'அப்டி ஒரு ஐஸ்க்ரீம வாழ்க்கைல நான் சாப்ட்டதே இல்ல!' சொல்கிறார் நடிகை மேகா ஆகாஷ்!

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படமான எனை நோக்கி பாயும் தோட்டாவில் கதாநாயகியாக நடித்துள்ளார் மேகா ஆகாஷ். 
'அப்டி ஒரு ஐஸ்க்ரீம வாழ்க்கைல நான் சாப்ட்டதே இல்ல!' சொல்கிறார் நடிகை மேகா ஆகாஷ்!

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படமான எனை நோக்கி பாயும் தோட்டாவில் கதாநாயகியாக நடித்துள்ளார் மேகா ஆகாஷ். 

இப்படத்தின் படப்பிடிப்புக்காக துருக்கி சென்ற அனுபவத்தை மறக்க முடியாத ஒன்று என அண்மையில் தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் மேகா. மேகாவுக்கு பயணம் செய்வது மிகவும் பிடித்த விஷயம். எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பிற்காக துருக்கி சென்ற நாட்களை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வரும் என்கிறார். மூன்றே நாட்கள் தான் அங்கு தங்கி இருந்தாலும் அந்த நாட்களை மறக்கவே முடியாது என்று கூறினார். இயக்குநர் கெளதம் மேனனுக்குத்தான் அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார் மேகா.

இதற்கு முன்னால் இந்தியாவில் படப்பிடிப்பு நடந்த போது அதுவும் குறிப்பாக கேரள எல்லைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த சமயங்களில் கெளதம் மேனன் அந்த பிராந்தியத்தில் கிடைக்கும் சிறப்பு உணவுகளை வரவழைத்து தந்தாராம். கேரளாவில் நேந்திர வறுவல்களை வரவழைத்ததிலிருந்து மும்பைக் கடலோரப் பகுதியில் படப்பிடிப்பு நடக்கையில், கபாப் வகை உணவு வரை அந்தந்த பிராந்தியத்தில் கிடைத்த உணவுகளை அனைவருக்குமே வரவழைத்துத் தந்திருக்கிறார் கெளதம் மேனன். அவரைப் போலவே உணவுப் பிரியையான மேகாவுக்கும் இவை மறக்க முடியாத அனுபவமாகியது.

'ஆனால் துருக்கியில் நிலமை வேறாக இருந்தது. விமானத்தை விட்டு இறங்கியதும் எனக்கு கொலைப் பசி. ஆனால் சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. வெளியே ஒரு ஹோட்டலில் சாப்பிட நினைத்த போது எல்லா உணவுகளும் மிகவும் அந்நியமாக இருந்தது. அவர்கள் பேசும் பாஷையும் புரியவில்லை. மெனு கார்டில் எழுதியிருந்தது ஒன்றுமே ஆங்கிலத்தில் இல்லை. வேறு வழியில்லாமல் புகைப்படத்தில் சற்றுத் தெளிவாகத் தெரிந்த ஒரே பதார்த்தமான ரைஸ் மற்றும் க்ரேவியை தரச் சொன்னேன். ஆனால் அதையும் வாயில் வைக்க முடியவில்லை. சுத்தமாக நன்றாக இல்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தவுடன் தான் பசி அடங்கியது’ என்றார்.

இது இங்கே முடிந்துவிடவில்லை. நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தும் இதே பிரச்னை தொடர்ந்தது. ஹோட்டல் பணியாளர்களுக்கு நான் ஆங்கிலத்தில் பேசியது புரியவில்லை. அவர்கள் பேசிய துருக்கி பாஷை எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. அந்தப் பெரிய ஹோட்டல் அறையில் ஒரு டீக்கு கூட வழியில்லை என்றால் நம்புவீர்களா? டீ தூள் நிறைய இருக்கும், ஆனால் சுடு தண்ணீர் கேட்டால் அது கூட அவர்களுக்குப் புரியவில்லை. ஒவ்வொரு தடவையும் படப்பிடிப்பு குழுவினரிடம் தான் எனக்குத் தேவையானவற்றைச் சொல்லில் வரவழைக்க வேண்டியிருந்தது. அந்த ஊர், அங்கு சுற்றிப் பார்த்த சில இடங்கள் எல்லாமே மிகவும் கவர்ந்துவிட்டது ஆனால் பாஷைதான் பெரிய சிரமமாக இருந்தது.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், அதே உணவுப் பிரச்னையில் ஏற்பட்டது. இந்த முறை தனுஷுடன் சேர்ந்து நடிக்கும் போது, படப்பிடிப்பு நடக்கும் சமயத்தில். ஒரு காட்சியில் நாங்கள் கடைத்தெருவில் பேசிக் கொண்டே நடந்து போக வேண்டும். தூரத்தில் கேமரா எங்களை ஷுட் செய்து கொண்டிருந்தது. வழியில் ஒரு கடையில் ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட்டபடி நடக்கலாம் என்று நினைத்த தனுஷ் சட்டென்று இரண்டு ஐஸ்க்ரீம்களை வாங்கிவிட்டார். என் கையில் ஒன்றை தந்தார். அது பச்சைக் கலரில் வித்யாசமாக இருந்தது. சரி ஐஸ்க்ரீம் தானே எந்த கலரில் இருந்தாலும் சுவை தான் முக்கியம் என்று சாப்பிட ஆரம்பித்தேன். ஆனால் ஒரு வாய்க்கு மேலே அதை சாப்பிடவே முடியவில்லை. தனுஷ் என்னடாவென்றால் எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் அந்த ஐஸ்க்ரீமை ருசித்துக் கொண்டிருந்தார்.

நானும் வேறு வழியில்லாமல் செமயாக நடித்து முடித்தேன். டைரக்டர் கட் சொன்னதும் நாங்கள் இருவரும் சேர்ந்து தூ என்றோம். அந்தளவுக்கு இப்போது நினைத்தாலும் அந்த ஐஸ்க்ரீமின் சுவை கேவலமாக இருந்தது. அது போன்ற ஒன்றை இதுவரைக்கும் நான் சாப்பிட்டதே இல்லை. உடனே கடைக்குச் சென்று வேறு ப்ளேவரில் ஒரு ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட்ட பின் தான், அந்த பச்சை ஐஸின் டேஸ்ட் மாறியது’ என்று துருக்கி அனுபவங்களை ஐஸ்க்ரீம் போல சுவையாகச் சொல்லி முடித்தார் மேகா ஆகாஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com