மரியாதையைக் கேட்டுப் பெறக்கூடாது: டி.ஆர். - தன்ஷிகா விவகாரம் தொடர்பாக குஷ்பு பதில்!

ஒருவர் மரியாதைத் தானாகப் பெறவேண்டும். கேட்டுப் பெறக்கூடாது என்று டி.ஆர். - தன்ஷிகா விவகாரத்தில் நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார்... 
மரியாதையைக் கேட்டுப் பெறக்கூடாது: டி.ஆர். - தன்ஷிகா விவகாரம் தொடர்பாக குஷ்பு பதில்!

ஒருவர் மரியாதைத் தானாகப் பெறவேண்டும். கேட்டுப் பெறக்கூடாது என்று டி.ஆர். - தன்ஷிகா விவகாரத்தில் நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார்.

எழுத்தாளர் மீரா கதிராவன் இயக்கும் ‘விழித்திரு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் டி.ராஜேந்தர், தன்ஷிகாவும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தன்ஷிகா டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இதையடுத்து பேச வந்த டி.ராஜேந்தர் தன்னுடைய அடுக்கு மொழியில் சபை நாகரீகம் தெரியவில்லை என நடிகை தன்ஷிகா குறித்து பேச மேடையிலேயே தன்ஷிகா சிறிது நேரம் கண் கலங்கினார். இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகிலும் சமூகவலைத்தளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தன்ஷிகாவைக் கண்டித்து பேசிய டி.ராஜேந்தருக்கு விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேடையில் பேசும் போது ஒருவரின் பெயரை மறப்பது இயல்பான விஷயம், தன்ஷிகா டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்ததில் எந்த உள் நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை, தன்ஷிகா மன்னிப்பு கேட்ட பிறகும் டி.ராஜேந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தன்ஷிகாவைத் தொடர்ந்து கண்டித்ததை டி.ராஜேந்தர் தவிர்த்திருக்கலாம் என நடிகர் விஷால் கூறினார்.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்று சம்பவத்தின்போது மேடையில் இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பதாவது: எந்த ஒரு சமயத்திலும் பெரியவர்களுக்கு மரியாதை அளிக்கவேண்டும் என்று சொல்லித்தான் நான் வளர்க்கப்பட்டுள்ளேன். அங்கிள் டி.ஆர். தனது எண்ணங்களை விழித்திரு விழாவில் சொல்லியுள்ளார். ஆரம்பத்தில் இதை ஒரு கேலியாகவே எண்ணினோம். ஆனால், அதன்பிறகு மிகவும் தீவிரமாகிவிட்டது. அப்போது என்ன செய்வதென்று எனக்கும் தெரியவில்லை. திரைத்துறையில் புதிதாக நுழைந்துள்ள தன்ஷிகா, பொது மேடைகளில் பேசிப் பழக்கம் இல்லாதவர். இந்த விஷயத்தில் நம்மைப் போன்ற மூத்தவர்கள் அவருக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். வழிகாட்டுதல் என்பது கடவுளின் பணியாகும். யாரும் கடுமையாக விமரிசிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்தவர்களைக் காயப்படுத்துதல் மூலம் நான் எதையும் பெறப்போவதில்லை. மிகவும் மரியாதையுடனே நான் இதைச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

வெங்கட் பிரபுவின் இந்தப் பதிலை முன்வைத்து ஆங்கில ஊடகவியலாளர் ஷபிர் அஹமது, ட்விட்டர் தளத்தில், வெங்கட் பிரபுவின் இந்த விளக்கத்தை ஒப்புக்கொள்வீர்களா என்று குஷ்பு உள்ளிட்ட சில நடிகைகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த குஷ்பு, இதில் விளக்கம் சொல்ல எதுவுமில்லை. ஒருவர் மரியாதையைத் தானாகப் பெற வேண்டும். கேட்டுப் பெறக்கூடாது. மனிதன் தவறு செய்வது இயல்பு. ஒரு அவமானத்தைக் கையாளவும் பண்பு அவசியம். அதை அவர் (தன்ஷிகா) நன்றாகவே செய்திருந்தார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com