கூறியதாவது:

இப்போது உள்ள அரசியல்வாதிகளை நக்கல் பண்ண வேண்டிய அளவுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். இனிமேல் என்னால் அரசியல்வாதிகளைக் கேலி செய்யமுடியாது (பார்வையாளர்கள் கைத்தட்டல்). யார் எப்படியிருந்தாலும் இனிமேல் நான் முகமூடி போட்டுக்கொண்டு இருக்கமாட்டேன் என்றார். இதையடுத்து அரசியல் நுழைவு குறித்து கமல் சூசகமாகக் கூறியதைக் கண்டு அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மேலும் கைத்தட்டி வரவேற்பு அளித்தார்கள்.

கடந்த ஒரு வாரமாகவே அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார் கமல். கோவை, ஈச்சனாரியில் புதன்கிழமை நடைபெற்ற தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன் அங்கு பேசியதாவது:

தமிழக அரசியலை இப்படியே விட்டு வைப்பது அவமானம். இதை மாற்ற வேண்டியது நமது கடமை. நமது பாதையில் வரும் குண்டும்குழியும், வறுமையும் நாமே வரவழைத்துக் கொண்டதுதான். நான் கோபப்படுவது உங்களுக்காகவே என்பது புரியும். இங்கு, அரசாங்கத்தின் கஜானா எனது சொத்து. அதைத் தொடாதே என்று அரசியல்வாதிகளிடம் மக்கள் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கஜானாவில் இருந்து எனக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்று பங்கு கேட்டதால்தான் இன்று மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 500-க்கும், ஆயிரத்துக்கும் 5 ஆண்டுகளை விற்றுவிட்டீர்கள். உங்களது பேரப் பிள்ளைகள் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்காக களை பறிக்க வேண்டும். களை பறிக்க வேண்டியது வயலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும்தான். அதற்கான நேரம் உங்களுக்கு வந்துவிட்டது. நீங்கள் தலைவராக வாருங்கள் என்று என்னைப் பார்த்துக் கேட்கிறீர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், தலைமை ஏற்கும் தைரியம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால் அதற்கான வேலையை இந்த சுப முகூர்த்த வேளையில் தொடங்குங்கள். இது அரசியல் பேச்சு அல்ல. என் சமூகத்துக்கான பேச்சு. போராடுங்கள். உங்களது கைகள் சுத்தமாக இருக்கட்டும். அதன்பின் நீங்கள் கேட்கலாம் மற்றவர்களின் கைகள் சுத்தமாக இருக்கிறதா என்று. நாம் நமது வேலையை மட்டும் செய்வோம். நேரம் வரும்போது கோட்டையை நோக்கிப் புறப்படுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com