இன்று ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ இறுதிப் போட்டி: சிநேகன் வெல்வாரா?

இன்று ஒளிபரப்பாகிற இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ளார்...
இன்று ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ இறுதிப் போட்டி: சிநேகன் வெல்வாரா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ஒளிபரப்பாகிற இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ளார்.

கடைசி வாரப் போட்டியாளர்களாக கவிஞர் சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், பிந்து மாதவி, ஹரிஷ் ஆகிய ஐந்து பேரும் பங்கேற்றார்கள். இவர்களில் பிந்து மாதவி இந்த வார நடுவில் வெளியேற்றப்பட்டார். மீதமுள்ள சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிடுகிறார்கள். இவர்களில் இருந்து ஒருவர் வெற்றியாளராக இன்று அறிவிக்கப்படுகிறார். 

ரசிகர்கள் அளித்துள்ள வாக்குகள் மூலமாக வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்றிரவு 8.30 மணிக்கு இறுதிப்போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை சிநேகன் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உண்டாகியுள்ளது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன் ஆகிய இருவருக்குமிடையே கடுமையான போட்டி நடக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையை இருவரில் ஒருவருக்குக் கிடைக்கவே அதிக வாய்ப்புண்டு. ஆரவுக்கு ரசிகைகள் அதிகம் உள்ளதால் அவரும் கடுமையான போட்டியை உருவாக்கக்கூடும். நிகழ்ச்சியின் பாதியில் நுழைந்த ஹரிஷ், எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதும் இன்று தெரிந்துவிடும். 

இறுதிச்சுற்று பிரமாண்டமான முறையில் நடைபெறும் என கமல் அறிவித்துள்ளார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளார்கள். வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சியில் பங்குபெற சம்மதிக்காத நடிகை ஓவியா, இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றது. ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை நடிகர் சிவ பாலாஜி வென்று ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையை வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com