சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட வெளியீடு தள்ளிவைப்பு! காரணங்களை அடுக்கும் தயாரிப்பு நிறுவனம்!

வேலைக்காரன் பட வெளியீடு திடீர் என தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டுள்ள காரணங்கள்...
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட வெளியீடு தள்ளிவைப்பு! காரணங்களை அடுக்கும் தயாரிப்பு நிறுவனம்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று வெளிவருவதாக இருந்தது. செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2 ஆகிய நாள்கள் அனைத்தும் அரசு விடுமுறை தினங்கள். இதனால் தொடர்ந்து 4 தினங்கள் விடுமுறையாக உள்ளதால் இது வசூலுக்கு மிகவும் உதவும் என்று அச்சமயத்தில் வேலைக்காரன் படம் வெளிவருவதாக இருந்தது. 

சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ரெமோவும் ஆயுத பூஜை சமயத்தில் வெளியாகி வசூலை அள்ளியது. அக்டோபர் 7-ம் தேதி வெளியான அந்தப் படம் தொடர்ந்து 6 நாள்கள் சீரான வசூலை அள்ளி மகத்தான சாதனை படைத்தது. முதல் நாளிலேயே ரூ. 8 கோடி வரை வசூல் செய்தது. முதல்வார விடுமுறை தினங்களின் வசூலாக ரூ. 50 கோடியை அள்ளியது. இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டில் ரூ. 37 கோடியும் வெளிநாட்டில் ரூ. 13 கோடியும் முதல் வாரத்தில் கிடைத்தன. இப்படி, சிவகார்த்திகேயனின் படங்களில் அதிக வசூல் கண்ட படம் ரெமோதான். அதேபோன்றதொரு வசூலை அடைய வேலைக்காரன் படமும் அதே பாணியில் வெளிவர இருந்தது.

இந்நிலையில் வேலைக்காரன் பட வெளியீடு திடீர் என தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டுள்ள காரணங்கள்.

1. படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்னமும் இரு பாடல்கள் படமாக்கப்படவேண்டும்.

2. தனி ஒருவனின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மோகன் ராஜாவும் படப்பிடிப்புக் குழுவினரும் மற்றொரு சிறந்த படத்தை அளிக்க முயற்சி செய்துவருகிறார்கள். இதனால் ஒவ்வொரு அம்சத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

3. இன்றைய சூழலில் இணையம் வழியாக தணிக்கைச் சான்றிதழ் பெற எப்படியும் மூன்று நான்கு வாரங்கள் ஆகும். 

4. இதனால் முன்பு சொன்னதுபோல எங்களால் செப்டம்பர் 29 அன்று படத்தை வெளியிடமுடியவில்லை. இதற்காக மன்னிப்பு கோருகிறோம்.

5. பெரிய பட்ஜெட் படம் என்பதால் பண்டிகை சமயத்தில்தான் படத்தை வெளியிடமுடியும். அக்டோபரில் தீபாவளியன்று வெளிவர ஏற்கெனவே பல பெரிய படங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. நவம்பரில் பெரிய பண்டிகைகள் எதுவும் இல்லை. எனவே டிசம்பர் வரை பொறுத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழிகள் இல்லை. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு அதிபர்களின் வேண்டுகோளின்படி கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்களை முன்னிட்டு டிசம்பர் 22 அன்று வேலைக்காரன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். 

என்று தயாரிப்பு நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com