நடிகை காவ்யா மாதவன் முன் ஜாமீன் கோரி மனு!

கேரள நடிகை காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...
நடிகை காவ்யா மாதவன் முன் ஜாமீன் கோரி மனு!

கேரள நடிகை காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், முன் ஜாமீன் கோரி நடிகை காவ்யா மாதவன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கேரள நடிகை, கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்பட்டார். அவர்களால் காரிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, அவரை சாலையில் இறக்கிவிட்டுவிட்டு காரில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக நடிகை, காவல் துறையிடம் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் பல்சர் சுனில், பிரபல நடிகர் திலீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். திலீப்பின் உத்தரவின்பேரிலேயே இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியிருப்பதாக குற்றம்சாட்டிய போலீஸார், அவர் மீது கடத்தல் சதி, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும் நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பின் மனைவியும், மலையாள நடிகையுமான காவ்யா மாதவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 

இந்த வழக்கில் முதன்முதலாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் சிறையில் இருந்தபோது நடிகர் திலீப்புக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும், அந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே போலீஸார் தமது விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில், நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட விடியோ காட்சிகள் அடங்கிய செல்லிடப்பேசி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சுனில் குறிப்பிட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த நபரின் பெயரை போலீஸார் வெளியிட மறுத்து வருகின்றனர். எனினும், அந்த நபர் நடிகர் திலீப்புக்கு மிகவும் நெருக்கமானவர் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், நடிகர் திலீப்பின் மனைவியான காவ்யா மாதவனிடம் இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் ஜூலை மாத இறுதியில் விசாரணை நடத்தினர். கொச்சியில் உள்ள நடிகை காவ்யா மாதவன் இல்லத்தில் வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் முன் ஜாமீன் கோரி நடிகை காவ்யா மாதவன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com