திரைத் துறையினரின் வேலை நிறுத்தத்தால் ரசிகர்களுக்கு இது ஓய்வுக் காலம்!

திரைப்பட தயாரிப்பாளர்களின் ஸ்ட்ரைக் இன்னும் முடிவடையாத நிலையில் எந்தவொரு புதுப்படமும்
திரைத் துறையினரின் வேலை நிறுத்தத்தால் ரசிகர்களுக்கு இது ஓய்வுக் காலம்!

திரைப்பட தயாரிப்பாளர்களின் ஸ்ட்ரைக் இன்னும் முடிவடையாத நிலையில் எந்தவொரு புதுப்படமும் வெளிவராத காரணத்தால், சினிமா ரசிகர்களும் ஆர்வலர்களும், சினிமா விமர்சனங்களும் கடும் வறட்சியில் உள்ளனர். நிகழில் எத்தனையோ பிரச்னைகளும், அரசியல் நெருக்கடிகள் இருந்து வந்தாலும் ஒரு சாதாரண ரசிகனின் கடுமையான வாழ்நிலை சூழலுக்கு அருமருந்தாக விளங்கிக் கொண்டிருப்பது சினிமா தான். ஆனால் தற்போது திரை அரங்குகளில் புதிய படங்கள் வெளியிடப்படாமல் கோடம்பாக்கமே முடங்கி உள்ளது. 

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக, கடந்த 1 - ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடக் கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தத்தின்படி, கடந்த மார்ச் 1 -ம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது.  மேலும்  கடந்த மாதம் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. 

பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கான மக்கள் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளையும் எப்படி மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும், அதற்கு என்ன விலை வைக்க வேண்டும், எந்தெந்த விதத்தில் அதை மக்கள் பயன்படுத்துமாறு ஆர்வத்தை, ஈர்ப்பை உண்டாக்க வேண்டும் போன்ற நடைமுறைகளை அப்பொருளின் உற்பத்தியாளரோ, நிறுவனமோதான் நிர்ணயம் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை. அதன் முழு உரிமை அந்த உற்பத்தியாளருக்கே உண்டு. ஆனால் இந்தத் திரையுலகில் மட்டும் இது ஏன் நடைமுறையில் இல்லை. சினிமா தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை கிடைக்கப் பெறவில்லை. படத்தின் தயாரிப்பாளருக்கே அனைத்து உரிமைகளும் இருக்கவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று தயாரிப்பாளர்கள் போராடி வருகிறார்கள்.

ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் ஒரு புதுப்படம் வெளிவரும் என்று காத்திருக்கும் சில ரசிகர்களுக்கு இந்த வேலை நிறுத்தம் மன வருத்தத்தை அளிக்கிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில்தான் புதிய படங்களை எதிர்ப்பார்க்கும் பழைய ரசிகர் மனம் ஏமாற்றம் அடைகிறது.

கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தொடர்ந்து வரும் வேலை நிறுத்தம் எப்போது முடிவுக்கு வரும்? புதிய தமிழ்ப் படங்கள் எப்போது வெளிவரும்? இதுகுறித்து விஷால் ஒரு பேட்டியில் கூறியதாவது:

'என்னுடைய துப்பறிவாளன் படத்துக்கு விபிஎஃப் கட்டணமாக மட்டும் ரூ. 90 லட்சம் கட்டினோம். தமிழ்நாட்டிலுள்ள 1112 திரையரங்குகளில் பெரும்பாலானவர்கள் இ சினிமா புரொஜக்டர்களைத்தான் வைத்துள்ளார்கள். மல்டிபிளெக்ஸ் உள்ளிட்ட சில திரையரங்குகள் டி சினிமா புரொஜக்டர்கள் வைத்துள்ளார்கள். நாங்கள் மாஸ்டரிங் கட்டணம் மட்டுமே வழங்கவேண்டும். புரொஜக்டர்கள் அவர்களுக்குச் சொந்தமானது என்பதால் அவர்கள்தான் விபிஎஃப் கட்டணத்தை அளிக்கவேண்டும். 12 வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் தான் விபிஎஃப் கட்டணத்தை அளிக்கவேண்டுமா?

டிஜிட்டல் சேவை வழங்குநர்கள், அடுத்த ஒருவருடம் இ-சினிமாக்களுக்கு விபிஎஃப் கட்டணம் வசூலிக்கக்கூடாது. ஏப்ரல் 2019 வரை அவர்களுக்குக் கால அவகாசம் அளித்துள்ளோம். டி சினிமாக்களுக்கு ஏப்ரல் 2020 வரை கால அவகாசம். டிஜிட்டல் சேவை வழங்குநர்கள், அவர்களுடைய வணிக முறையை மாற்றம் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் அது தமிழ்த் திரையுலகுக்கு உதவியாக இருக்கும். அதுவரை விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்களும் திரையரங்கு அதிபர்களும் சரிபாதியாகப் பகிர்ந்து கொள்வோம். டிக்கெட் விற்பனையை முழுவதும் கணிணி மயமாக்க வேண்டும். இதற்குத் திரையரங்குகள்ஒப்புக்கொண்டுள்ளன. ஜூன் 1-க்குள் இதைச் செய்து முடிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி அனைத்து விஷயங்களிலும் மாற்றம் வரும் வரை வேலை நிறுத்தம் தொடரும். எனினும் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதால் விரைவில் நல்ல முடிவு வெளியாகும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

காட்சி ஊடகப் பொழுதுபோக்கில் சினிமா மிகவும் முக்கிய இடத்தில் உள்ளது. மேற்சொன்ன காரணங்களால் புதுப்படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் சில பழைய படங்களை திரை அரங்குகளில் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பார்த்த படமாக இருந்தாலும் அவற்றை மீண்டும் பார்க்க சிறு கூட்டம் இருக்கவே செய்கின்றது. இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்பட்டு படங்கள் வெளியானால்தான் ரசிகர்கள் மகிழ்வார்கள் என்பது மறுக்க முடியாது உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com