நிவின் பாலி நடிப்பில் தமிழில் மீண்டும் ஒரு ராபின் ஹுட் படம்

உலகப் புகழ்ப்பெற்ற எழுத்தாளர் மேத்யூ லூக் எழுதிய ராபின் ஹுட் கதையை சிறுவயதில் படித்திருப்போம்.
நிவின் பாலி நடிப்பில் தமிழில் மீண்டும் ஒரு ராபின் ஹுட் படம்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மேத்யூ லூக் எழுதிய ராபின் ஹுட் கதையை சிறுவயதில் படித்திருப்போம். பணக்காரர்களிடமிருந்து திருடி அதை எழைகளுக்கு பங்கிட்டு கொடுப்பவன் ராபின் ஹுட். திருடனாக இருந்தாலும் அவனுடைய சமத்துவ குணத்துக்காக ஹீரோவாக போற்றப்பட்டவன். ராபின் ஹுட் நிஜமாக வாழ்ந்த மனிதனா அல்லது எழுத்தாளரின் கற்பனையில் பிறந்தவனா என்ற சர்ச்சை உலகளவில் இன்றும் உண்டு. அவன் உண்மை மனிதன் என்று ஒரு பிரிவினரும், கற்பனைக் கதாபாத்திரம்தான் என்று மற்றொரு பிரிவினரும் வாதிட்டு வருகின்றனர். இரு பிரிவினருமே தத்தம் கூற்றுக்கு ஆதாரமாகப் பல விஷயங்களை கூறுகின்றனர். இரு விதமான கருத்துகளுமே முரண்பட்டு இருப்பதுதான் புதிரானது.

ராபின் உண்மையில் இருந்தானா இல்லையா என்பதை விட அவன் கதையிலும் சினிமாக்களிலும் சிரஞ்சீவியாக எல்லா காலகட்டத்திலும் வாழ்ந்து வருகிறான் என்பது தான் உண்மை. ஆம் ராபின் ஹுட்டின் கதையை உலக சினிமாக்களில் வெவ்வேறு வடிவில் பயன்படுத்திவிட்டாலும் ராபின் இன்றளவும் அவர்களுக்கு சலிக்கவில்லை. போலவே ராபின் ஹுட் வாழ்க்கையை அடியொற்றி வாழ்ந்து மறைந்த திருடர்களும் உலகெங்கும் உண்டு.

19-ம் நூற்றாண்டில் கேரளத்தில் காயம்குளம் என்ற ஊரில் வாழ்ந்த கொச்சுண்ணி அப்படிப்பட்டவன். பணம் படைத்தவர்களிடமிருந்து பொன்னும் பொருளும் திருடி அதை ஏழை எளியவர்களுக்கு வழங்கிவிடுவதை வழக்கமாகக் கொண்டவன். சிறு வயது முதல் அவனை வாட்டி வதைத்த வறுமையை எதிர்க்கவே திருடத் துணிந்தவன் கொச்சுண்ணி. எளியோருக்கு நாயகனாகவும் கெடுமதி படைத்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் வாழ்ந்து வந்த அவன் 1859-ம் ஆண்டு போலீஸில் சிக்கிக் கொள்கிறான். அதன் பின் அங்கு பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கே இறந்துவிடுகிறான்.

கொச்சுண்ணியின் சாகஸ வாழ்க்கையை ஏற்கனவே 1966 திரைப்படமாக எடுத்தார்கள். சமீபத்தில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என்ற பெயரில் இக்கதையை திரைப்படமாக்க முடிவு செய்தனர். பாபி மற்றும் சஞ்சய் இப்படத்தின் திரைக்கதையை எழுத, 'மும்பை போலீஸ்’ புகழ் ரோஷன் ஆண்ட்ரூஸ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை அமலாபால் நாயகியாக நடிக்கிறார். நிவின் பாலியும் அமலாபாலும் இணைந்து நடிப்பது இது இரண்டாவது முறையாகும். இருவரும் ஏற்கெனவே 2015-ல் வெளியான 'மிலி' படத்திலும் நடித்திருந்தனர். படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ஒளிப்பதிவு பினோத் பிரதான் மேற்கொள்கின்றனர். இப்படத்தில் சரத் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை மலையாளம் மற்றும் தமிழில் இயக்க முடிவு செய்துள்ளார் ரோஷன். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சண்டைக் காட்சிகளுக்காக ஆப்பிரிகாவிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைக்க உள்ளனர் படக்குழுவினர். மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக நிவின் பாலி சிறப்பு பயிற்சியாக களறி கற்றுக் கொண்டு வருகிறார்.

பலத்த எதிர்பார்ப்பை இப்போதே உருவாக்கியிருக்கும் காயம்குளம் கொச்சுண்ணி படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும். அதன் பின் 2018-ம் ஆண்டு துவக்கத்தில் காயம்குளம் பகுதியைப் போன்ற நிலப்பரப்பு உள்ள இலங்கையில் சில பகுதிகளில் முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு தொடரும் என்று கூறினார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com