புல்லட்டில் சென்று மகளைப் பள்ளியில் இறக்கி விட்டதைப் பெருமையாக உணர்கிறேன்: ஜோதிகா!

‘அதன் உருவத்தையும், எடையையும் கண்டு தான் புல்லட் ஓட்டுவது கடினம் என்று நினைத்துக் கொண்டு பல பெண்கள் புல்லட் ஓட்டுவதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை.
புல்லட்டில் சென்று மகளைப் பள்ளியில் இறக்கி விட்டதைப் பெருமையாக உணர்கிறேன்: ஜோதிகா!

ஆண்கள் ஓட்டும் புல்லட் வண்டிகளைப் பொதுவாகப் பெண்கள் ஓட்டுவதில்லை. அத்திப்பூத்தார் போல எங்கோ ஓரிரு பெண்கள் புல்லட் ஓட்டிச் செல்வார்கள். சாலையில் பெண்கள் புல்லட் ஓட்டிச் செல்வதைக் கண்டால் அது , பிற ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூட அதிசயக் காட்சியாகத் தான் தோன்றும். புல்லட் விஷயத்தில் அந்த நிலை தான் இன்று வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜோதிகா, வெளிவரவிருக்கும் தனது புதிய திரைப்படமான  ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் புல்லட் ஓட்டிச் செல்வதாக சில போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இத்திரைப்படம் குறித்த பழைய செய்திகள் சிலவற்றில், வெளிவரவிருக்கும் ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில், புல்லட் ஓட்டும் காட்சிகள் இருப்பதால், ஜோதிகாவுக்கு அவரது கணவரான சூர்யா, புல்லட் ஓட்டப் பயிற்சி அளித்து வருகிறார். என நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. அது உண்மை தான். இதோ தனது புல்லட் அனுபவங்கள் குறித்து ஜோதிகா என்ன சொல்கிறார் என்று பாருங்கள்;

‘அதன் உருவத்தையும், எடையையும் கண்டு தான் புல்லட் ஓட்டுவது கடினம் என்று நினைத்துக் கொண்டு பல பெண்கள் புல்லட் ஓட்டுவதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் ஓட்டிப் பழகிய பின்பு தான் தெரிகிறது. புல்லட் ஓட்டுவது ஸ்கூட்டர் ஓட்டுவதைக் காட்டிலும் எளிதானது என்று. நான் புல்லட் ஓட்டப் பழகிய ஆரம்ப நாட்களில், காலை வேளைகளில் என் கணவர் எனக்கு கற்றுக் கொடுத்தது உண்மை தான். ஆனால் திறமையாக புல்லட் ஓட்ட , அந்த ஓரிரு நாட்கள் பயிற்சி மட்டுமே போதாதே! அதனால் நான் தனியாகப் பயிற்சியாளர் வைத்து புல்லட் ஓட்டக் கற்றுக் கொண்டேன். ஓட்டுபவர்களுக்கு வசதியாக ஸ்கூட்டரில் இல்லாத பல அம்சங்கள் புல்லட்டில் உண்டு.  படத்தில் ஊர்வசியை, பில்லியனில் ஏற்றிக் கொண்டு போக்குவரத்து மிகுந்த சாலையில் நான் புல்லட் ஓட்டிச் செல்வது போல ஒரு காட்சி உண்டு. அது நிஜமாகவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் படமாக்கப்பட்ட காட்சி தான். அதில் எந்தவிதமான கிராஃபிக்ஸும் இல்லை.

நன்றாக புல்லட் ஓட்டக் கற்றுக் கொண்ட பின், ஒரு நாள், என் மகளை புல்லட்டில் ஏற்றிச் சென்று அவளது பள்ளியில் இறக்கி விட்டேன். அப்போது என் மகள், மிகவும் சந்தோஷமாக, என்னைப் பற்றி மிகப் பெருமிதமாக உணர்வதாக என்னிடம் கூறினாள். அதை நினைத்து எனக்கும் பெருமையாக இருந்தது. அந்த உணர்வைத் தான் எல்லா அம்மாக்களும் அடைய நினைக்கிறார்கள். அதைப் பற்றிப் பேசும் படம் தான் மகளிர்மட்டும். இந்தக் கதை என்னை மட்டுமே மையப்படுத்தவில்லை. என்னோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பெண்களின் கதை இது. என்கிறார் ஜோதிகா.

உலகில் பெண்களால் ஆகாத காரியம் என்பது எதுவுமில்லை. அப்படியிருக்க புல்லட் ஓட்டுவது தானா கஷ்டம்?! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com